Published : 03 Dec 2018 11:26 AM
Last Updated : 03 Dec 2018 11:26 AM

மகிழ்ச்சியான பணியிடங்கள் உருவாகட்டும்

இன்று வேலை கிடைப்பதெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், மகிழ்ச்சியான சூழலில் வேலை கிடைக்கிறதா என்பதுதான் பிரச்சினை. நிறுவனங்களின் போட்டி, அதிகரித்துவரும் தனிநபர் மற்றும் குடும்பத் தேவைகள், பல்வேறு சமூக, பொருளாதார நெருக்கடிகள் என ஒவ்வொரு நாளும் பணியிட சூழலை அழுத்தத்துக்குள்ளாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இதனால் வேலை பளு, அதிகக் கடன், உறவுகளில் பிரச்சினை எனப் பெரிதாகி அவை வாழ்க்கையையே சிதைத்துவிடுகின்றன. வேலைக்காக வாழ்கிறோமா, வாழ்வதற்காக வேலை செய்கிறோமா என்ற கேள்வியை ஏதோ ஒரு தருணத்தில் எல்லோருடைய மனதிலும் உண்டாக்கிவிடுகிறது.

இத்தகைய நெருக்கடியான, அழுத்தமான சூழல் பணியிடங்களில் இருப்பதால் உற்பத்தியும் குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மகிழ்ச்சியான பணியாளர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த நிறுவனம் நன்றாக முன்னேறுகிறது என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான பணியிடங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?

என்னதான் நிறுவனங்களில் நல்ல சம்பளம், காப்பீடு வசதி, போனஸ், ஊக்கத் தொகை என அனைத்தும் இருந்தாலும், ஒரு பணியாளரின் பணியிடச் சூழல் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமும் நிறுவனங்களுக்கு உள்ளது. அதற்குப் பணியாளர்களை அணுகும் முறையில் சில உத்திகளைக் கையாளவேண்டியிருக்கிறது.

பணியாளர்கள் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் குறைவில்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலையைக் கொடுத்தோமா, அதைச் செய்து முடித்தார்களா, சம்பளத்தைக் கொடுத்தோமா என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பணியாளர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது குடும்பச் சூழல், கடன், எதிர்பார்ப்புகள், தேவைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது தனிநபரின் விஷயங்களில் மூக்கை நுழைப்பதாகிவிடுமே என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால், எதையும் தனிப்பட்ட முறையில் செய்தால்தான் அது மூக்கை நுழைப்பது. அதையே பொதுவாக்கினால் அது உத்தி.

ஒரு ஆய்வில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பிரச்சினைகளை எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டபோது, 27 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பணியாளர்களின் மோசமான நிதி நிலை குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

61 சதவீத நிறுவனங்கள் பணியாளர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதில் ஏதோ ஒரு முயற்சியை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பணியாளர்களைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமானதாக இருப்பதாகச் சொல்கின்றன பெரும்பாலான நிறுவனங்கள். புரிந்துகொண்டால்தானே அவர்களுக்கான தீர்வுகளைக் கொடுக்க முடியும் என்கின்றன. இதற்கு பணியாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

ஏனெனில் இன்றைய நுகர்வுப் பொருளாதார சூழலில் நிதிநிலை தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணம். இதைச் சரிசெய்ய பணியாளர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதில் சில உத்திகளைச் செயல்படுத்தலாம்.

பணியாளர்களின், தேவை, கடன், எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப சரியாகத் திட்டமிட, நிறுவனம் சார்பாக ஆலோசகர்களை நியமிப்பது, நிதிநிலையில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிய பணியாளர்களுக்கு உதவுவது போன்றவற்றைச் செய்யலாம்.

பணியாளர்களின் நெருக்கடியான தருணங்களில் நிறுவனம் சார்பாக செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ள திட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நெருக்கடியான சமயங்களில் சம்பளத்தில் கடன் கொடுப்பது, பிஎப் தொகையைப் பெற உதவுவது போன்றவை உதாரணங்கள்.

அடுத்து மன ரீதியான பிரச்சினைகளைச் சரிசெய்துகொள்ள நிறுவனங்கள் சார்பாக உளவியலாளரை நியமிக்கலாம். இதற்கெல்லாம் மேல் பணியாளர்கள் பிரச்சினைகளைச் சுதந்திரமாகப் பேசும் வெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

பணியாளர்களை அழுத்தத்திலிருந்து மீள உதவும் உருப்படியான நிகழ்ச்சிகள் (பார்ட்டிகள் அல்ல) நடத்தலாம். வேலையைச் சரியாகச் செய்ய பயிற்சி கொடுப்பது போலவே, மகிழ்ச்சியாக வேலையைச் செய்ய மனதைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமான பயிற்சிகளையும் கொடுக்கலாம்.

இவையெல்லாம் பணியிடச் சூழலை மகிழ்ச்சியாக்குவதோடு, உற்பத்தியைப் பெருக்குவதோடு, பல தற்கொலைகளையும் தடுக்க வல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x