Published : 18 Mar 2019 12:43 PM
Last Updated : 18 Mar 2019 12:43 PM

அலசல்: சந்தாமாமாவும் ஸ்விஸ் வங்கியும்

அரசியல்வாதிகள் முதல் ஆன்மிக வாதி கள் வரை சொல் வது ஒன் றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. தொழிலதிபர் கள் இவர்களை மிஞ்சி விடுவார்கள் போலிருக் கிறது. இந்தியத் தொழில திபர்கள் பெரும்பாலானோர் தொழில் தர்மத்தோடும், நீதி நியாயத்தோடும் தொழில் செய்வதாகக் கூறிக்கொள்வார்கள்

ஆனால், உண்மையில் சொல்கிறபடிதான் தொழில் செய்கிறார்களா என்றால் இல்லை. கடந்த சில வருடங்களில் மட்டும் எத்தனை ஊழல்கள், எத்தனை மோசடிகள். விஜய் மல்லையா, நீரவ் மோடி, சந்தா கோச்சார், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், காக்னிசன்ட் ஆகியவை செய்திகளில் அடிபட்ட மோசடிகள் மட்டுமே. இந்த வரிசையில் தற்போது ஜியோடெசிக் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஜியோடெசிக் நிறுவனம் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பில்லை. ஆனால், உங்களுக்கு ‘சந்தாமாமா’ இதழைத் தெரிந்திருக்கலாம். புராண மற்றும் சரித்தர கதைகளையும், நீதிக் கதைகளையும் வண்ணப் படங் களுடன் புத்தகங்களைப் படைத்து வழங்கி வருவதுதான் ‘சந்தாமாமா’. குழந்தை களுக்குப் பல்வேறு அறநெறிகளையும், நேர்மையையும் கற்பித்துவந்த இந்த சந்தாமாமா இதழை ஜியோடெசிக் நிறுவனம் 2007-ல் வாங்கியது.

புராண கதைகளில் புதையலையும், உயிலையும் எங்கோ ரகசிய இடத்தில் கொண்டுபோய் வைப்பதுபோல், இந்த ஜியோடெசிக் நிறுவனம் தான் மோசடி செய்த பணத்தைக் கொண்டுபோய் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஜியோடெசிக் நிறுவனமும், அதன் இயக்குநர் களான பிரசாந்த் சரத் முலேகர், பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, கிரண் குல்கர்னி ஆகிய மூவரும் தற்போது இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஸ்விஸ் வங்கியும் இந்த விவகாரம் குறித்த நிர்வாக நடவடிக்கைகளில் உதவுவதாக உறுதியளித்துள்ளது.

ஆனால், என்னதான் ஸ்விஸ் வங்கி உதவுவதாகக் கூறினாலும், அதன் விதிமுறைகளுக்குட்பட்ட உதவிகளை மட்டுமே செய்யும். அதை வைத்து கறுப்புப் பணத்தையும் மோசடிகளையும் வெளிக்கொண்டுவந்து விட முடியாது. இதனால்தான் கறுப்புப் பணத்தின் கருவூலமாகவே ஸ்விஸ் வங்கி உள்ளது.

ஜியோடெசிக் மட்டுமல்ல எத்தனையோ தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல் வாதிகள் தங்கள் கறுப்புப்பணத்தை, மிதமிஞ்சிய சொத்துகளைப் பாதுகாப்பாக ஸ்விஸ் வங்கியில்தான் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு பலமுறை ஸ்விஸ் வங்கி தன்னிடம் சொத்துகளைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டி யல் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல்களின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜியோடெசிக் முறைகேடுகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜியோடெசிக், ஏற்கெனவே சில முறைகேடுகளில் சிக்கியுள்ளது. 2014-ல் செபியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளானது.

அதன்பிறகு இந்தப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகவில்லை. பங்கு விலை ஒரு காலத்தில் ரூ.140-க்கும் மேல் இருந்தது. ஆனால், இப்போது ரூ.1.60 என்ற நிலையில் பங்குகள் உள்ளன.

தற்போது நாடுகளுக்கிடையிலான தடையில்லா தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டுவரும் நிலையில் இதுபோன்ற விவகாரங்கள் எளிதில் தீர்க்கப்படுவதற்கான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. ஜியோடெசிக் நிறுவனம் என்ன மாதிரியான முறைகேடுகளைச் செய்துள்ளது என்பது இனிதான் தெரியவரும்.

ஒன்று மட்டும் நிதர்சனம், தவறு செய்பவர்கள் புதுப்புது வழிகளைக் கையாள்கிறார்கள். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல்தான் இதுவும். நடத்தை, நேர்மை, நல்வழி இவையெல்லாம் கதைகளில்தான் இருக்கும் போலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x