Published : 18 Mar 2019 12:56 PM
Last Updated : 18 Mar 2019 12:56 PM

8-வது வள்ளல்

நமது சரித்திரத்தில் கடையேழு வள்ளல்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எதிர்கால சரித்திரத்தில் நிச்சயம் 8-வது வள்ளலாக இடம்பெறுவார் அசிம் பிரேம்ஜி. ஆம் இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான இவர், விப்ரோ நிறுவனத்தில் தனக்குள்ள பங்கில் 34 சதவீதத்தை அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.

இவற்றின் மதிப்பு மட்டும் 750 கோடி டாலராகும் (ரூ.52,750 கோடி). இதுவரையில் இவர் அளித்துள்ள நன்கொடையின் மதிப்பு ரூ. 1.45 லட்சம் கோடியாகும்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். அதைப்போல தனக்கு வரும் வருமானத்தில் பெருமளவு தொகையை அறக்கட்டளைக்கு அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் அசிம் பிரேம்ஜி. தந்தை நடத்தி வந்த சமையல் எண்ணெய் தொழிலிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் நுழைந்து, இன்று உலக அளவில் முன்னணி நிறுவனமாக முன்னேற்றியதில் இவரது பங்கு அளப்பரியது.

சர்வதேச அளவில் தொண்டு நிறுவனங்களுக்கு கொடையளிப்பதில் மைக்ரோசாஃப்ட்  நிறுவனர் பில் கேட்ஸ், ஜார்ஜ் சாரோஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். ஆசிய அளவில் மிகச் சிறந்த கொடையாளியாக அசிம் பிரேம்ஜி திகழ்கிறார்.  உலகின் பெரும் பணக்காரராக இருந்தபோதிலும் எளிமை விரும்பி. இன்றளவும் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணிப்பவர். சொகுசு கார்களை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

நன்கொடைகள் அளிப்பதில் மற்ற கோடீஸ்வரர்களுக்கும் இவருக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகம். ஆம் ரூ.10 கோடிக்கும் அதிகமான நன்கொடைகள் அளிப்போரது பங்களிப்பில் பிரேம்ஜியின் பங்கு மட்டுமே 80 சதவீதமாகும்.

இந்தியாவில் ஆரம்ப நிலை கல்வியை அளிப்பதற்காக 2001-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் பிரேம்ஜி அறக்கட்டளை. இவரது அறக்கட்டளை மூலம் தெருவோர குழந்தைகள் மற்றும் ஏழை மாற்றுத்திறன் குழந்தைகள் பலரும் பலனடைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை பெங்களூருவில் ஒரு பல்கலைக்கழகத்தையும் நடத்தி வருகிறது.

இந்த அறக்கட்டளையின் நோக்கமே சமநிலையிலான ஒரு இந்திய சமூகத்தை உருவாக்குவதுதான். கல்வி சார்ந்த பணிகளில் நேரடியாக ஈடுபடுவது மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் செயல்படும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் நிதி உதவியையும் வழங்கி வருகிறது.

ஒருமுறை பெங்களூருவில் உள்ள பிரேம்ஜியை சந்திக்க மும்பையைச் சேர்ந்த விளம்பர நிறுவன பிரதிநிதி வந்திருந்தார். அவருடனான சந்திப்பு பிற்பகலிலேயே முடிந்துவிட்டது. உடனே அந்தப் பிரதிநிதியை எப்போது மும்பைக்கு கிளம்பப் போகிறீர்கள் என பிரேம்ஜி கேட்டார். அவரோ, இரவு பெங்களூருவில் தங்கிவிட்டு மறுநாள் மும்பைக்கு புறப்பட திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். உடனே அவர் தனது காரியதரிசியிடம் கூறி அன்று இரவு விமானத்தில் டிக்கெட் எடுத்து அந்த பிரதிநிதியை மும்பைக்கு அனுப்பிவிட்டாராம்.

இதற்கான காரணம் புரியாமல் மும்பை திரும்பியவருக்கு, பெங்களூருவில் ஹோட்டலில் தங்க ஆகும் செலவும் தனது நிறுவன கணக்கில் சேரும் என்பதால் சிக்கன நடவடிக்கையாக பிரேம்ஜி இதை செய்தார் என்பதே பின்னாளில்தான் தெரியவந்தது. அசிம் பிரேம்ஜி சிறந்த நிர்வாகி மட்டுமல்ல, சிக்கனமானவர் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்.

நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு பெய்யும் மழை என்பார்கள். ஆம், பிரேம்ஜியைப் போன்ற நல்லவர்கள் உள்ளதால்தான் ஓரளவாவது சமூகத்தின் மீதான நம்பிக்கை துளிர்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x