Published : 12 Nov 2018 10:13 AM
Last Updated : 12 Nov 2018 10:13 AM

நெருக்கடியில் டபிள்யூடிஓ

உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யூடிஓ) உலகம் முழுவதும் வர்த்தகத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டபிள்யூடிஓ அமைப்பை பேரழிவு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டதிலிருந்தே இதன் முக்கியத்துவம் சிதைய ஆரம்பித்துவிட்டது. அதற்கும் மேலாக டபிள்யூடிஓ- வின் திறந்த வர்த்தகக் கொள்கையை  மோசமான பரிவர்த்தனை என்று குறிப்பிட்டதோடு, டபிள்யூடிஓ அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.

பொதுவாக வர்த்தகத்தில் பிரச்சினை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட நாடுகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை டபிள்யூடிஓ எடுக்கும். இதுவரை இதுதான் நடைமுறையில் இருந்தது. இதற்கு முன்பு வரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் டபிள்யூடிஓ அமைப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்தது கிடையாது. இதனாலேயே அமெரிக்காவுடன் வர்த்தகம் புரியும் பிற நாடுகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

டபிள்யூடிஓ அமைப்பை விமர்சித்ததுடன் மட்டுமின்றி அடுத்து தன்னிச்சையான முடிவை தொடர்ந்து எடுத்து வருகிறது அமெரிக்கா. டபிள்யூடிஓ வகுத்த வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக அதிக வரி விதிப்பை அமெரிக்கா விதித்து வருகிறது. இது டபிள்யூடிஓ விதிகளுக்கு எதிரானதாகும். தனது நாட்டு தொழிலை காக்கும் நோக்கில் சூரிய மின்னுற்பத்தி தகடுகள் மற்றும் வாஷிங் மெஷினுக்கு கூடுதல் வரி விதித்தது. உருக்கு மற்றும் அலுமினியம் மீது முறையே 25 சதவீதம் மற்றும் 10 சதவீத வரியை விதித்தது மற்றும் பாரபட்சமாக வரிகளை விதிப்பது ஆகியன அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கிற்கு சிறந்த உதாரணங்களாகும்.

குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது அதிக வரி விதிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது வர்த்தகப் போருக்கே வழிவகுத்துள்ளது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்களை நிர்பந்தித்து தொழில்நுட்பத்தைஅளிக்கக்கூடாது என்றும் கூறுவது டபிள்யூடிஓ விதிகளுக்கு முரணானதாகும். அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக சீனாவும், ஐரோப்பிய யூனியனும் வரிகளை விதித்துள்ளன. இருப்பினும் அதை இன்னமும் செயல்படுத்தவில்லை. இதுதவிர 2019-ம் ஆண்டு முதல் சீன தயாரிப்புகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது 25 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது.  இப்போது பரஸ்பரம் வரி விதிப்பு அளவை உயர்த்துவது என்ற அளவில் உள்ள சூழல் சிறிது காலத்துக்குப்பிறகு உச்சத்தை எட்டும். அப்போது வர்த்தகச் சுழற்சி பாதிக்கப்படும். பொருள் விநியோகமும் தடைபடும். முதலீடுகள் குறையும்போது சர்வதேச பொருளாதாரம் பலவீனமடையும். ஏற்கெனவே சரிந்துவரும் நிலையில் இது இன்னமும் கூடுதல் பிரச்சினையை உருவாக்கும்.

சீனா தனது நாட்டு தயாரிப்புகளுக்கு மானியம் அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. மானியம் அல்லது நிதி உதவி போன்ற அரசின் சலுகைகள் அனைத்து தொழில்மய நாடுகளிலும் சர்வசாதாரணமாக பின்பற்றப்படுபவைதான். இதை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக முடிவெடுப்பது தீர்வாக இருக்காது.

டபிள்யூடிஓ விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டுமாயின் அதற்கு 85 சதவீத உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும். ஆனால் அமெரிக்க இந்த விஷயத்தில் பேச்சு வார்த்தைக்கே வரவில்லை. தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தி வருவது துரதிருஷ்டம். டபிள்யூடிஓ விதிமுறைகளுக்கு மாற்று விதிமுறைகளும் தற்போது பரிசீலிக்கப்படுகின்றன. ஒருவேளை மாற்று விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டால் அது டபிள்யூடிஓ-வின் வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துவிடும் என்பதை அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x