Published : 12 Nov 2018 09:57 AM
Last Updated : 12 Nov 2018 09:57 AM

கவர்ச்சியான வரியில்லா கடன் பத்திரங்கள்

கட்டுப்பாடான முதலீட்டாளர்கள், குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்றதாகவரியில்லா கடன் பத்திரங்கள் உள்ளன. காரணம், இவை பாதுகாப்பானதும், கணிசமான வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கின்றன. இவற்றைப் பங்குச் சந்தையில் வாங்க முடியும்.   

ஐஆர்எஃப்சி, என்ஹெச்ஏஐ, பிஎஃப்சி, ஹட்கோ, ஆர்இசி, ஐஐஎஃப்சிஎல், என்ஹெச்பிசி, ஜேஎன்பிடி, எண்டிபிசி, என்ஹெச்பி மற்றும் நபார்ட் உள்ளிட்ட 13 பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2012 முதல் 2016 வரையிலான நிதி ஆண்டுகளில் வரியில்லா கடன் பத்திரங்களை வெளியிட இந்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டிக்கு முற்றிலும் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.  

இந்த வரியில்லா கடன் பத்திரங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு சிறப்பாக வர்த்தகம் ஆகின்றன. பெரும்பாலான வரியில்லா கடன் பத்திரங்களின் முதிர்வு தொகை கிட்டத்தட்ட 6.5 சதவீத வருமானத்தைத் தருவதாக உள்ளது. அவற்றில் இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள கடன் பத்திரங்களும் அடங்கும்.

இந்தக் கடன் பத்திரங்கள் பிஎஸ்இமற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளின்பணச் சந்தைப் பிரிவில் பங்குகளுடன்பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. சிறு முதலீட்டாளர்கள் தங்களின்டீமேட் கணக்கு மூலமாகவே இவற்றை வாங்கவும் விற்கவும் முடியும். ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ், கோடக் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட பல தரகு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகவே இந்த வரியில்லா கடன் பத்திரங்களில் வர்த்தகம் செய்யும் வசதியைக் கொடுக்கின்றன.  

ஐஆர்எஃப்சி வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களுக்கு கிரிசில், கேர் மற்றும்இக்ரா உள்ளிட்ட தரச்சான்று நிறுவனங்கள் உச்ச அளவு தரச்சான்றான ‘ஏஏஏ’ சான்று வழங்கியுள்ளன. இதுவரை மொத்தமாக 24 வரிசைகளில் வரியில்லா கடன்பத்திரங்களை ஐஆர்எஃப்சி வெளியிட்டுள்ளது. இவை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகளில் வர்த்தகமாகின்றன.

ஐஆர்எஃப்சி வெளியிட்ட மூன்று வரிசை கடன் பத்திரங்கள் 6.4-6.7 சதவீதவருமானத்தைக் கொடுப்பதாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஐஆர்எஃப்சி எண் (ISIN INE053F07900) வரிசை கொண்டகடன் பத்திரங்கள் 12.5 ஆண்டுகால முதிர்வுடன் 7.64 கூப்பன் வட்டிவிகிதத்துடன் வெளியிடப்பட்டது. இது என்எஸ்இ சந்தையில் 6.6 சதவீத வருமானத்துடன் வர்த்தகமாகிறது.

இந்த வரியில்லா கடன் பத்திரங்களின் செய்யப்படும் முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வருமான வரி விலக்கு உள்ளதால், இந்த 6.6 சதவீத வட்டி வருமானமானது 30 சதவீத வரி வரம்பில் உள்ள முதலீட்டாளர்களுக்கு வரிக்கு முந்தைய வருமானம் 9.4 சதவீதமாக கிடைக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஐந்தாண்டு கால நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் வரிக்கு முந்தைய வருமானம் 6-8 சதவீதமாக உள்ளது. இதனால் வங்கி நிரந்த வைப்பு திட்டத்தைக் காட்டிலும் வரியில்லா கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சிறப்பான தேர்வாக சிறு முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது.

இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பலர், தங்களது முதலீட்டுக்கான லாபத்தில் வரி விலக்கு பெற வரியில்லா கடன்பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நீங்கள் ஒரு வரியில்லா கடன் பத்திரத்தை வாங்கும்போது அதில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்துவதில் விலக்கு உண்டு. எனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது இந்த வட்டி வருமானத்தை மொத்த வருமானத்தில் சேர்க்க வேண்டியதில்லை. வங்கியில் செய்யப்படும் டெபாசிட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் மொத்தவருமானத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஐஆர்எஃப்சி வெளியிட்டுள்ள மூன்றுவரிசை வரியில்லா கடன் பத்திரங்களில் வாங்குவதும் விற்பதும் என வர்த்தகம் நன்றாகவே உள்ளது. இவை கடந்த ஒரு மாதத்தில் தினமும் சராசரியாக 1700 யூனிட்டுகளுக்கு மேல் வர்த்தகமாகின்றன.மேலும் இந்த கடன் பத்திரங்கள் 3.4 முதல் 12.5 ஆண்டுகால முதிர்வுடன் கிடைக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்களின் இலக்குக்கு ஏற்ப கடன் பத்திரங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.  

வரியில்லா கடன் பத்திரங்களைப் பங்குச் சந்தையில் விற்கும்போது அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது கடன் பத்திரங்களை வாங்கிய நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் மீண்டும் விற்பனை செய்தால் அதில்கிடைக்கும் வருமானத்துக்கு உங்களுடைய வரி வரம்புக்கு ஏற்ற வரியைச் செலுத்த வேண்டும். 12 மாதங்களுக்குப் பிறகு விற்பனை செய்தால் வருமானத்தின் மீது 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இதில் எந்த இண்டெக்சேஷன் பலனும் இல்லை. 

இந்த ஐஆர்எஃப்சி நிறுவனம் இந்தியரயில்வே துறையின் நிதிப் பிரிவு நிறுவனமாகும். இது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்கு இந்திய அரசிடம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு வேண்டிய தொழில்வாய்ப்புகள், முதலீடுகளை அரசு வழங்குகிறது. மார்ச் 31, 2018 நிலவரப்படி ஐஆர்எஃப்சியின் நிகர மதிப்பு ரூ. 13,565 கோடி. இந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் ரிஸ்க்குக்கான விகிதம் 214.75 சதவீதமாக உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி மார்ச் 31, 2018ல் 9.9 மடங்காகவும், அதற்கு முந்தைய ஆண்டு 8.8 மடங்காகவும் இருந்தது. வரும் மார்ச் 31, 2019ல் 10 மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஆர்எஃப்சி பெரும்பாலும் இந்திய ரயில்வேவுக்குதான் கடன் வழங்குகிறது. இதன் கடன் சொத்துகள் சிறப்பாக உள்ளன. வாராக்கடனே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x