Published : 19 Nov 2018 11:50 AM
Last Updated : 19 Nov 2018 11:50 AM

டூவீலர் சந்தையில் மீண்டும் ‘ஜாவா’

ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று ‘ஜாவா’. பைக் ரேஸ்களில் கூட ஜாவா பைக்குகள் பலமுறை முதலிடத்தைப் பிடித்துள்ளன. இன்றும் பைக் பிரியர்கள் எங்காவது ஜாவா பைக்குகளைப் பார்த்துவிட்டால் போதும், அவர்களிடம் பைக்கை பற்றி விசாரிக்காமல் விடமாட்டார்கள்.

ஆனால், இடையில் ஜாவா தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் முயற்சியில் மீண்டும் ஜாவா புதுஜென்மம் எடுத்திருக்கிறது. அதுவும் அதே ஒரிஜினல் ஜாவா இன்ஜினுடன் நவீன தலைமுறை இளைஞர்களின் விருப்பம், ஸ்டைல் ஆகியவற்றுக்கேற்ப புதுமையான டிசைன்களுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் மூன்று ஜாவா மாடல்களை நவம்பர் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம்.

ஆனந்த் மஹிந்திரா, போமன் இரானி, அனுபம் தரேஜா ஆகியோர் இணைந்து உருவாக்கிய கிளாசிக் லெஜண்ட்ஸ் என்ற நிறுவனம் ஜாவா பைக்குகளின் உற்பத்தி, சந்தைப் படுத்துதல், சேவை ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கம் உலகப் புகழ்பெற்ற ஜாவா பைக்குகளை மீண்டும் பைக் பிரியர்களுக்காக சந்தையில் களமிறக்குவதுதான்.

இந்த நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகள் மஹிந்திரா வசம் உள்ளன. மஹிந்திரா நிறுவனம் பெரிய அளவில் டூவீலர் சந்தையில் களமிறங்காமல் இருந்தது. ஆனந்த் மஹிந்திராவிடம் நீண்டகாலமாகக் கேட்பட்டுவந்த கேள்விக்கு பதிலாக ஜாவா பைக்குகளை களமிறக்குவதாக அவர் கூறினார்.

ஜாவா பைக்குகள் குறித்து கடந்த சில மாதங்களாகவே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் ஜாவா, ஜாவா 42 (Forty Two), ஜாவா பெராக் (Perak) ஆகிய மூன்று ஜாவா மாடல்களை அறிமுகப்படுத்தி அசத்திவிட்டார்கள். சமீபத்தில் பைக் வாங்கியவர்கள் சில காலம் காத்திருந்திருக்கலாமோ என்று நினைக்கும் அளவுக்கு இருக்கின்றன இந்த மாடல்கள்.

இந்த ஜாவா பைக்குகளை பழைய ஜாவா பைக்குகளின் உற்பத்தியில் அனுபவம் உள்ள இத்தாலிய டிசைனர்களோடு, இந்திய டிசைனர்களும் இணைந்து வடிவமைத்துள்ளார்கள். இதில் ஜாவா அப்படியே 1960-களில் இந்தியாவில் விற்பனையான பழைய ஜாவா 250 டைப்-A பைக்குகளின் டிசைனைக் கொண்டுள்ளது. இது பழமையை விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜாவா பைக்குகளுக்கே உரித்தான சத்தமும் இதில் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 

வட்டமான ஹாலோஜன் ஹெட்லைட், அதற்கு மேலே அனலாக் ஸ்பீடோமீட்டர், குரோம் பினிஷில் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், தட்டையான சிங்கிள் சீட், இரட்டை பீஷூட்டர் எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை பழைய ஜாவா பைக்குகளை ஞாபகப்படுத்துவது போலவே உள்ளன. இந்த ஜாவா பைக்குகள் கறுப்பு, மெரூன், கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன.

ஜாவா 42 பைக் சில விஷயங்களில் ஜாவா பைக்கிலிருந்து மாறுபடுகிறது. இதன் சிங்கிள் டோன் மேட் மற்றும் கிளாஸ் பினிஷ் வண்ணங்கள், அனலாக் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டுள்ள விதம், குரோம் பினிஷுக்குப் பதிலாக கறுப்பு மேட் பினிஷ் எனப் பார்க்கவே அம்சமாக உள்ளது. ஜாவா 42 பைக்குகள் அடர், வெளிர், பச்சை,/நீலம் என 4 மேட் பினிஷ் வண்ணங்களிலும், சிவப்பு, நீலம் என இரண்டு கிளாஸ் பினிஷ் வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜாபா பெராக் பைக்கின் அட்டகாச டிசைன் எப்போது இது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பும் அளவுக்கு இருக்கிறது. குரூசர் டைப் பைக்கான ஜாவா பெராக்,  முழுவதும் மேட் பினிஷில் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகான சிங்கிள் சீட், சீட்டுக்கு அடியில் மோனோஷாக் சஸ்பென்சன், கம்பீரமான ஹேண்டில்பார், அதன் இரு விளிம்பிலும் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள், வண்டியின் அழகைக் கெடுக்காத வகையில் டூல் பாக்ஸ், நீளமான வீல்பேஸ், சிறிய அழகான எக்ஸாஸ்ட் பைப்புகள் மற்றும் பைரலி டயர்கள் என அனைத்தும்  சிறப்பு அம்சங்கள்.

ஜாவா, ஜாவா 42 இரண்டும் சிங்கிள் சிலிண்டர் 300 சிசி திறன் நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டுள்ளன. ஜாவா பெராக் 334 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த மூன்று மாடலிலும் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் கியர்கள் உள்ளன.

மூன்றிலும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கிக்கர் வசதி இல்லை. இவற்றின் பிரேக்குகள் ஏபிஎஸ் அம்சத்துடன் இருக்கின்றன. முக்கியமாக இந்த மூன்று புது ஜாவா பைக்குகளும் 2020 ஏப்ரல் அமலுக்கு வரப் போகிற பிஎஸ் 6 தர இன்ஜின்களுடன் அட்வான்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த மூன்று ஜாவா மாடல்களின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே ரூ. 1.64 லட்சம், ரூ. 1.55 லட்சம், ரூ. 1.89 லட்சம் ஆகும். 2019 தொடக்கத்தில் ஜாவா, ஜாவா 42 பைக்குகள் சந்தையில் களமிறங்கும். ஜாவா பெராக் பற்றிய தகவல்கள் அதன் பிறகு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் 105 டீலர்களை நிர்ணயித்திருக்கும் கிளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், அதில் 64 டீலர்களை முழு செயல்திறனுடன் அமைத்துள்ளது. விரைவில் பிற டீலர்களையும் தயார்நிலைக்குக் கொண்டுவந்துவிடும். முதல் ஜாவா டீலர்ஷிப், அடுத்த மாதத்தில் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 2019 முதல் ஜாவா பைக் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது, சந்தையிலுள்ள சவால்களைக் கடந்து எப்படி வாடிக்கையாளர்களைச் சென்றடையப் போகிறது, இதன் மைலேஜ், பராமரிப்பு செலவு போன்றவை என்ன என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். ஆனால், “சாய்ஸ்கள் அதிகமாகும்போது, தானாகாவே சந்தை விரிவடையும். போட்டிகளுக்கிடையில் சரியானதை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அனுபம் தரேஜா. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x