Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM

சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சி? - நோபல் பரிசு பெற்ற ஆய்வுகள் சொல்லும் உண்மை

பொருளாதாரத்தில் 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசினை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின்  வில்லியம் நார்தாஸ் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பால் ரோமர்  ஆகிய இரு பொருளாதார அறிஞர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

முதலாமவர் உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பொருளாதார அளவீடுகளில் எவ்வாறு கணக்கிடுவது மற்றும் அப்பிரச்சினைகளை பொருளியல் கருவிகள் கொண்டு எவ்வாறு சரி செய்வது போன்ற ஆய்வுகளைச் செய்தவர்.

இரண்டாமவர் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும், அவற்றை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் ஆராய்ச்சி செய்துள்ளார். இவற்றுக்காக இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இவர்களின் ஆராய்ச்சி, பேரியல் பொருளாதார கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேலும் செம்மைப் படுத்தி நீண்ட கால மற்றும் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு தயாராவது என்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடியவை.

வில்லியம் நார்தாஸின் பங்களிப்பு நார்தாஸின் ஆய்வுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சுற்றுச்சூழலை சார்ந்துள்ளது எனவும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் எவ்வாறு நீண்டகால வளர்ச்சியை தடுக்கும் எனவும் தெளிவுபடுத்துகின்றன. 

அவரின் தொடக்க கால ஆய்வுகள் ‘பசுமை’ அல்லது ‘நிலைத்த’ தேசிய வருவாயைக் கணக்கிடுவது பற்றியதாகும்.  பெரும்பாலான நாடுகள் தங்களின் வருமான வளர்ச்சி குறித்த கணக்கீட்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை (GDP) மட்டுமே கணக்கில் கொள்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இயற்கை வளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிலம், காற்று, நீர் நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக நாட்டில் ஏற்படும் இழப்பீடுகளை இந்த வருமான கணக்கீட்டில் எடுத்துக்கொள்வது இல்லை. இந்த மாதிரியான கணக்கீட்டு முறை, ஒரு நாடு வளர்ந்து வருவது போன்ற மாயத் தோற்றத்தையே ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை ஒரு நாடு சுரண்டி ஏற்றுமதி செய்கிறது என்றால், நாட்டின் வருமானத்தில் அதன் மதிப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளத்தை இழந்துள்ளோம் என்பதை நாம் கணக்கில்கொள்வதில்லை.

இந்த இயற்கை வள சீர்கேட்டை கணக்கில் எடுக்கவில்லையென்றால், நாட்டின் வளர்ச்சி மற்றும் மனித நலன் நீண்டகால அடிப்படையில் வீழ்ச்சியடையும் என்பதை நார்தாஸின் ஆராய்ச்சி தெளிவாக்குகிறது. அவரின் சமீபகால ஆய்வுகள், புவி வெப்பமடைதலினால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியது. புவி வெப்பமடைதல் என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.  

புவி வெப்பமடைதலை துரிதப்படுத்தும் கரியமில வாயு போன்ற காரணிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தா விட்டால், எதிர்கால வளர்ச்சியில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என IPCC போன்ற உலக அமைப்புகளின் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 

இப்பெரும் பிரச்சினையை தீர்ப்பதற்காக, பேரா. ஆர்தர் பிகு-வின் புகழ்பெற்ற வரி விதிப்புக் கோட்பாட்டை பயன்படுத்தி, கரியமில வாயுக்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் மேல் கார்பன் (carbon) வரி விதிக்க வேண்டும் என்று நார்தாஸ்  அறிவுறுத்துகிறார்.

வரியின்மூலம் மாசுபடுத்தும் பொருட்களின் விலையை அதிகரித்து  நுகர்வைக் குறைப்பதால், புவி வெப்பமடைதல் கணிசமாகக் குறையும். இருப்பினும், வரி விதிப்பால் மக்களின் நிகழ்கால நுகர்வு, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் தொய்வு ஏற்படுவதால், எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக எழுகின்றது.

இதற்காக வரி விதிப்பினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை கணக்கிட வேண்டிய அவசியத்தை நார்தாஸ்  வலியுறுத்துகிறார். இதற்காக ‘ஒருங்கிணைந்த மதிப்பீட்டு மாதிரியை' வடிவமைத்து அதன்மூலம் நன்மை தீமைகளை சமன் செய்யக்கூடிய அனைத்து நாடுகளுக்கும் ஒரே சீரான கார்பன் வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார்.

உதாரணமாக, புவி வெப்ப அளவு அதிகரிப்பை 2O C அளவுக்கு நிலை நிறுத்த வேண்டுமெனில் ஒரு டன் கரியமில வாயுவிற்கு சுமாராக ரூ. 3,285 வரி விதிக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார். வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை, சுற்றுச்சூழலுக்கு சாதகமான பொருட்களின் விலையைக் குறைப்பதன் மூலமும், வரி வருவாயை சுற்றுச்சூழலை மேம்படுத்த செலவிடுவதன்  மூலமும் ஈடுசெய்ய முடியும்!

நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், மாசு போன்ற பேராபத்தை விளைவிக்கக் கூடிய  காரணிகளை சந்தைப் பொருளாதாரம் கட்டுப்படுத்துவதில்லை. இதை ‘சந்தையின் தோல்வி' என்று வருணிக்கின்றனர். எனவே, அரசின் வரி விதிப்பு நடவடிக்கை மூலம் இக்காரணிகளை சந்தை நடவடிக்கைகளுக்குள்ளேயே கொண்டு வந்து அவற்றை சந்தை மூலமாகவே  கட்டுப்படுத்தலாம் என்பதை நார்தாஸ் ஆராய்ச்சி தெளிவுபடுத்தியுள்ளது.

