Published : 18 Mar 2019 12:53 PM
Last Updated : 18 Mar 2019 12:53 PM

யு டர்ன் 11: இரும்புப் பெண்மணி - அனு ஆகா

ஆகா வெறும் சேர்மன் மட்டுமல்ல. வெளி உலகைப் பொறுத்தவரை, தெர்மாக்ஸ் என்றால் ரோஹின்டன் ஆகா. கம்பெனி ஊழியர்களும் அவர்மேல் முதலாளி என்னும் மரியாதையைத் தாண்டி, அன்பும், பாசமும் வைத்திருந்தார்கள். இயக்குநர் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் ஆகாவின் நண்பர்கள். நிறுவனத்தின் வருங்காலம் பற்றிய உறுதிப்பாடு ஊழியர்களிடமும், முதலீட்டாளர்களிடமும், பொதுமக்களிடமும் தொடர வேண்டும்.

இல்லாவிட்டால், திறமைசாலிகள் வேலையை விட்டுப் போய்விடுவார்கள், பங்கு விலை சரிந்துவிடும். என்ன செய்யலாம்? பிறந்தது கேள்வி. இயக்குநர் குழு விவாதித்தது. கிடைத்தது பதில். ரோஹின்டன் மனைவி அனுவை சேர்மன் ஆக்கிவிடலாம். எல்லோரும் மறுபேச்சின்றி ஒப்புக்கொள்வார்கள்.

ஒருசில இயக்குநர்களுக்குச் சுயநலக் குறிக்கோள். அனு பிசினஸ் அனுபவம் இல்லாதவர், எஞ்சினீயரிங் அறிவு சுத்தமாகக் கிடையாது. ஹெச்.ஆர். இலாகாவிலும் பத்து வருடங்களில் எதையும் சாதித்துவிடவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், குடும்பமும், காப்பகங்களில் குழந்தைகளைக் கவனிக்கும் சமூக சேவையும் மட்டுமே. ஆகவே, அலங்கார பொம்மையாகத்தான் சேர்மன் பதவியில் இருப்பார். அவரை முன்னிறுத்தித் தாங்கள் சூத்திரதாரிகளாக இருக்கலாம் என்று திட்டமிட்டார்கள்.

ஆகா மறைந்த 48 மணி நேரங்களில், அனுவை அடுத்த சேர்மனாகத் தெர்மாக்ஸ் இயக்குநர் குழு அறிவித்தது. அவர்களில் ஒரு சிலர் எதிர்பார்த்தது போலவே, அவர் பொம்மையாகத்தான் இருந்தார். பிசினஸில் ஈடுபாடே இருக்கவில்லை. சகாக்கள் விவாதித்த பொறியியல் நுணுக்கங்களும் தலைகால் புரியவில்லை.

கம்பெனிச் செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்கச் சில சொந்தச் சோகங்களும் காரணம். பதவியேற்ற சில மாதங்களில் மாமியார் மரணம். பதினான்காம் மாதம். தலையில் விழுந்தது பேரிடி. 25 வயது மகன் கிருஷ் இங்கிலாந்தில் படிப்பை முடித்துவிட்டு, வெனிசுலா நாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.  விடுமுறைக்காகப் புனே வந்தார். பெங்களூருவில் தெர்மாக்ஸ் ஒரு முக்கிய ஆர்டரை இழந்துவிட்டது. இதைப் பெற்றுவிடத் துடித்தார் கிருஷ். கம்பெனி எஞ்சினீயர் ஒருவரோடு காரில் போனார்.

ஆர்டர் கையில். மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு, தெர்மாக்ஸுக்காகத்  தான் சாதித்த முதல் வெற்றியை அம்மாவுடன் பகிர்ந்துகொள்ள விரைந்து வந்தார். இது ஜெயங்களின் ஆரம்பம் என்று கிருஷ் நினைத்தார்; பாவம் மனிதனென்று இறைவன் சிரித்தார். பெங்களூரு - புனே நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. மருத்துவமனையில் சேர்க்கும்போது, கிருஷ், அவரோடு பயணித்த எஞ்சினீயர், இருவரும் சடலங்களாய்.

எத்தனைதான் தத்துவச் சிந்தனைகள் இருந்தாலும், பெற்ற மகன். இதயத்தில் ஓட்டையோடு பிறந்தவனைப் பற்றி ஒவ்வொரு விநாடியும் துடித்த துடிப்பு. நெஞ்சு வெடித்தது. அனு தன் சோகங்களை யாரோடும் பகிர்ந்துகொள்பவரல்ல. இந்த ஆலகால விஷத்தைத் தனக்குள் விழுங்கிக்கொண்டார்.

வடிகால் தேட, விபாஸனா (Vipassana) என்னும் தியான முறைப் பயிற்சிக்குப் போனார். பச்சை ரணமாக இருந்த நெஞ்சுக்குக் கொஞ்சம் மயில்தோகைக் கொஞ்சல் வருடல். தேடிய ஆத்மசாந்தியும், நடப்பது யாவையும் விதியின் செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் வந்தன.

