Published : 17 Dec 2018 11:58 AM
Last Updated : 17 Dec 2018 11:58 AM

அலசல்: தண்ணீர் பற்றாக்குறைக்கு இது மட்டுமே தீர்வாகாது!

நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்திலிருந்து நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் இந்தக் கட்டண முறையைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீரைப் பாட்டில்களில் அடைத்து விற்கும் நிறுவனங்கள், தொழில் காரணங்களுக்காக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்கள் இந்தக் கட்டண முறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறது.

நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், நிலத்தடி நீரைப் பாதுகாக்க மத்திய நிலத்தடி நீர் ஆணையம் இப்போதாவது ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறதே என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் இல்லை. 

பெரும்பாலான நிறுவனங்கள் இதையெல்லாம் பெரிய பொருட்டாகக் கருதாது. பணத்தைக் கொடுத்துவிட்டு, நிலத்தடி நீரை இஷ்டத்துக்கு உறிஞ்சும் வேலையில்தான் ஈடுபடும். அரசின் எந்த விதிமுறைகளையும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மூன்றாம் உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று பலமுறை பல அறிஞர்கள் கூறிவந்திருக்கிறார்கள். ஆனாலும்கூட நாம் இன்றும் தண்ணீர் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. தண்ணீர் பற்றாக்குறையும், மாசுபட்ட தண்ணீரும் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய கேடாக மாறும் நிலை ஏற்கெனவே உருவாகிவிட்டது.

உலக அளவில் 84.4 கோடி பேருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை. மாசுபட்ட தண்ணீரால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கை, போர், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

ஆறுகளில், கடலில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் மாசுபடுவதால் பல்லுயிர் பெருக்கம் தடைபட்டு சுற்றுச்சூழல் சுழற்சியையே முற்றிலுமாக சிதைத்துவிடுகின்றன. குப்பைகளை அகற்றவோ, குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கவோ சொல்லிக்கொள்ளக்கூடிய அளவிலான முயற்சிகள் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம். நீர்நிலைகளை சீரமைக்கவும், புணரமைக்கவும் எத்தனையோ திட்டங்களை அரசுகள் அறிவித்துள்ளன.

ஆனால் அவை இலக்கை எட்டும் அளவுக்கு முழுவீச்சில் செயல்படாமல் இருக்க என்ன காரணம்? மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு காலத்தில் மிகத் தீவிரமாக அரசுகள் பிரச்சாரம் செய்தன. ஆனால், அது முற்றிலும் தோல்வியடைந்த திட்டமாகவே உள்ளது. மழைநீர் சேகரிப்பு தொட்டிகளையே பார்க்க முடியாத அளவுக்குதான் திட்டம் இருக்கிறது.      

மழைப் பொழிவு குறைந்துவிட்ட நிலையில், நீர் ஆதாரங்களின் அடிப்படை பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்க்காமல், நீருக்குக் கட்டணம் மட்டுமே விதிப்பதால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே தவிர, அதனால் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினையோ, நீர் மாசுபடும் பிரச்சினையோ தீரப் போவதில்லை என்பதை அரசு உணர வேண்டும்.  தனிநபர்களும் தண்ணீர் பயன்பாட்டில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x