Published : 10 Dec 2018 05:34 PM
Last Updated : 10 Dec 2018 05:34 PM

இன்ஸ்டாகிராமிலும் வருகிறது இ-காமர்ஸ் 

இனிவரும் தலைமுறையினரின் பொழுதுபோக்கு இணையத்துக்குள் வலம் வருவதுதான். கடை கடையாய் ஏறி இறங்க வேண்டியதில்லை, மால்களில் கால் வலிக்க ஒரு மூலைக்கும் இன்னொரு மூலைக்கும் நடக்க வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரத்யேக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கிவிட்டன. தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் நிறுவனமும் இ-காமர்ஸ் தளமாக மாறப் போகிறது.

இதுவரையிலும் போட்டோக்களை பதிவேற்றம் செய்வதும், பிடித்த போட்டோக்களுக்கு லைக் போடுவது என மட்டுமே இருந்த இன்ஸ்டாகிராமில், இனி, பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான ஃபேஷன் சார்ந்த பொருள்களையும் இன்ஸ்டாகிராமிலேயே வாங்கிக் கொள்ளலாம். அப்படியொரு வசதியை விரைவில் கொண்டு வருகிறது. இ-காமர்ஸ் தளங்களுக்கு உரித்தான அல்காரிதம், டேட்டா அனாலிட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் பொருளை உங்கள் கண்முன் கொண்டுவரப் போகிறது. அதாவது நீங்கள் லைக் செய்யும் புகைப்ப டத்துக்கு அருகிலேயே அந்தப் புகைப்படத்தில் உள்ள ஃபேஷன் சார்ந்த பொருளை வாங்குவதற்கான ஆப்ஷனும் வரப் போகிறது. ஒரு பிரபல நடிகர் அல்லது நடிகை படம் இருக்கிறது என்றால், அவர்கள் அணிந்திருக்கும் உடை, கைக்கடிகாரம், அணிகலன்கள் போன்றவற்றை வாங்குவதற்கான ஆப்ஷன்களும் இருக்கப் போகின்றன.

ஆரம்பத்தில், இன்ஸ்டாகிராம் பல்வேறு விற்பனையாளர்களுடன் சேர்ந்து இந்த சேவையை வழங்கவிருக்கிறது. நீங்கள் பொருளை வாங்குவதற்கான ஆப்ஷனை அழுத்தினால் அது அந்தப் பொருளை விற்பனை செய்யும் விற்பனை தளப் பக்கத்துக்குச் செல்லும். இந்த சேவையானது முழுக்க முழுக்க ‘காஸ்ட் பெர் சேல்’ அடிப்படையில் தான் பொருளின் பக்கத்துக்குச் செல்லும். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் என்ற வகையில் ஏற்கெனவே பொருள்களை விற்பனை செய்வதற்கு உதவியாக இருந்துவருகிறது. இதை இன்னும் முழுமையான நேரடியான இ-காமர்ஸ் விற்பனையாக மாற்றும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் இறங்குகிறது. இந்த முயற்சி வெற்றிகண்ட பின்னர், இன்ஸ்டாகிராம் நிறுவனமே முன்னின்று பொருள்கள்களை விற்பனை செய்யும் தளமாக மாற உள்ளது. பேமென்ட் உள்ளிட்ட பிற விஷயங்கள் தெளிவானதும் இன்ஸ்டாகிராம் நேரடியாக வர்த்தகத்தில் இறங்கும். அடுத்த ஆண்டு பாதியில் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இது பல்வேறு பிராண்டுகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் சாதகமாக இருந்தாலும், ஏற்கெனவே சந்தையில் முன்னணியில் உள்ள இவர்களுக்குப் போட்டியாக உருவெடுக்கும். தற்போது இந்திய ஆன்லைன் ஃபேஷன் சந்தையில் 80 சதவீதம் பிளிப்கார்ட்டின் மிந்த்ரா மற்றும் அமேசான் ஆதிக்கத்தில்தான் உள்ளன. சமீபத்தில் கூகுள், ஃபேஸ்புக் ஆகியவையும் களமிறங்கியுள்ளன. இன்ஸ்டாகிராமும் வரும் ஆண்டில் நுழைகிறது. இதனால் போட்டி அதிகமாகும் வாய்ப்புள்ளது. லாஜிஸ்டிக்ஸ், பேமென்ட், ரிட்டர்ன் உள்ளிட்ட வசதிகளில் சரியாகத் திட்டமிட்டால் ஆன்லைன் சந்தையில் இன்ஸ்டாகிராம் பெரிய அளவில் சந்தையை உருவாக்கும்.

குறிப்பிடத்தக்க பாலோயிங் கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் அவர்களுடைய நுகர்வோர்களை தங்களின் இ-காமர்ஸ் தளங்களுக்கு இட்டுச் செல்லும் வசதியைப் பெற முடியும். பயனாளர்களும் தாங்கள் வாங்க விரும்பும் பொருள் இருக்கிறதா இல்லையா என்பதை இன்ஸ்டாகிராமிலேயே தெரிந்துகொள்ளலாம்.

ஃபேஷன் தொடர்பான தொழில்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இன்ஸ்டாகிராமில் உள்ளன. ஏனெனில் அமெரிக்காவுக்குப் பிறகு அதிக அளவில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கொண்டது இந்தியாதான். இந்தியாவில் 7 கோடி பேர் இன்ஸ்டாகிராம் பயனாளர்களாக உள்ளனர். எனவே இதனை அடுத்தகட்ட வர்த்தகத்துக்காக பயன்படுத்தும் உத்தியைத் திட்டமிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x