சிங்கம் தூங்கினால், அதன் குகையில் எலிகளும் துள்ளி விளையாடும். அனு பெயருக்கு தலைவராக இருந்ததால், பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கின. இயக்குநர்களுக்குள் அதிகாரப் போட்டிகள். இவர்களின் தன்முனைப்பு விளையாட்டுக்களில், தெர்மாக்ஸ் இரண்டாம் பட்சமாயிற்று. ஒற்றுமையாகவும், அர்ப்பணிப்போடும் இருந்த தொழிலாளர்கள் நடுவே, இயக்குநர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள். சம்பள உயர்வு, போனஸ் என்று கோரிக்கைகள். வேலை நிறுத்தங்கள். கேப்டன் இல்லாத தெர்மாக்ஸ் கப்பல் தள்ளாடத் தொடங்கியது.

இவை போதாதென்று, அடித்தது ஒரு புயல்.

1998, 1999 காலகட்டத்தில், தெர்மாக்ஸின் முக்கிய கஸ்டமர்களான ஜவுளித் தொழிற்சாலைகளில் மந்த நிலை. விரிவாக்கங்களைத் தள்ளிப்போட்டார்கள். 1999 - 2000 நிதியாண்டு. விற்பனை 465 கோடி ரூபாய். லாபம்? லாபமா, ரூ.21 கோடி நஷ்டம்! தெர்மாக்ஸ் வரலாற்றில் முதன் முதலாக நஷ்டம்.

இதன் எதிரொலியாக, 400 ரூபாய் விலைக்கு விற்ற கம்பெனிப் பங்கு 36 ரூபாய்க்கு விழுந்தது. 62 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்த அனுவின் சொத்து மதிப்பு சறுக்கியது. அவர் மனதில் சலனமேயில்லை. தாமரையிலைத் தண்ணீர் போல் நடந்துகொண்டார்.

அப்போது ஒரு நாள். அனுவுக்கு வந்தது ஒரு கடிதம். படித்தார். அதன் சாராம்சம்:

நான் நடுத்தர வர்க்கத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவன். சிறு முதலீட்டாளன். என் சேமிப்பில் பெரும்பகுதியைத் தெர்மாக்ஸ் பங்குகளாக வைத்திருக்கிறேன். பங்குகள் விலை 400 - லிருந்து 36 – ஆகக் குறைந்திருப்பது உங்களுக்குத் தெரியும்.  நீங்களும், உங்கள் குடும்பமும் கோடீஸ்வரர்கள். பங்குகளின் இந்தச் சரிவு  உங்கள் வசதியான வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது.

எங்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிதறும் எங்கள் வாழ்க்கைக்காக ஏதாவது செய்யுங்கள். சமூக சேவையை உயிராக நினைக்கும் நீங்கள் இதையும் ஒரு சேவையாக நினையுங்கள்.

அனு வீட்டுக்கு வந்தார். தூக்கம் கண்களைத் தழுவ மறுத்தது. “கடமையிலிருந்து தவறுகிறாய்” என்று மனச்சாட்சி குத்தியது. “எனக்கு பிசினஸ் என்றால் என்னவென்றே தெரியாதே? எதைச் செய்வேன்? எப்படிச் செய்வேன்?” என்று இன்னொரு மனம் தயங்கியது. பொழுது விடிந்தது. விழித்தவர் பழைய அனுவல்ல, சமூகசேவையின் இன்னொரு பரிணாமத்தில் ஞானோதயம் பெற்ற புதியவர்.

பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (Boston ConsultingGroup - சுருக்கமாக BCG) உலகின் முன்னணி மேனேஜ்மென்ட் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்று. இவர்களைத் தெர்மாக்ஸின் ஆலோசகர்களாக அனு நியமித்தார். சாதாரணமாக இயக்குநர் குழு விவாதித்து எடுக்கவேண்டிய முடிவு இது. தன்னிச்சையாக இதைச் செய்தார். “ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்” என்னும் சபதத்தோடு  சிங்கம் புறப்பட்டுவிட்டது. கலகக்கார சகாக்களுக்கு விடுத்த எச்சரிக்கை இது.

தன் செயல் வெறும் மிரட்டலல்ல, அதிரடியின் ஆரம்பம் என்பதை உடனே நிரூபித்தார். இயக்குநர்கள் அத்தனை பேரையும் பதவி விலகச் சொன்னார். மறுத்தவர்களைப் பதவி நீக்கினார். இந்தியன் அலுமினியம், டாட்டா கெமிக்கல்ஸ், கம்மின்ஸ் (Cummins) போன்ற முன்னணிக் கம்பெனிகளில் சாதனை படைத்திருந்த ஓய்வுபெற்ற சி.இ.ஓ - க்களுக்கு அழைப்பு விடுத்தார். புதிய இயக்குநர் அணி தயார்.

தெர்மாக்ஸைக் கரையேற்ற அனுவும், BCG-யும் மும்முனை வியூகம் வகுத்தார்கள்.

