Published : 17 Dec 2018 11:58 AM
Last Updated : 17 Dec 2018 11:58 AM

புற்றுநோய் சிகிச்சைக்கு சரியான காப்பீடு

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் இளைஞர்களும் தப்புவதில்லை. புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகள் பல லட்சங்கள் என்பதால், புற்றுநோய்க்குச் சரியான ஒரு காப்பீடு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

அப்போலோ முனிச் வழங்கும் ஐகேன் என்ற புற்றுநோய் காப்பீடு, பிற  காப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் சில தனி சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த காப்பீடு திட்டம், நம்முடைய மருத்துவ செலவுகளை முழுவதுமாக வழங்குகிறது. ஆனால், பிற காப்பீடுகள், முன்பே வரையறுக்கப்பட்ட நோய்களுக்கான செலவுகளை மட்டுமே வழங்குகின்றன. 

இந்தக் காப்பீடு புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளில், நாம் எடுத்துக்கொண்ட காப்பீடு தொகையை முழுமையாக வழங்குகிறது. உள்நோயாளி/வெளிநோயாளி என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து விதமான சிகிச்சைகளுக்குமான செலவை இந்தக் காப்பீடு திட்டம் ஏற்றுக்கொள்கிறது.

இதில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று ஸ்டேண்டர்டு, மற்றொன்று அட்வான்ஸ்டு. ஸ்டேண்டர்டு திட்டத்தில், கீமோதெரபி, ரேடியோதெரபி, ஆர்கன் ட்ரான்ஸ்பிளாண்டேஷன் (புற்றுநோய் சம்பந்தமாக) மற்றும் புற்றுநோய் பாதித்த திசுக்களை அறுவை மூலம் அகற்ற என அனைத்துக்கும் காப்பீடு கிளெய்ம் தருகிறது. அட்வான்ஸ்டு திட்டத்தில், இம்யூனோதெரபி, பர்சனலைஸ்டு/டார்கெட்டட் தெரபி, ஹார்மோனல் தெரபி அல்லது எண்டோகிரைன் மேனிபுலேஷன் மற்றும் ஸ்டெம் செல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்றவற்றுக்கு கிளெய்ம் கிடைக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், பின் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு ஆண்டுக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு ஆகும் செலவுகள் காப்பீட்டில் தரப்படும்.  இந்தக் காப்பீட்டின் காத்திருப்பு காலம் பாலிசி தொடங்கும் தேதியிலிருந்து 120 நாட்கள்.

ஆனால், புற்றுநோய்க்கு முந்தைய சிகிச்சைகள், அலோபதி அல்லாத சிகிச்சைகள், இந்தியாவுக்கு வெளியே எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் போன்றவற்றுக்கு இதில் கிளெய்ம் தரப்படாது.

இதுதவிர, பிறக்கும்போதே உள்ள நோய்கள், பிரச்சினைகள், மற்றும் முன்னெச்சரிக்கை மருத்துவ ஏற்பாடுகள் போன்றவற்றுக்கும் இதில் கிளெய்ம் இல்லை. இந்தக் காப்பீடு ரூ. 5/10/15/20/25/50 லட்சம் என்ற வரம்புகளில் வழங்கப்படுகிறது. நம்முடைய தேவைக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம். 

புற்றுநோய் ஒரு முறை மட்டுமே வரக்கூடியதல்ல; மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. குறிப்பிட்ட பலன்களை மட்டுமே தரக்கூடிய பிற நிறுவன காப்பீடுகள் ஒரு முறை சிகிச்சைக்கு மட்டுமே கிளெய்ம் கொடுக்கின்றன. அதோடு அந்தக் காப்பீடு முடிந்துவிடும். மீண்டும் புற்றுநோய் வந்தால் அந்தக் காப்பீடு செல்லுபடியாகாது. ஆனால், ஐகேன், வழக்கமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் போல செயல்படக்கூடிய முழுமையான  புற்றுநோய் காப்பீடு திட்டமாகும். இந்தக்

காப்பீட்டில் ஒருமுறை கிளெய்ம் பெற்றுவிட்டாலும் மீண்டும் கிளெய்ம் பெற முடியும். அதேபோல் மற்ற குறிப்பிட்ட பலன்களைத் தரும் காப்பீடுகளைப் போல 70/75 வயது ஆகும்போது காப்பீடு காலவதியாகிவிடுவதுபோல் அல்லாமல், வாழும் காலம் வரைக்கும் புதுப்பித்துக்கொள்ளக்கூடிய காப்பீடாக ஐகேன் உள்ளது.

மேலும், நோய் கண்டறிதல் காலத்திலிருந்தே ஆகும் செலவுகளை ஐகேன் காப்பீடு திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஆனால், பிற காப்பீடுகள் புற்றுநோய் இருப்பது அறியப்பட்ட பிறகே செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. மேலும், புற்றுநோயின் நிலையைப் பொறுத்து கிளெய்மையும் குறைத்துவிடுகிறார்கள். முதல் நிலை புற்றுநோய்க்கு கிளெய்ம் 25 சதவீதம்தான். 

ஐகேன் காப்பீடு திட்டத்தில் நமக்கான கிளெய்மை இரட்டிப்பாக, என்ஹான்ஸ் என்ற ரைடர் பாலிசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இது காப்பீட்டு தொகையில் 60 சதவீதத்தை கூடுதலாக வழங்குகிறது. நான்காம் நிலை புற்றுநோயாக இருந்தால், இதன் மூலம் காப்பீட்டு தொகையில் 100 சதவீதம் கிடைக்கும். ஆனால், ரைடர் பாலிசி சற்று அதிகப் பிரீமியம் கொண்டதாகும்.

ஐகேன் காப்பீடு திட்டத்தில், ரூ. 20 லட்சத்துக்கான காப்பீட்டு பெற, 35 வயது பெண்ணுக்கு ரூ. 3,775 பிரீமியம் ஆகும். நீங்கள் என்ஹான்ஸ் ரைடரை எடுத்தால் பிரீமியம் ரூ. 5,082 ஆகும்.

ஐகேன் பேசிக் காப்பீடு திட்டம், மற்ற காப்பீடு திட்டங்களைக் காட்டிலும், புற்றுநோய் சிகிச்சைக்கு சரியான, மலிவான காப்பீடு திட்டம். மேற்சொன்ன அதே வயது கொண்ட பெண்ணுக்கு, அதே காப்பீடு தொகைக்கான ஐசிஐசிஐ புரூடென்ஷியல் புற்றுநோய் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் ரூ. 13,772 ஆகும்.

பிரீமியம் இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம், நிர்ணயிக்கப்பட்ட பலன்களைக் கொண்ட திட்டங்களில் பிரீமியம் தொகையை குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு மாற்றக்கூடாது என்பதுதான். ஆனால், ஐகேன், முழுமையான காப்பீடு திட்டம் என்பதால், பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும், தனிநபரின் வயதுக்கேற்ப மாறுபடும்.

சமீபத்தில் ரெலிகேர் ஹெல்த் அறிமுகப்படுத்திய புற்றுநோய்க்கான காப்பீடு திட்டம், கிட்டதட்ட ஐகேன் காப்பீடு திட்டத்தைப் போன்றதுதான். இதன் பிரீமியம் மிகக்குறைவு.

- rajalakshmi.nirmal@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x