Published : 22 Apr 2019 11:42 AM
Last Updated : 22 Apr 2019 11:42 AM

அலசல்: தகரும் நம்பிக்கை!

ஆண்டுதோறும் போலி நிதித் திட்டங்களில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலீடுகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியின் அளவு குறைந்து வருவதும் இதுபோன்ற திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வது முக்கியக் காரணமாகும்.

ஓரளவுக்கு இப்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்கும், மோசடி திட்டங்களுக்கும் மாற்றாக பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அதற்குள்ளேயே பரஸ்பர நிதித் திட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையையும் சந்தேகிக்கும்படியான செய்திகள் வெளியாகி பேரிடியாக விழுந்துள்ளன.

கடந்த வாரம் பரஸ்பர நிதித் திட்டங்களை நிர்வகிக்கும் இரண்டு பிரபல நிறுவனங்கள், தங்களது முதலீட்டாளர்களுக்கு முதிர்வுக் காலத்தில் பணத்தை திருப்பித் தர இயலாத நிலையை அறிவித்தன. கோடக் பரஸ்பர நிதி மற்றும் ஹெச்டிஎப்சி பரஸ்பர நிதி நிறுவனங்கள் இரண்டும் தங்களிடம் முதலீடு செய்த நிரந்தர முதிர்வு திட்டங்களுக்கான (எப்எம்பி) முதிர்வு தொகையை அளிக்க போதிய நிதி இல்லை என்று குறிப்பிட்டன.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் மற்றும் எஸ்ஸெல்  குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் தங்களது நிதிதொகை முற்றிலுமாக இதில் முடங்கிவிட்டதாக இந்நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித் தரும்போது தாங்களும் முதலீட்டாளர்களுக்கு சேமிப்பு தொகையை திரும்ப அளிப்பதாக கூறியுள்ளன.

ஹெச்டிஎப்சி நிறுவனம் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கோடக் நிறுவனம் அசலை மட்டும்அளித்துவிட்டு வட்டியை பிறகு தருவதாகத் தெரிவித்துள்ளது.  கடந்த ஜனவரி மாதம் சில நிதி நிறுவனங்கள் எஸ்ஸெல் குழும நிறுவனர்களுக்கு பங்குகளை அடமானமாகப் பெற்றுகடன் வழங்கின.

ஆனால் உரிய காலத்தில் அவற்றுக்குரிய பணம் கிடைக்காததால் நிதி நிறுவனங்களின் முதலீடுகள் முடங்கின. இதுதான் நிரந்தர முதலீட்டு திட்ட முதலீட்டாளர்களின் பணம் முடங்கியதற்கு ஆரம்பமாக அமைந்தது.இதில் வினோதமான விஷயம் என்னவெனில் மொத்தம் 6 நிதி நிறுவனங்கள்  எஸ்ஸெல் குழுமம் அல்லதுஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதுதெரியவந்துள்ளது. இந்த 6 நிறுவனங்கள் 56 நிதித் திட்டங்களை நிர்வகிக்கின்றன.

ஆக எப்எம்பி முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பிற நிதித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் பணமும் அந்தந்த முதிர்வுக் காலத்தின் போது கிடைப்பது கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது. பரஸ்பர நிதித் திட்ட விளம்பரங்கள் வெளியாகும்போது, வேகமான வாசகம் ஒன்று கேட்கும். அதாவது பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் சந்தை அபாயத்துக் குரியவை.

இதனால் இதில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு முதலீட்டாளரே பொறுப்பு என்பதாக பொறுப்பு துறப்பு வாசகம் வெளியாகும். அந்த வகையில் எப்எம்பி முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு கிடைக்காதது குறித்து எங்குமே புகார் தெரிவிக்க முடியாது. சட்ட ரீதியாகவும் தீர்வு காண முடியாது. கடந்த ஜனவரி மாதத்திலேயே தங்களது முதலீடு முடங்கிப் போயுள்ளதாக இவ்விரு நிறுவனங்களுக்கும் தெரியும்.

இதனால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாது என்பது முன்கூட்டியே தெரிந்த நிலையில் கடைசி நிமிஷத்தில் இது குறித்த அறிவிப்பை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான காரணம்தான் புரியவில்லை.  இதே போல மற்ற நிறுவனங்களும் தங்கள் நிதி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.  தங்களது முதலீட்டாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் எந்த அளவுக்கு நிதி  நிறுவனங்கள் அக்கறை காட்டுகின்றன என்பதையே இது காட்டுகிறது.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எப்போதும் தவறு நடந்த பிறகுதான் கடுமையான விதிகளை பிறப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது எதிர்பார்க்காத வகையில் புதிது புதிதாக தவறுகள் நடக்கின்றன என்பதும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இந்த தவறுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது.

நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் நிதியை பெற்றவுடன், அந்த நிதி எந்த திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

இதன் மூலம் பெருமளவிலான நிதி ஒரே திட்டத்தில் குவிவதை தடுக்க முடியும். முதலீட்டாளர்களின் பணத்தைக் கையாள்கிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெற்று நடத்துகிறோம் என்பதை நிதி நிறுவனங்களும் ஆத்ம சுத்தியோடு உணர வேண்டும். அப்போதுதான் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக கூடுதல் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கும்.

வங்கியில் குறைந்த வட்டி, தனியார் நிதி நிறுவனங்களில் மோசடிக்குள்ளாகும் ஆபத்து, இப்போது பரவாயில்லை என கூறப்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களின் செயல்பாடும் நம்பிக்கை தரவில்லை என்றால் முதலீட்டாளர்கள் எங்குதான் போவது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x