Published : 18 Mar 2019 12:49 PM
Last Updated : 18 Mar 2019 12:49 PM

சேமிப்பு முதலீடு அல்ல

இந்தியர்கள் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால், சேமிப்பு என்பது ஒருபோதும் முதலீடு என்ற வகையில் சேராது என்பது பலருக்கு இன்னும் புரியவில்லை. பணத்தை வெறுமனே சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது உங்களுடைய பணத்தைப் பெருக்க எந்த வகையிலும் உதவாது.

ஏனெனில் சேமிப்புக் கணக்கில் மிக மிக சொற்ப வட்டியே கிடைக்கும். தற்போது எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்கின் வட்டி வீதத்தை, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி வீதத்தோடு ஒப்பிட முடிவு செய்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தைக் குறைக்கும்போது சேமிப்புக் கணக்கின் வட்டி வீதமும் குறையும். 

எஸ்பிஐ வங்கி ரூ. 1 லட்சத்துக்கு மேல் சேமிப்புக் கணக்கில் இருந்தால் அதற்கான வட்டி வீதம் ரெப்போ வீதத்தைப் பொறுத்தே அமையும் என்கிறது. வரும் மே 1 முதல் இது அமலுக்கு வருகிறது. ரெப்பொ வீதத்தை விடவும் 2.75 சதவீதம் குறைவாக வட்டி வீதத்தை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது ரெப்போ வீதம் 6.25% எனில், சேமிப்புக் கணக்கு வட்டி வீதம் 3.5% ஆக இருக்கும்.

ரூ. 1 கோடி வரையிலான இருப்புக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வட்டி வீதத்தை ரெப்போ வீதத்துடன் தொடர்புபடுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டிவீதம் நிலையான சதவீதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.  (தற்போது இது 3.5 சதவீதமாக உள்ளது) ரெப்போ வட்டி வீதம் 25 அடிப்படை புள்ளிகள் கடந்த பிப்ரவரியில் குறைக்கப்பட்டது.

வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி வீதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. எனில், ரெப்போ வட்டி வீதம் குறையும் போது, சேமிப்புக் கணக்கு வட்டி வீதமும் குறையும். இது சேமிப்புக் கணக்கில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ரூ. 10 லட்சம் சேமிப்புக் கணக்கில் ஒருவர் வைத்திருந்தால் ரெப்போ வட்டி வீதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டால் கிடைக்கும் ஆண்டு வட்டி வருமானத்தில் ரூ.2,500 நஷ்டம் உண்டாகும். ரூ. 1 கோடி வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 25,000 வட்டி நஷ்டம் ஏற்படும். எனவே பெரும் தொகையை சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மாற்று வழிகள் என்னென்ன?

உங்களுடைய அதிகப்படியான சேமிப்பை நிரந்தர வைப்புக் கணக்குக்கு மாற்றலாம். அதன் மூலம் அதிக வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு இந்தத் தொகை முடக்கப்பட்டுவிடும் என்பதால், தேவைப்படும் போது எடுக்க முடியாத நிலை உண்டாகும்.

நிரந்தர வைப்புக் கணக்கில் கிடைக்கும் வருமானமும் வேண்டும், நினைத்த போது பணத்தை எடுக்கும் வசதியும் வேண்டும் எனில், என்ன செய்யலாம்?

இதற்காகவே பல வங்கிகளும் ‘ஆட்டோமேட்டிக் ஸ்வீப்’ வசதியைத் தருகின்றன. இதன் மூலம் நம்முடைய பணத்துக்கு அதிக வட்டியும் கிடைக்கும், தேவைப்படும் போது பணத்தையும் எடுக்க முடியும். சேமிப்புக் கணக்கில் இருக்கும் பெரும் தொகைக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்க மற்றொரு வழி, சந்தையில் உள்ள பிற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதாகும். 

எஸ்பிஐ எடுத்துள்ள இந்த முடிவை மற்ற வங்கிகளும் செயல்படுத்துமா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. தற்போது யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி (ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை 6 சதவீத வட்டி), இண்டஸ்இந்த் வங்கி (ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை 5 சதவீத வட்டி) ஆகியவை அதிகபட்ச சேமிப்பு தொகைக்கு அதிக வட்டி வழங்கி வருகின்றன. இந்த வங்கிகளும் எஸ்பிஐ வங்கியின் முடிவுக்கு மாறுமா?

இரண்டு வருடங்களுக்கு முன் எஸ்பிஐ சேமிப்புக் கணக்குக்கான வட்டியைக் குறைத்தபோது, பிற வங்கிகளும் உடனே வட்டியைக் குறைத்தன. தற்போது பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் வருமானம் ஈட்டுவதில் பிரச்சினையைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. எனவே எஸ்பிஐ வங்கியைப் பின்பற்றி அவை வட்டி வீதத்தை ரெப்போ வட்டி வீதத்துடன் தொடர்புபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஆனால், தனியார் வங்கிகள் உடனடியாக இந்த மாற்றத்தைக் கொண்டுவராது என்றே தோன்றுகிறது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்த்து பின்னரே தனியார் வங்கிகள் முடிவுகளை எடுக்கும்.

ரெப்போ வட்டி வீதம் உயர்ந்தால்

தற்போது எஸ்பிஐ வங்கியின் இந்த நடவடிக்கை நம்மை பாதித்தாலும், சில வருடங்கள் கழித்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தினால், சேமிப்புக்கான வட்டி வீதமும் உயரும். இதுவரை சேமிப்புக் கணக்குக்கான வட்டி வீதம் நிலையாக இருந்து வந்தது. ஆனால், இனி அப்படி இருக்காது. ரிசர்வ் வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால், அதேசமயம் நினைவில் கொள்ளுங்கள், ரெப்போ விகிதம் 2012-ல் 8 சதவீதம் என்ற உச்சத்தை மீண்டும் அடைகிறது எனில், சேமிப்பு வட்டி வீதம் 5.25 சதவீதமாக உயரும். ஆனால், அப்போதும் நிரந்தர வைப்பு நிதி அதை விட கூடுதலாக 6.5 முதல் அதிகபட்சம் 9 சதவீதம் வரை வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது. எனவே, ஸ்வீப் வசதியைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டுங்கள்.

- radhika.merwin@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x