Published : 25 Mar 2019 11:41 AM
Last Updated : 25 Mar 2019 11:41 AM

கூகுள், இனி காரின் வேகத்தையும் கட்டுப்படுத்தும்!

முன்பெல்லாம் தெரியாத ஊருக்கு காரில் சென்றால் வழியெங்கும்நிறுத்தி, நிறுத்தி விலாசத்தை கேட்டுச் செல்ல வேண்டும். இதனால் நேரமும் விரயமாகும். பல சமயங்களில் ஊரை சுற்ற வேண்டிய நிலையும் ஏற்படும்.

இப்போதெல்லாம் அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. உங்கள் மொபைலில் கூகுள் மேப் இருந்தால் போதும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, எந்த வழியாக செல்ல வேண்டும் என்ற விவரத்தை குரல் வழி தகவலாகவும், செல்ல வேண்டிய பாதை விவரத்தை வரைபடத்திலும் காட்டுகிறது கூகுள். காரில் சென்றால் எவ்வளவு நேரமாகும், பஸ்ஸில் சென்றால் அல்லது நடந்து சென்றால் எவ்வளவு நேரமாகும் என்ற விவரத்தையும் அளித்து விடுகிறது.

இப்போது காரில் செல்லும்போது வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு உள்ள விவரத்தையும் காட்டும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அத்துடன் மட்டுமின்றி வேகக் கட்டுப்பாட்டை கண்காணிக்கும் கேமிராக்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதையும் இது காட்டிவிடும்.

இதுபோன்ற வசதிகள் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷியா, பிரேஸில், மெக்ஸிகோ, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே இருந்தன. தற்போது இந்த வசதியை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது கூகுள். நெடுஞ்சாலையில் செல்லும்போது எந்த பகுதியில் ஸ்பீடு கேமிரா உள்ளதோ அதை வரைபடத்தில் உணர்த்தும்.

இதைத் தொடர்ந்து வேறு எந்தப் பகுதிகளில் ஸ்பீடு கேமிரா உள்ளது என்பதை வாகன ஓட்டிகள் உணர்ந்து கொள்ள முடியும். வரைபடத்தில் நீல நிற குறியீடாக இது ஒளிரும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் சென்று அதற்காக அபராதம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.

இப்போதைக்கு இது ஆண்ட்

ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் கேமிராக்களில் மட்டுமே கிடைக்கும். ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் கேமிராக்களில் இந்த வசதி இன்னும் கொண்டு வரவில்லை. அதேபோல சாலையில் எந்தெந்த பகுதிகளில் விபத்து நிகழ்ந்துள்ளது என்ற எச்சரிக்கை சமிக்ஞையையும் இது காட்டும்.

குறிப்பிட்ட விபத்து பகுதியைக் கடக்கும் வரை இது ஒளிரும். அத்துடன் அந்த விபத்து பகுதியைக் கடப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்ற விவரமும் இதில் தெரியவரும். இதன் மூலம் விபத்து பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனத்தை ஓட்டவும் இது உதவுகிறது.

புதிய ஊருக்கு செல்ல அந்த ஊரைப் பற்றி தெரிந்தவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கையில் ஸ்மார்ட்போனும், அதில் கூகுள் மேப்பும் இருந்தால் போதும்.!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x