Published : 10 Dec 2018 05:30 PM
Last Updated : 10 Dec 2018 05:30 PM

பேரிடர் இழப்பீடுகளை எவ்வாறு கணக்கிடுவது?

இயற்கைப் பேரிடர்களில் வழங்கப்படும் இழப்பீடுகள் என்பவை இதுவரையிலும் அரசியல் சம்பிரதாயமாக இருந்துள்ளதே தவிர, இழப்பீடுகள் ஒருபோதும் சரியான அளவீட்டு முறையில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டதில்லை. ஏனெனில் நம்மிடம் இழப்பீட்டை அளவிடக்கூடிய ஒரு அறிவியல் சார்ந்த அளவீட்டு முறை இதுவரையிலும் இல்லை.

இதனால், புயல் வெள்ளம் போன்ற தீவிர பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பீடுகளை அளவிடுவது மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. தொடர்ந்து பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துவந்த நிலையிலும் இழப்பீடுகளை அளவிடுவது குறித்த ஆக்கபூர்வமான விவாதங்களை நாம் முன்னெடுக்கவில்லை. இந்தக் கட்டுரை அப்படியொரு விவாதத்தை தொடங்கும் முயற்சி எனலாம்.

சமீபத்தில் பன்னிரண்டு மாவட்டங்களைத் தாக்கி கோரத்தாண்டவம் ஆடிய ‘கஜா' புயல், அவற்றில் ஒன்பது மாவட்டங்களை மிகவும் கடுமையாகத் தாக்கி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நேரடியான தாக்கம் ஏற்பட்டது மட்டுமின்றி, தமிழகத்தின் இதர பகுதிகளின் பொருளாதாரத்திலும் கணிசமான மறைமுகத் தாக்கத்தை இப்புயல் ஏற்படுத்தியுள்ளது என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று.

டெல்டா விவசாயிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தண்ணீர் பிரச்சினை மற்றும் இதர இடுபொருள் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக நெல் போன்ற தொன்று தொட்டு பயிரிடப்படும் பயிர்களிலிருந்து தென்னை போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறியுள்ளனர். தென்னை சாகுபடியில் ஓரளவுக்கு கணிசமான லாபமும் பெற்றுள்ளனர் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

பொதுவாக, தென்னை அறுவடை என்பது, தேங்காய் மொத்த கொள்முதல் வியாபாரிக்கும் தென்னை விவசாயிக்கும் ஒரு ஒப்பந்த அடிப்படையில் நிகழ்வதென்பதால், தேங்காயிற்கான விலையில் நிலைத்த தன்மையும், எதிர்கால விலையில் நம்பகத் தன்மையும் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தந்துள்ளது!.

மேலும், விவசாயி மொத்த வியாபாரியிடமிருந்து முன்பணம் பெறுவது எளிதாவதுடன், அதற்கான வட்டி செலவு, தேங்காய் அறுவடை செய்ய ஆள் கூலி, தேங்காய் ஏற்றுமதிக்கான போக்குவரத்து செலவு போன்ற ‘பரிவர்த்தனை' செலவுகளை மொத்த வியாபாரியும் கணிசமான அளவு பகிர்ந்து கொள்வதால், விவசாயி களுக்கு தென்னை சாகுபடி மற்ற பயிர்களைக் காட்டிலும் லாபகரமானதாக உள்ளது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களிலுள்ள அனைத்து விவசாயிகளும் பெரும் இழப்பை சந்தித்தனர். புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைக் கணக்கிடுவது கடினமான ஒன்றே! ஏனெனில், சில இழப்புகள் நேரடியானவை, வேறு சிலதோ மறைமுகமானவை; சில இழப்புக்கள் குறுகிய காலத்தவை, வேறு சிலதோ நீண்ட கால இழப்புகள். சில இழப்புகள் குறுகிய நில அமைப்புக்குள் ஏற்படக் கூடியவை;

சிலதோ, வெகு தொலைவு வரை உணரப்படுபவை. சில இழப்புகளை பணத்தால் அளவிட்டு இழப்பீடுகளை வழங்க முடியும்; வேறு சில இழப்புக்களையோ அவ்வாறு அளவிட முடியாது. சில இழப்புகள் அகநிலையில் மட்டும் உணரப்படுபவை. ஆகவேதான், இழப்புகளை மதிப்பிடுவதும், அதற்கான இழப்பீடுகளை வழங்குவதும் எம்போதுமே விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.

