Published : 04 Mar 2019 11:23 AM
Last Updated : 04 Mar 2019 11:23 AM

பெண்களும் நிதியை திட்டமிடலாம்

பெண்கள் இப்போது அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை பெண்களுக்கான வேலை வாய்ப்பை பல மடங்காக்கியுள்ளது. ஆனாலும் பெண்கள் தங்களின் வருமானத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

பெற்றோரது பாதுகாப்பில் இருக்கும் வரை சம்பளத்தை அப்படியே பெற்றோரிடம் தருவது, தங்கள் செலவுக்கு எடுத்துக் கொள்வது என்றும், திருமணம் ஆகிவிட்டால் கணவரிடம் கொஞ்சம் தொகையை கொடுத்துவிட்டு மீதியை தாங்கள் தங்களுக்கு விருப்பமான வழிகளில் செலவு செய்வோர்தான் அதிகம்.

கடினமாகப் படித்து, பல நேர்முகத் தேர்வுகளைக் கடந்து வேலையில் சேர்ந்த பிறகு வாங்கும் சம்பளத்தை திறம்பட நிர்வகிப்பதில் கவனம் செலுத்தும் பெண்கள் மிகக் குறைவு. நீங்களும் கஷ்டப்பட்டு வேலைக்குச் செல்கிறீர்கள், ஆண்களுக்கு இணையாக அதே பணி நேரம்உழைக்கிறீர்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்ததை திட்டமிட்டு செலவிட வேண்டாமா?

உங்கள் சம்பளத்தை மிகவும் சரியாக திட்டமிட்டு தேவையான முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். காப்பீட்டுத் திட்டங்கள், கடன் பத்திர முதலீடு, தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு என உங்களது வருமானத்துக்கேற்ப சேமிப்புத் திட்டங்களை திட்டமிடுங்கள். இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்கள்தான் எதிர்காலத்திலும் உங்களை சுயமாக நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.

வேலையில் சேர்ந்த சில மாதங்கள் வரை உங்களது மாத சம்பளத்தில் என்னென்ன செலவுகள் செய்கிறீர்கள் என்று பாருங்கள். வீட்டு செலவுகள், வாடகை, பெற்றோருக்கு அனுப்பும் தொகை, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை ஆராயுங்கள். அதேபோல மாதத்தில் எத்தனை முறை ஹோட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.

மேலும் வார இறுதி நாளில் மேற்கொள்ளும் சுற்றுலா அல்லது திரையரங்குகளுக்கு செல்வதில் ஏற்படும் செலவுகளையும் கணக்கிடுங்கள். ஒருசில மாதங்கள் இவற்றை கணக்கிட்டு பார்த்தால்தான் நிதி திட்டமிடலில் ஒரு உறுதியான, ஸ்திரமான முடிவை எடுக்க முடியும். தொடக்கத்தில் உங்கள் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சேமிக்கத் தொடங்குங்கள்.

எந்த முதலீடாக இருந்தாலும் டேர்ம் காப்பீடு உள்ளதாக தேர்வு செய்யுங்கள். உங்கள் பெற்றோர் உங்களை சார்ந்திருந்தால் உங்களது ஆண்டு சம்பளத்தில் 10 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள். வயது அதிகரிக்கும் போது, திருமணத்திற்குப் பிறகு, பதவி உயர்வுக்கேற்ப இந்தத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.

அடுத்தது மருத்துவக் காப்பீடு. உங்கள் நிறுவனமே உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் குழு காப்பீடு முறையில் மருத்துவக் காப்பீடு அளிப்பதாயிருந்தால் அதை தேர்வு செய்யலாம். குழு காப்பீட்டுக்கான பிரீமியம் பொதுவாக குறைவாக இருக்கும்.

இது தவிர மருத்துவக் காப்பீடு ஒன்றையும் தனியாக நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எடுப்பது சிறந்தது. ஒரு வேளை நீங்கள் வேலை மாறினாலும் மருத்துவக் காப்பீடு ஓரளவு உங்களுக்கு கை கொடுக்கும்.

சீக்கிரம் தொடங்குங்கள்

மாதாந்திர செலவுகளை கணக்கிட்ட பிறகு முதலீடு செய்ய தொடங்குங்கள். முதலீடு செய்வதை தள்ளிப் போடாதீர்கள். அதேபோல எதற்கு, எத்தகைய தேவைக்கு முதலீடு என்பதில் கவனமாக இருந்து அதை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக திருமணம், வாகனம் வாங்க, வெளிநாடு சுற்றுலா, ஓய்வுக் காலம் என ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியாக முதலீடு செய்ய தொடங்குங்கள்.

பங்குச்சந்தை முதலீடுகளில் உங்களுக்கு அச்சமிருந்தால் முதலில் தொடர் வைப்பு (ரெகரிங் டெபாசிட்) திட்டங்களை உங்கள் வங்கியில் தொடங்குங்கள். பிபிஎஃப் முதலீட்டில் உங்களது பங்களிப்பை அதிகரிக்கலாம்.

ஓரளவு ரிஸ்க் எடுக்க ஆசையிருந்தால் நீங்கள் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆரம்பத்தில் பேலன்ஸ்டு ஃபண்ட், லார்ஜ் கேப் திட்டம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம்.

ஈக்விடி திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதாயிருந்தால் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு உங்களது சேமிப்பை மறந்துவிடுங்கள். அப்போதுதான் அதன் பலன் அபரிமிதமாக இருக்கும். மாதாந்திர தேவைகளுக்கு அல்லது குறுகிய கால தேவைகளுக்கு இதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்காது.

முதலீடு செய்வதோடு வரிச் சலுகை உள்ளதா என்று பார்க்க வேண்டும். வழக்கமான ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல. ஏனெனில் எண்டோமென்ட் திட்டங்களுக்கான வட்டி மிகக் குறைவு. ஒருபோதும் முதலீட்டையும் காப்பீட்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கடனை தவிருங்கள்

அவசர தேவைக்கு கை கொடுக்க கிரெடிட் கார்டு ஒன்றை வாங்கிக் கொள்வது நல்லது. மிகவும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள். எப்போதும் உங்கள் கிரெடிட் கார்டில் பாதி அளவு தொகை கிடைக்கும்படி கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். வீடு வாங்குவதில் அவசரம் காட்டாதீர்கள். அதேபோல கார் போன்றவற்றையும் வாங்குவது தேவையற்றது.

எப்போதும் 6 மாத காலத்தை சமாளிக்கும் வகையில் ஒரு நிதியத்தை உருவாக்குங்கள். அப்போதுதான் திடீரென நீங்கள் வேலையிலிருந்து விலகினாலும் உங்கள் நிதித் தேவையை பூர்த்தி செய்ய இவை உதவியாக இருக்கும்.

- venkatasubramanian.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x