Last Updated : 17 Dec, 2018 11:59 AM

 

Published : 17 Dec 2018 11:59 AM
Last Updated : 17 Dec 2018 11:59 AM

ஊழலில் வீழும் உலகம்

உலக நாடுகளின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 258 லட்சம் கோடி ஊழலில் காணாமல் போய்விடுகிறது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது. இவற்றில் லஞ்சமாக மட்டுமே ரூ. 71 லட்சம் கோடி காணாமல் போகிறது.

உலக அளவில் நான்கில் ஒருவர் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவரைப் பார்ப்பதற்கு, பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் வாங்க, போலீசில் புகார் கொடுக்க, குற்றங்களிலிருந்து தப்பிக்க என ஏதோ ஒருவகையில் எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறோம்.

21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக ஊழல் பிரச்சினை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஐநா, ஊழல், ஒரு சாமான்யனுக்குக் கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையெல்லாம் திருடி விடுகிறது என்று கூறுகிறது. பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தாலும் ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வு அதைவிடப் பலமடங்கு அதிகரிக்க இதுவே காரணம் என்கிறது.

உலகின் சொத்துக்களில் 80 சதவீதம் வெறும் 20 சதவீதத்தினரிடம் குவிந்துகிடக்கிறது. இந்த அறிக்கையில் ஊழல் செய்வதில் காவல்துறையும், அரசியல்வாதிகளும் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆய்வில் எடுத்து கருத்துக் கணிப்புப்படி ஊழல் செய்வதில் இவர்களின் பங்களிப்பு தலா 36 சதவீதம். (ஊழல் செய்வதில் யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை அட்டவணையில் பார்க்கலாம்.).

ஆனாலும், லஞ்சம், கையாடல், பணமோசடி, வரி ஏய்ப்பு, குடும்ப அரசியல் என ஏதோ ஒரு வகையில் எல்லோரும் ஊழலில் பங்கெடுப்பதாக ஆகிவிட்டது என்றும் ஐநாவின் அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஊழல் பிரச்சினை உலகின் பணக்கார, ஏழை நாடுகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிக்கிறது என்கிறது ஐநா. இதனால், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். ஊழலைச் செய்பவர்கள் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தினரும், அரசியல்வாதிகளும், ஊழலில் பங்கெடுப்பவர்கள் பொருளாதாரத்தில் நடுத்தர நிலையில் இருப்பவர்கள்.

ஆனால், ஊழலால் பாதிக்கப்படுவது இவர்களைக் காட்டிலும், ஊழலில் பங்கெடுத்துக்கொண்டு தன்னையும் தன் சுற்றத்தாரையும் வளமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாத ஏழை கடைக்கோடி சாமான்யர்கள்தான். இதற்கெல்லாம் முழுமுதற்காரணமாக இருப்பது இன்றைய பணநாயகப் பொருளாதாரம்.

1980களுக்குப் பின்னர் உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கொள்கைகள் தீவிரமடைந்ததால், உலகப்பொருளாதாரம் பணத்தை மையமாகக் கொண்டதாகவே மாறியது. லாபமும், வளர்ச்சியும் மட்டுமே தொழில்துறையின் நோக்கமாக இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையிலான போட்டி ஆட்சியாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் சாதகமாக மாறியது. அது ஒவ்வொரு நாட்டின் சமூக-பொருளாதார அம்சங்களைக் கூறுபோட்டு விற்க ஆரம்பித்தது.

இந்தியாவும் ஊழலும்

இந்தியாவில் ஊழல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாம் கால் நூற்றாண்டு பின்னோக்கிச் சொல்ல வேண்டும். 1991, தாராளமயமாக்களும், உலகமயமாக்களும் தீவிரமடைந்த காலம். ஊழலின் ஆரம்பம். சுதந்திரத்துக்குப் பிறகு எங்குபார்த்தாலும் ஏழ்மை என்ற நிலையில் இருந்த இந்தியா 1991க்குப் பிறகு அபர்மிதமான வளர்ச்சியைக் கண்டது.

எனவேதான், 1947-1991 வரையிலான காலத்தை இருண்ட காலம் என்றும், 1991க்குப் பிறகுதான் இந்தியாவுக்குப் பொற்காலம் பிறந்தது என்றும் சொல்வார்கள். ஆனால், இந்தியா அதற்குப் பிறகு கண்ட வளர்ச்சிக்கு ஒரு பிரிவு மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. 1991ல் இந்தியா தீவிர தனியார்மய கொள்கையை ஆதரித்தது.

அரசுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு, தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களும் லாபகரமாகத் தொழிலை மேற்கொள்ள இந்தியா எனும் மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்திய அரசு. வர்த்தகம் தடையில்லாமல் நடக்க ஏற்றுமதி, இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்நிய நேரடி முதலீடுகள் உள்ளே வந்தன.

இதனால் பொருளாதாரம் வேகமாக வளர ஆரம்பித்தது. மற்றொரு புறம் நிலம், நீர், அலைக்கற்றை, கனிம வளங்கள் போன்றவற்றை கைப்பற்றுவதில்  பெரு நிறுவனங்களுக்கிடையே நிலம், கச்சா பொருள்கள் தீவிரமான போட்டி உருவானது. இந்தப் போட்டியைக் காரணமாக வைத்து அரசின் சொத்துகளும், இயற்கை வளங்களும் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு விற்கப்பட்டன.

இதனால் நியாயமாக அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய வருமானம், இவற்றுக்கெல்லாம் பின்னால் நடந்த லட்சக்கணக்கான கோடி ஊழலில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் கொள்ளைப்புறத்துக்குத்தான் போனது.

இந்தியாவின் 1 சதவீத பெரும்பணக்காரர்களிடம் இந்தியாவின் 58 சதவீதச் சொத்துகள் குவிந்துள்ளன. அடித்தட்டில் உள்ள 70 சதவீத மக்களிடம் வெறும் 7 சதவீத செல்வம் மட்டுமே இருக்கிறது. இந்த ஏற்றத் தாழ்வு ஒருபக்கம் எனில், மற்றொரு பக்கம் அளவுக்கு மீறி வளங்கள் சுரண்டப்பட்டதால் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டு வளங்களை  வாரி வழங்கியதன் விளைவால், பல்வேறு வகையான வளங்கள் இன்று பற்றாக்குறையைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

வளங்களைப் பாதுகாத்த மலைகளும், காடுகளும் இன்று காணாமல் போயிருக்கின்றன. அதனோடு சேர்த்து பல்வேறு பழங்குடி இன மக்களையும் சிதைத்திருக்கிறது. இந்தப் பணநாயகப் பொருளாதாரத்தில் உள்ள ஆதாயத்தைப் பெற்று ருசி கண்ட அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவர்களாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளே தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் அரசியலில் இறங்குகிறார்கள்.

இதனால், இவர்களின் நோக்கம் என்னவென்று வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் மக்கள் குழப்பமடைகிறார்கள். வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அலங்கார வார்த்தையின் மீது கட்டியெழுப்பப்படும் போலியான நம்பிக்கை உடையும்போது இந்தியா எதிர்கொள்ளப் போகும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

oozhal-statsjpg100 

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x