Published : 22 Apr 2019 11:45 AM
Last Updated : 22 Apr 2019 11:45 AM

புதிய எஸ்யுவி தயாரிப்புக்கு இணையும் மஹிந்திரா, ஃபோர்டு!

புதிய ரக எஸ்யுவி உருவாக்குவதற்காக மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளது ஃபோர்டு. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து நடுத்தர ரக எஸ்யுவி மாடலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரைனை மஹிந்திரா அளிக்க உள்ளது.

இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்தால் அதுமிகவும் வலுவானதாக அமையும் என்பதை அறிந்து, அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயலாற்ற இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதன் மூலம் புதிய தயாரிப்பு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு பெருமளவு குறையும்.  இதன் பலனை இரு நிறுவனங்களும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

தற்போது மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வரும் எக்ஸ்யுவி 500 மாடல் தயாரிக்கும் பிளாட்ஃபார்மில் புதிய ரக மிட் சைஸ் மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கான இயந்திரம் உள்ளிட்ட பாகங்களை ஃபோர்டு நிறுவனம் தரும். இவ்விதம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள மாடல் அடுத்த ஆண்டு சாலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தயாரிப்பு மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

டீசல் இன்ஜின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தின் 2 லிட்டர் டீசல் இன்ஜின் இப்புதிய மாடலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதேசமயம் பாரத் – 6 புகை மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு பொருந்தும் வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்படும்.

காரின் உள்பகுதியில் தொடு திரையைப் பொருத்தமட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல மாடலை பயன்படுத்த உள்ளது.

சர்வதேச அளவில் ஃபோர்டு நிறுவனத்துக்குள்ள நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் உத்தியை மஹிந்திராவுடன் பகிர்ந்து கொள்ளும். அதேபோல இந்தியாவுக்கான விற்பனை உத்தி உள்ளிட்டவற்றை மஹிந்திரா அளிக்கும்.

நிறுவனங்கள் ஒன்று சேர்வது இப்போது ஆட்டோமொபைல் துறையில் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே சுஸுகி, டொயோடா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பரஸ்பர விற்பனையகங்களில் மாற்று நிறுவன கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

ஒன்று சேர்வதன் மூலம் வளமான எதிர்காலம் உள்ளது என்பதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x