Published : 10 Dec 2018 06:10 PM
Last Updated : 10 Dec 2018 06:10 PM

‘மாஸ் எஸ்யுவி’ டாடா ‘ஹாரியர்’

டாடாவின் புதிய எஸ்யுவி குறித்து தொடர்ச்சியாக பல்வேறு டீசர்களை வெளியிட்டுவந்த நிலையில் கார் பிரியர்களுக்கு இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. தற்காலிகமாக ஹெச்5எக்ஸ் (H5X) என்று பெயரிடப்பட்ட எஸ்யுவிக்கு, ‘ஹாரியர்’ என்று பெயர் சூட்டி களத்தில் இறக்கியிருக்கிறது.  

5 பேர் பயணிக்கக்கூடிய இந்த எஸ்யுவி எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கார் பிரியர்கள். ஏனென்றால், அதற்கு காரணம் இந்தக் கார், ஜாகுவார் லேண்ட் ரோவர் எல் 550 கார்கள் தயரிக்கப்படும் ஒமேகா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது.

மிக உயர் தரத்திலான பிளாட்பார்மில் தயாரிக்கப்படுவதால், இதன் விலையும் அதிகமாகும் என்று திட்டமிட்ட டாடா நிறுவனம், இதன் விலையை முடிந்தவரைக் குறைக்க முடிவு செய்து, அலுமினியத்தில் இல்லாமல், சேஸிஸ் மற்றும் உதிரி பாகங்களை உயர்வகை இரும்பில் தயாரித்துள்ளன. இதனால் நல்ல பிளாட்பார்மில், அட்டகாசமான வடிவமைப்பில், பல்வேறு வசதிகளுடன் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் எடை மட்டும் சற்று அதிகம். 

மேலும் டாடா ஹாரியர் எஸ்யுவிக்கான இன்ஜினை ஃபியட் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது. ஃபியட்டின் கிரையோடெக் 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரும், 350என்எம் டார்க் திறனும் கொண்டு, 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்டைலான புரொஜெக்டர் ஹெட்லைட் நிசான் ஜூக்கிலிருந்து இன்ஸ்பயர் ஆகி கிளஸ்டர் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் டேலைட் ஜாகுவார் கார்களில் இருப்பதுபோல ஸ்லீக் ஸ்டைலில் உள்ளது. காரின் பக்கவாட்டு பகுதியில் பார்க்கும்போது காரின் ஜன்னல் மற்றும் கூரை வடிவமைப்பு அழகாக உள்ளது. மேலும், மெட்டாலிக் டச்சில் ஹாரியர் என்ற எம்பாஸ் செய்யப்பட்ட எழுத்துகள் சிறப்பாக உள்ளன.

சொகுசுக்கும், நல்ல வடிவமைப்புக்கும் ஏற்ற வகையில் காரின் அளவுகள் உள்ளன. இது 4598மிமீ நீளம், 1894 மிமீ அகலம் , மற்றும் 1706 மிமீ உயரத்துடன், 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. தாராளமான இடவசதி உள்ளது. காரின் வடிவமைப்பு எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக இருக்கிறது ஆனால், 17 அங்குல டயர் உள்ள இந்தக் காரின் சக்கரங்கள் மெச்சும் வகையில் இல்லாமல் சாதாரணமாகவே உள்ளது.

ஹாரியரின் கேபினைப் பொறுத்தவரை வாயடைத்துப் போகும் அளவுக்கு இருக்கிறது. இதுவரையிலும் டாடா கார் பற்றி கார் பிரியர்களுக்கு அத்தனை குறைகளையும் போக்கும் வகையில் கேபின் வடிவமைப்பு உள்ளது.

டாடா காரில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் கூட வரலாம். ஜாகுவார் கார்களில் இருப்பதுபோலவே, டாப் கிளாஸ் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருக்கைகள் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியில் உருவாக்கப்பட்டுள்ளன. டேஷ் போர்டில் மாக் வுட் பினிஷ் உள்ளது. 8.8 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக உள்ளது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளும் உள்ளன.

ஜேபிஎல் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. ஓடோமீட்டர், எரிபொருள் இண்டிகேட்டர் உள்ள திரையில் கூடுதல் வசதிகள் உள்ளன. நாம் எந்த மாதிரியான சாலையில் பயணிக்கிறோம், எந்த டிரைவ் மோடில் இருக்கிறோம் என்பதெல்லாம் எடுத்து சொல்லும் டிஜிட்டல் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் உள்ளது. 

ஆனாலும், கேபினில் சில குறைகளும் உள்ளன. ஹாண்ட்பிரேக் அழகாக இருந்தாலும், கையாள்வதில் பிரச்சினைகள் உள்ளன. மேலும், யுஎஸ்பி போர்ட் ஆகியவை வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தேட வேண்டியதாக இருக்கிறது. மிரர்கள் சற்று ரிஜிட்டாக இருப்பதால் கிளியர் வியூ இல்லாத நிலை உள்ளது. பிளைன்ட் ஸ்பாட் அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு விஷயங்களிலும் ஹாரியர் கூடுதல் பாராட்டுகளைப் பெறுவதாக இருக்கிறது. டாப் வேரியன்ட் ஹாரியரில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் இபிடி பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம், ஆஃப் ரோடு ஏபிஎஸ், ஹில் ஹோல்டு, ஹில் டெசன்ட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.  ஹாரியரின் பூட் கொள்ளளவு 425-810 லிட்டர் வரை உள்ளது. 

இதில் ஆஃப் ரோடு சாகசங்களுக்காக டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் உள்ளது. சாலைகளுக்கு ஏற்ப Normal, Rough மற்றும் Wet ஆகிய மோடுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் 4வீல் டிரைவ் சிஸ்டம் இல்லாதது குறை. பெர்பாமென்ஸை பொருத்தவரை பெரிய குறை ஏதுமில்லை. ஆனால், இன்ஜினின் அதிகபட்ச திறனை வெளிப்படுத்துவதில் சற்று திணறுகிறது.

பல சிறப்பம்சங்களை இந்த ஹாரியர் எஸ்யுவி காரில் ரூஃப் டாப் ஸ்கிரீன் இல்லாதது பெரியகுறை. இதன் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x