உதாரணமாக, . தென்னை ஒரு நீண்டகாலப் பயிர் என்பதால், புயலால் ஏற்பட்ட இழப்பின் தாக்கமும் நீண்ட காலங்களுக்கு உணரப்படும். தமிழக அரசு கஜா புயலால் தென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை ஒரு மரத்திற்கு ரூ.1512 என்று கணக்கிட்டு அதை நிவாரணமாக அளித்து வருவதாக அறிகிறோம்.

இதில், வீழ்ந்த தென்னைக்கு இழப்பீடாக ரூ. 600ம், அதை அறுத்து அகற்றுவதற்கு ரூ. 500ம், புதிய கன்றை நடுவதற்கு ரூ. 321ம் மற்றும் அதைப் பராமரிக்க ரூ. 100ம் அடங்கும். ஒரு ஏக்கரில், 70 மரங்கள் நட்டால், ஒரு ஹெக்டருக்கு 175 மரங்கள் நடைமுடியும். ஆக, ஒரு ஹெக்டருக்கு அரசாங்கத்தின் கணக்கின்படி இழப்பீட்டுத்தொகை ரூ. 2,64,600.

விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஒரு தென்னை மரம் வீழும்போது அதன் உண்மையான இழப்பு, அதனால் விளையும் அனைத்துப் பயன்களின் மொத்த இழப்பையும் உள்ளடக்கியது. உதாரணமாக, வீழ்ந்த மரத்திற்குப் பதிலாக புதிதாக ஒரு தென்னங்கன்றை நட்டு, மரமாக்கி அதைப் பயனுக்கு கொண்டு வர குறைந்தது 5 வருடங்கள் பிடிக்கும்.

ஒரு மரம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 200 காய்களைத் தரும் (சில மரங்கள் 1000 காய்களும், ஒரு சில மரங்கள் 50 காய்களும் மட்டுமே தரும். குறைந்தபட்ச சராசரி அளவாக 70 காய்கள் என்று வைத்துக்கொள்ளலாம்). ஒரு காயின் விலை சராசரியாக ரூ. 10 என்று கணக்கிட்டால், ஒரு மரம் ஒரு ஆண்டுக்கு ரூ. 2000 மதிப்புள்ள காய்களைக் கொடுக்கும். வீழ்ந்த மரத்தினால் ஏற்படும் இந்த இழப்பு புதிய மரம் பலன் தரும்வரை குறைந்தது ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதால், ஐந்து வருடத்திய இழப்பின் தற்போதய நிகர மதிப்பை (net present value) கணக்கிட வேண்டும்.

ரூ. 2000த்தின் உண்மை மதிப்பு வரவிருக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்து கொண்டே செல்வதால், வரவிருக்கும் ஒவ்வொரு ஆண்டின் ரூ. 2000த்தின் மதிப்பையும் 6 சதவீத கழிவு வீதத்தில் (discount rate) கணக்கிட்டால் நமக்கு கிடைக்கும் ஐந்து ஆண்டுகளின் இழப்பின் தற்போதய மொத்த மதிப்பு ஒரு ஹெக்டருக்கு ரூ. 15,71,640 ஆகும்.

இத்துடன் வீழ்ந்த மரத்தை அறுத்து அகற்ற மற்றும் புதிய கன்றை நட்டுப் பராமரிப்பதற்கு அரசு கணக்கிட்ட ஒரு ஹெக்டருக்கான ரூ. 1,59,600.00 ஐ கூட்டும்பட்சத்தில் மொத்த இழப்பு ஒரு ஹெகேட்டருக்கு ரூ. 17,31,240 ஆகக் கணக்கிடப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மொத்த தென்னை சாகுபடிப் பரப்பளவு 30100 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, இதன் மொத்த இழப்பு ரூ. 5,211 கோடிகளாகும்.

இது தேங்காயினால் ஏற்படும் நேரடி வருவாய் இழப்பு மட்டுமே. இது தவிர, தென்னங்கீற்று, தென்னை நார், போன்ற தென்னையிலிருந்து கிடைக்கும் மற்ற பயனுள்ள பொருள்களையும் கணக்கி லெடுக்கும்பட்சத்தில், நேரடி இழப்பின் மொத்த மதிப்பு கணிசமாக உயரக்கூடும். மாற்றுப் பயிரில் வருவாய் அதிகமென்றாலும், பேரிடர் காலங்களில் ஏற்படும் எதிர்பாரா இழப்பு க்களும் மிக அதிகம் என்பது கண்கூடு!

