Published : 21 Jan 2019 01:29 PM
Last Updated : 21 Jan 2019 01:29 PM

மாற்றி யோசிக்கும் ‘மில்லினியல்’ தலைமுறை

காலம் மாற புதிய தலை முறைனயினரின் கனவுகளும் மாறுகிறது. இலக்குகளும் முடிவுகளும் கூட மாறுகிறது. அப்படித்தான் இன்றைய மில்லினியல் தலைமுறையினர் தங்களின் முதலீட்டு முடிவுகளிலும், தங்களின் பெற்றோர்களைப் போல அல்லாமல், மாற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்போதுள்ள பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தபால் சேமிப்பு, நிரந்தர வைப்பு, தங்கம் கொஞ்சம் பெரிய அளவில் என்றால் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடு திட்டங்கள்தான் தெரியும். ஆனால், இப்போதைய தலைமுறை வழக்கமான முதலீடு மனோபாவத்திலிருந்து மீண்டும் புதிய முதலீடுகளைத் துணிந்து செய்யத் தொடங்கியுள்ளனர்.

வருமான வரி சேமிப்பு என்று ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியையோ, தபால் சேமிப்பு திட்டங்களையோ இன்றைய தலைமுறையினர் செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்வோம் என்ற மனநிலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தினர் மாறிவருகின்றனர். புதிய முதலீடுகளை மிகுந்த கவனமுடன், கேள்விகளுடன் அணுகுகின்றனர்.

தவறான விளம்பரங்கள், வழிகாட்டுதல்களுக்கும் மத்தியில் முதலீடுகள் குறித்த முடிவுகள் எடுப்பதில் கொஞ்சமேனும் ஆராய்ந்து முடிவெடுக்கின்றனர். கண்ணை மூடிக்கொண்டு முதலீடுகளை மேற்கொள்வதில்லை.

முழுவதுமாக இளைஞர்கள் மாறிவிட்டார்களா என்றால் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதுள்ள பெற்றோர்கள் பலருக்குப் பங்குச் சந்தை முதலீடுகள் தெரியாது, தெரிந்தவர்களும் அதில் முதலீடு செய்ய பயந்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறை துணிந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலேயே வரி சேமிக்கக்கூடிய முதலீட்டு திட்டங்களான இஎல் எஸ் எஸ் போன்ற திட்டங்களில் முதலீடுகள் செய்கின்றனர். அதேபோல் எல்லா பணத்தையும் ஒரே திட்டத்தில் போட்டு வைப்பதையும் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

பெரும்பாலான இளைஞர்கள் போர்ட்போலியோ, அஸெட் அலொகேஷன் போன்றவற்றை புரிந்துகொண்டிருக்கின்றனர். நம்முடைய வரவு, செலவு மற்றும் முதலீடு செய்யும் திறன் கூடவே ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளைத் திட்டமிடுகின்றனர்.

அதுவும் இப்போதுமே தகவல்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. எந்தவொரு முதலீட்டு திட்டத்தைப் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றாலும், இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. என்ன ஒன்று, சரியான தகவலை அணுகுவதும், அதைச் சரியாகப் புரிந்துகொள்வதும் தான் அவசியமாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பம், இணையம் போன்றவற்றின் வளர்ச்சி இந்த மாற்றத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இப்போது அனைத்துமே பணமில்லா பரிவர்த்தனையாக மாறிவருவதால் தொழில்நுட்பத்தை எல்லோரும் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. விரல் நுனியில் பணத்தை அனுப்புவதுபோல், விரல் நுனியில் முதலீடும் செய்யலாம், அதை அவ்வப்போது தொடர்ந்து இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கவும் முடிகிறது.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் பண்ட் முதலீடு, பிபிஎப் முதலீடு, என்பிஎஸ் முதலீடு என அனைத்து முதலீடுகள் குறித்தும் அறிந்துவைத்துள்ளனர். மாதாந்திர எஸ்ஐபி முதலீட்டில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மியூச்சுவல் பண்டில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படுவதால், அவ்வளவு முதலீடுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை என பண்ட் நிறுவனங்கள் சொல்லும் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில், அழுத்தமான பணிச்சூழலில்  உடல் ஆரோக்கியம் என்பது மிகுந்த கவலை இன்றைய தலைமுறையினரிடையே உருவாக்கியுள்ளது. இதை உணர்ந்த பலர் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், உடல் பாதிக்கப்படும்போது அதிக செலவில் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக இருக்கின்றனர். டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூர்னஸ் போன்றவற்றை வாங்கத் தொடங்கியுள்ளனர். தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல், தன் குடும்பத்துக்காகவும் சிந்தித்து செயல்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x