1. கம்பெனிக்குத் தனித்துவத் திறமைகள் இருக்கும் தொழில்களில் மட்டுமே தொடருதல். மற்றத் தொழில்களில் லாபம் இருந்தாலும், அவற்றைவிட்டு வெளியேறுதல்.

2. செலவுகளைக் குறைத்தல்.

3. வேலை நீட்டிப்புக்கும், ஊதியம் மற்றும்

பதவி உயர்வுகளுக்கும், செயல்திறன் மட்டுமே அளவுகோல் என்னும் உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்தல். இதற்கு ஈடு கொடுக்காதவர்களைப் பதவிகளிலிருந்து நீக்குதல். 1982-ல் தன் முதல் மாரடைப்பிலிருந்து மறுஜென்மம் எடுத்து வந்தவுடன், மரணம் என்றும் தன் கதவைத் தட்டலாம், அதற்குள் தெர்மாக்ஸைப் பிரம்மாண்டமாக்க வேண்டும் என்னும் பேராசை கணவர் ஆகா மனதில்.

எலெக்ட்ரானிக்ஸ், சாஃப்ட்வேர், குடிநீர், நிதித்துறை எனப் பல்வேறு துறைகளில் கம்பெனிகள் தொடங்கியிருந்தார். ஆழமான ஆராய்ச்சிகளுக்குப் பின், இவை எதிலும் தெர்மாக்ஸுக்குத் தனித்துவத் திறமை இல்லை என்பதை அனு உணர்ந்தார். இந்த நிறுவனங்கள் அத்தனையையும் மூடினார். ஊழியர்கள் வேலை இழந்தார்கள். போராட்டங்களில் இறங்கினார்கள். கணவன் கட்டிய மாளிகையைப் பிசினஸ் கத்துக்குட்டியான மனைவி தகர்க்கிறார் என்று சரமாரியாகக் குற்றச்சாட்டுக்கள். புழுதிவாரித் தூற்றுவோர் பற்றிக் கவலையே படாமல் அனு தன் லட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தெர்மாக்ஸில் சம்பளச் செலவு, விற்பனையில் 17.5 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் திறமையாக நிர்வகிக்கப்பட்ட எஞ்சினீயரிங் கம்பெனிகளில் இந்த விகிதம் 16. தன் துறையின் உச்சத்தில் இருப்போரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த உயர்வை எட்ட முயற்சிகள் எடுத்தலை, மேனேஜ்மென்ட் பாஷையில் பெஞ்ச்

மார்க்கிங் (Benchmarking) என்று சொல்வார்கள்.  அனு இதைக் கடைப்பிடித்தார்.  செலவைக் குறைக்க, விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவித்தார். 270 பேர் விலகிக்கொண்டார்கள். இன்னும் 480 பேர் இலக்குகளை எட்டாததற்காக நீக்கப்பட்டார்கள். தெர்மாக்ஸில் விகிதம் 7.5 - ஆகக் குறைந்தது. நிதியாண்டு 2000 - 2001. தெர்மாக்ஸ் நஷ்டம் 8 கோடி. சென்ற நிதியாண்டின் 21 கோடி நஷ்டத்திலிருந்து பேரளவு முன்னேற்றம். அனுவுக்கும், ஊழியர்களுக்கும் இந்தச் சேதி உற்சாக டானிக். ஜெயிக்கும் வெறி அதிகமானது. 2001 - 2002. லாபம் 21 கோடி.

தொடர்ந்தது வெற்றிப்பாதை. 2004 - 2005-ல் விற்பனை 1,000 கோடியைத் தாண்டியது. தெர்மாக்ஸ் பங்கு விலையும் சரசரவென ஏற்றம் கண்டது. இன்று பங்கு விலை ரூ. 1000-க்

கும் மேல் உள்ளது. போர் முடித்த தளபதி துறவியாவதுபோல், ஏற்ற கடமையை முடித்த அனு சேர்மேன் பதவியிலிருந்தும், அனைத்துக் கம்பெனிப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொண்டார். இதற்குப் பின், முழுக்க முழுக்க சமூக சேவை தான். இதன் அங்கீகாரமாக 2010- ல் அரசு பத்மஸ்ரீ தந்து கவுரவித்தது. 2012-ல் ராஜ்யசபா அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். குழந்தைகள், பெண்கள் நலனுக்கான பல பாராட்டுக்குரிய பாராளுமன்றத் தீர்மானங்களில் இவர் பங்கு உண்டு.

அனுவின் ராஜ்யசபா பொறுப்பு சென்ற ஆண்டோடு முடிந்துவிட்டது. ஆனால், சேவையே உயிர்மூச்சாக இருப்பவர்களுக்கு ஏது ஓய்வு? இந்த 77 வயதிலும், டீச் இந்தியா (Teach India) என்னும் இயக்கத்தின் மூலம், புனேயில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இறைவா, இந்தப் பணிகள் என்றென்றும் தொடர இவருக்குச் சக்தி கொடு.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x