நேரடி இழப்புக்கள் மட்டுமன்றி, மறை முக இழப்புக்கள் ஏராளம். உதாரணமாக, பெருவாரியான தென்னை மரங்கள் புயலில் வீழும்போது தேங்காய், கீற்று மற்றும் இதர தென்னை சார்ந்த பொருள்களின் உற்பத்தி திடீரென குறைந்து இப்பொருள்களுக்கான விலை அதிகரிக்கும். இதனால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து இப்பொருள்களை வாங்க நேரிடுவதால், அவர்களின் நுகர்வு சார்ந்த நலனில் தொய்வு ஏற்படும்.

மேலும், தென்னை சார்ந்த ஏராளமான மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் வருவாயும் கடுமை யாக பாதிக்கப்படும். உதாரணமாக, மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், கீற்றுப் பின்னும் தொழி லாளர்கள், கயிறு திரிப்பவர்கள், எண்ணெய் மில்களில் பணிபுரிவோர் மற்றும் வாகன ஓட்டு னர்கள் போன்றோரின் வேலை மற்றும் வருவாய் இழப்பு குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி, சுற்றுச்சூழல் சார்ந்த பணமதிப்பில் கணக்கிட முடியாத இழப்பு களும் அதிகம். உதாரணமாக, தென்னை சார்ந்த பல்லுயிர் பெருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பயன்களின் இழப்பு. உதார ணமாக, தென்னந்தோப்புகளில் காணப் படும் தேனீக்கள் மற்ற பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் தென் னையல்லாத விவசாயிகளுக்கும் அதிக லாபத்தினை ஈட்டித்தருகின்றன. தென்னந் தோப்புகளில் பரவலாகக் காணப்படும் ஆந்தையினம், எலிகளை அழித்தொழித்து அதன்மூலம் ஒட்டுமொத்த விவசாயத்திற்கும் நன்மை விளைவிக்கின்றன.

தென்னை மரங்கள் கரியமில வாயுவை கிரகிப்பதன்மூலம், புவி வெப்பமடைவதைக் குறைத்து மனித இனத்திற்கு முக்கிய பயனளிக்கிறது. புயலினால் தென்னந்தோப்பு கள் அழியும்போது, இத்தகைய மகத்தான சமூகப் பயன்களும் அழிகின்றன.

தென்னையைப் போலவே மற்ற மா, பலா, வாழை போன்ற மரங்களுக்கும் புயலி னால் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக இழப்பை சரியான அணுகுமுறை கொண்டு கணக்கிடும் பட்சத்தில், மொத்த இழப்பும் பொருளாதாரத்தில் மிகக் கணிசமான பங்கு வகிப்பதை அறிந்து கொள்ளலாம்.

இழப்புகளைச் சரியாக அளவிட என்ன செய்யலாம்?

1. பேரழிவினால் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான பாதிப்புகளைக் சரியாகக் கணக்கிட அறிவியல் சார்ந்த மதிப்பீட்டு முறைகளை நமது சமூக, பொருளாதார, நில அமைப்பு மற்றும் சூழலுக்கேற்ற முறையில் உடனடியாக உருவாக்கிட வேண்டும். இதன் மூலம், சேத மதிப்பீடு மற்றும் இழப்பீட்டை அளவிடுதல் போன்றவற்றை சரியாகவும், விரைவாகவும் கணக்கிட முடியும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் மொத்த மக் கள் தொகை, நில உபயோகம், பயிரிடப்பட் டுள்ள நிலங்களின் அளவு, என்னென்ன பயிர் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு பயிர் செய்யப்பட்டுள்ளது, கால்நடைகளின் எண் ணிக்கை போன்ற அடிப்படைப் புள்ளி விவரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு முறையாக ஆவணப் படுத்த வேண் டும்.

3. ஒவ்வொரு விவசாயியையும் பயிர் பாது காப்புத் தோட்டத்திற்குள் கொண்டு வந்து, பேரிடர்காலங்களில் ஏற்படும் இழப்பிற்கு அவர்களுக்கு முழுமையான இழப் பீடுகளை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இதில், தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்தி அரசாங்கம் விவசாயிகளுக்கும் காப் பீட்டு நிறுவனத்திற்கும் பாலமாக விளங்கு வதன்மூலம் மக்களின் வரிப் பணத்தை சேமிப்பது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர முடியும்.

தொடர்பு கொள்ள: venkatmids@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x