Published : 21 Jan 2019 01:01 PM
Last Updated : 21 Jan 2019 01:01 PM

பிஎம்டபிள்யூ-வின் புது வரவுகள்

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறக்கிவருகிறது. தற்போது மேலும் இரண்டு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் என்ற இந்த இரு மாடலும் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 16.85 லட்சம் முதல் ரூ. 20.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்டாண்டர்டு ஆர் 1250 ஜிஎஸ் மாடல் விலை ரூ. 16.85 லட்சமாகும். இதில் ஜிஎஸ் புரோ மாடல் விலை ரூ. 20.05 லட்சமாகும். அதேபோல அட்வெஞ்சரில் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 18.25 லட்சமாகவும், புரோ மாடல் விலை ரூ. 20.95 லட்சமாகவும் இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இரண்டு மாடலிலும் ஸ்டாண்டர்டு மற்றும் புரொபஷனல் என இரண்டு ரகங்கள் அறிமுகமாகியுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்நிறுவனம் புதிதாக 1250 ஜிஎஸ் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலானது ஏற்கெனவே இருந்த ஆர் 1200 ஜிஎஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்தது. இந்நிறுவனத்தின் ஆர் 1200 ஜிஎஸ் மாடல் 2004-ல் அறிமுகமானது. அதன் பிறகு இதில் மேம்படுத்தப்பட்ட ரகம் 2013-ல் வந்தது.

அதன் பிறகு தற்போது 2019-ல் மேம்படுத்தப்பட்டு ஆர் 1250 ஜிஎஸ் மாடலாக வந்துள்ளது. இது 1,254 சிசி திறன் கொண்டதாகும். இது 136 ஹெச்பி மற்றும் 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுதிறன் கொண்டது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் 11 ஹெச்பி மற்றும் 18 நியூட்டன் மீட்டர் இழுதிறன் கூடுதலாகும்.

இதில் உள்ள புதிய இன்ஜின் விவிடி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இதில் எல்இடி முகப்பு விளக்கு, எல்இடி டிஆர்எல் உள்ளன. இதில் 6.5 அங்குலதொடு திரை உள்ளது. இதை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்து செயல்படுத்தலாம். இதில் ஆட்டோமேடிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (ஏஎஸ்சி) உள்ளது. ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் நிரந்தர வசதியாக அனைத்து மாடலிலும் உள்ளன. சாலைகளின் தன்மைக்கேற்ப ஓட்டும் வசதியை மாற்றியமைக்க முடியும். இதில் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் உள்ளது சொகுசான பயணத்தை உறுதி செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x