Published : 12 Nov 2018 10:12 AM
Last Updated : 12 Nov 2018 10:12 AM

ஆப்பிள் ஐபோன்களின் மவுசு குறைகிறதா?

ஒரு காலத்தில் மொபைல் பயன்படுத்துபவர்களின் அல்டிமேட் ஆசையாக எப்போதுமே ஆப்பிள் ஐபோன் இருந்தது. ஆனால், அந்தக் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். காரணம் ஆப்பிள் ஐபோன் வாங்க விரும்பிய பலரும் இப்போது ஒன் பிளஸ், சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளை தேர்ந்தெடுக்கிறார்களாம். ஐபோன்களின் விற்பனை தொடர்ந்து சரிந்துவருவதாக ஹாங்காங்கைச் சேர்ந்த கவுன்டர்பாயின்ட் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளைப் பொறுத்தவரை அது எப்போதும் மேல்தட்டு  மக்களுக்கான பொருளாகத்தான் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஐபோன்களை வாங்கும் திறன் நடுத்தர மக்களுக்கும் வரத்தொடங்கியது. ஆனால், அதன் முழு பலனையும் ஆப்பிள் நிறுவனம் அனுபவிப்பதற்குள் ஆப்பிள் ஐபோன்களின் இடத்தை ஒன் பிளஸ், சாம்சங், ரெட்மி, ஓப்போ, வீவோஉள்ளிட்ட பல பிராண்டுகள் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டன. 2017-ல் 3 மில்லியனாக  இருந்த ஐபோன்களின் விற்பனை இந்த ஆண்டு 2 மில்லியனாக குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் இதுதான் முதல்சரிவு. அதுவும் அதிகம் விற்பனை ஆவதுஐபோன்களின் பழைய மாடல் போன்கள்தான். புதிதாக வந்த மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை.

முதல் காரணம், ஆப்பிள் தயாரிப்புகளின் விலை. இரண்டாவது ஆப்பிள் மொபைல்களில் உள்ள பிரச்சினைகள். 80 ஆயிரம், ஒருலட்சம் என விலையுள்ள ஐபோன்களில் உள்ள அம்சங்கள் ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்டபோன்களில் 25 ஆயிரம், 30 ஆயிரம் விலையிலேயே கிடைத்து விடுகின்றன. 

இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஸ்மார்ட்போன்களில் ஐபோன் தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாதது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன. ஆனால் ஆப்பிள் அதைச் செய்யவில்லை. பெங்களூரில் அசெம்ப்ளிங் யூனிட் மட்டும்தான், அதுவும் பழைய மாடல் ஐபோன்களின் அசெம்பிள் மட்டும் தான். இதனால் ஐபோன்களில் 80 சதவீதம் இறக்குமதிதான். இதனால் இந்தியாவில் அதிக விலையில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் விலை இந்தியாவில் விற்கப்படும் விலையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது.

இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 2000 டாலர். ஆனால், சமீபத்தில் வெளியான ஐபோன் X ஆர் விலை 1058 டாலர்.

இந்த போனில் உள்ள அம்சங்கள் இந்தவிலையைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவான விலையில் உள்ள போன்களிலேயே கிடைக்கின்றன. சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 6டி விலை ரூ. 37,999 தான். 

ஆப்பிள் ஐபோன்களை இந்தியாவில் உருவாக்கினால் 15-20 சதவீத வரிச்சலுகை கிடைக்கும். அதை விற்பனை  விலையில் குறைக்கலாம். ஆனால் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி நிலையம் அமைக்கும் அளவுக்கு நம்பிக்கையுடன் இல்லை. சீனாவில்தான் பெரும்பாலான உற்பத்தியைச் செய்துவருகிறது.

மேலும் ஐபோனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கிய பிரச்சினை. சார்ஜர் லைட்னிங் கேபிள் புதிதாக வாங்க வேண்டுமென்றால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. மலிவான விலையில் வாங்கி பயன்படுத்தினால் விரைவிலேயே போன் பேட்டரி திறன் முற்றிலுமாகப் பாதிக்கப்படுகிறது. ஆப்பிள் தயாரிப்புகள் பிற பிராண்ட் கேட்ஜெட்களோடு கனெக்ட் செய்வதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.

இதனால் ஐபோன் வாங்க விருப்பம் கொண்டிருந்தவர்களும்கூட அவ்வளவு விலைகொடுத்து அதை வாங்குவதில் எந்தஅர்த்தமும் இல்லை என்கின்றனர்.  ஐபோன் வாங்கும் விலையில், மூன்று நல்ல போன்களை வாங்கலாம் என்கின்றனர்.

தீபாவளியின்போது மற்ற பிராண்டுகளின் ரீடெய்ல் ஸ்டோர்களில் கூட்டம் அலை மோதியது. ஆனால் ஆப்பிள் ஷோரும்களில் கூட்டமே இல்லை. புதிதாக வரும் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிளில் கிடைக்கும் வசதிகள் எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் ஷோரும் விற்பனையாளர்களே இதைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.

ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களில் 20 சதவீதத்தினர் ஆப்பிள் ஐபோன் பயனாளிகள் என்கிறார் ஒன்பிளஸ் இந்தியா பிரிவின் தலைவர் விகாஸ் அகர்வால். எக்ஸ்சேஞ்ச் மூலம் ஐபோன்களை மாற்றிவிட்டு ஒன்பிளஸ்ஸுக்கு பலர் மாறியுள்ளனர் என்கிறார்.

வருவாய் அளவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் ஆப்பிள் நிறுவனம் முன்னிலையில் இருந்தாலும் மற்ற பிராண்டுகளுக்கும் ஆப்பிளுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x