Published : 12 Nov 2018 10:28 AM
Last Updated : 12 Nov 2018 10:28 AM

யமஹா பிரீ கோ அறிமுகம்

இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் யமஹா நிறுவனம் இந்தோனேசியாவில் தனது பிரீ கோ ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 125 சிசி திறன் கொண்டதாகும். இந்தோனேசியாவில் உள்ள யமஹா ஆலை இந்த ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. முதலாண்டிலேயே ஒரு லட்சம் ஸ்கூட்டரை விற்பனை செய்துவிட வேண்டும் என்ற இலக்குடன் இது அறிமுகமாகியுள்ளது.

வழக்கமான மாடல் ஸ்கூட்டர்களை விட இதில் சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம், ஸ்மார்ட் கீ மற்றும் ஏபிஎஸ் ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 89,488 ஆகும். இதில் உள்ள பிரீமியம் மாடல் விலை ரூ. 1.09 லட்சமாகும். இதில் உள்ளது நிறுவனத்தின் புளூகோர் 125 சிசி இன்ஜினாகும். இது 9.4 ஹெச்பி மற்றும் 9.5 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியது. இது குடும்பத்தினருக்கு ஏற்ற ஸ்கூட்டர் என்று யமஹா நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. முன்பகுதியிலேயே அதாவது ஹேண்டில் பாருக்குக் கீழே பெட்ரோல் டேங்க் உள்ளது. இதனால் சீட்டுக்கு அடியில் பொருள்களை வைப்பதற்கு அதிக இட வசதி உள்ளது. இதில் முன்பகுதியில் டிஜிட்டல் எல்சிடி திரை உள்ளது. 720 மி.மீ.நீளமான சீட், எல்இடி முகப்பு விளக்கு, மொபைல் சார்ஜர் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

இந்தியாவைப் போன்றே இந்தோனேசியாவிலும்  போக்குவரத்துக்கு இருசக்கர வாகனங்களை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 58 லட்சம் இருசக்கர வாகனங்கள் இந்தோனேசியாவில் விற்பனையாகியுள்ளது. இதில் ஸ்கூட்டர்கள் மட்டும் 48 லட்சமாகும். ஸ்கூட்டர் சந்தை 83 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்தோனேசியாவில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x