பால் ரோமரின் பங்களிப்பு

நார்தாஸ் மற்றும் ரோமர் இருவரின் நோக்கம் மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கானது என்றாலும், ரோமரின் கோட்பாடுகள் நார்தாஸின் கோட்பாடுகளிலிருந்து சற்று வேறுபடக்கூடியவை.

ரோமரின் கருத்துகள், 1987-ல் நோபல் பரிசு வென்ற பேரா. ராபர்ட் சொலோவின் கருத்துகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது.   ஒரு நாட்டின் தொடர் வளர்ச்சி தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தே உள்ளது என்பதை நிறுவுகிறது  சோலோவின் ஆராய்ச்சி.  ஆனால், இந்த தொழிநுட்ப வளர்ச்சி எவ்வாறு ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் உருவாகிறது மற்றும் விரிவடைகிறது என்பதைப் பற்றிய கேள்விக்கு அது 'எங்கோ சொர்க்கத்திலிருந்து வருகிறது' என்று ஒரு தெளிவற்ற பதிலை முன் வைக்கிறது. ரோமர் இதற்கு தர்க்க ரீதியான பதிலை தருகிறார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது புதுப் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது என்று ஜோசப் ஷும்ப்பீட்டர் என்ற புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் குறிப்பிடுகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், ரோமர் ஒருபடி மேலே செல்கிறார்.  இவை ஒரு நாட்டில் உள்ள தனி நபர், தொழிற்சாலை மற்றும் கல்வி அமைப்புகள் போன்றவற்றின் ‘உள்ளிருந்தே' வருகின்றன என்று நிறுவுகிறார். இவையே வளர்ச்சியைத் தூண்டுபவை. இவ்வாறு ஏற்படும் ஒரு நாட்டின் வளர்ச்சியை, உள்ளார்ந்த வளர்ச்சி (endogenous growth) என்கிறோம்.

இந்த பூமியில் நாம் எந்த வளத்தையும் புதிதாக உருவாக்க போவது இல்லை, அனைத்தும் இங்கு ஏற்கனவே இருக்கின்றவை. ஆனால் நாம் செய்ய வேண்டியது அவற்றின் உருவத்தை, பருமனை அல்லது அதன் பயனை  நமது வசதிக்கேற்ப மறுசீரமைத்துக்கொள்வதில் இந்த ‘உள்ளார்ந்த தொழில்நுட்பங்கள்' பெரும்பங்கு வகிக்கின்றன. 

இதற்கான புதிது புதிதான சிந்தனைகள் மற்றும் புத்தாக்கம் அனைத்தும் சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளின் உள்ளிருந்தே உருவாகின்றன! இது மனித வளத்தை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி, புதிய எண்ணங்களைப் பெருக்கி, கண்டுபிடுப்புகளை அதிகப்படுத்தி நமக்கு தேவையான மறுசீரமைப்புகளை செய்ய உறுதுணையாக உள்ளன. 

 புதிய எண்ணங்களை வார்த்தெடுப்பதன் மூலம் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு போன்றவற்றை கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பத்தையும் மற்றும் புத்தாக்கத்தையும்  நம்மால் உருவாக்க முடிகிறது என்கிறார் ரோமர்.

ஒரு நாட்டில் உள்ள மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தியானது குறைந்து கொண்டே செல்லும் தன்மை கொண்டதால், இவற்றை மட்டுமே பயன்படுத்தும் நாடு வளர்ச்சியில் சரிவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் பயன்கள் பன்மடங்கு பெருக்கக்கூடியவை என்பதால், இவை வளர்ச்சியை அதிகரிக்கும். 

ஆனால், இங்கே ஒரு பெரிய சிக்கல் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட தொழில்முனைவோரின்  முயற்சியால் புதிய தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் உருவாகும்போது அவற்றின் பயன்கள் இவ்வாறான முயற்சியே செய்யாத மற்ற தொழில்முனைவோர்க்கும் இலவசமாகக் கசிகின்றன!

ஒருவர் உழைப்பில் மற்ற அனைவரும் இலவச சவாரி செய்வதால், புத்தாக்கம் செய்பவரின் தொடர் முயற்சி தடைபட்டு  பொருளாதார  வளர்ச்சியில் சீரிய தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது! இதை நிவர்த்தி செய்ய, தொழில்நுட்பம் சார்ந்த காப்புரிமை வழங்குதல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை அளித்தல், கல்வி மற்றும் தனிநபர் திறமைகளில் புதுமைகளை புகுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள ரோமர் பரிந்துரைக்கிறார்.

சில நேரங்களில், மற்ற போட்டியாளர்களை சந்தையிலிருந்து வெளியேற்ற ஒரு சில தொழில் முனைவோர் குறிப்பிட்ட தொழில் நுட்பங்களை அளவுக்கதிமாக பயன்படுத்தலாம். இதுவும் வளர்ச்சியை பாதிக்கும். இவ்வாறான தீய நடவடிக்கைகளையும் அரசாங்கம் சில கொள்கை முடிவுகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ரோமரின் கருத்து!

இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற நடவடிக்கைகளை ‘அரசின் கட்டுப்பாடற்ற' சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் அனுமதிக்கும்போது அவை வளர்ச்சிக்கு பாதகம் விளைவிக்கக்கூடும் என்பதே!  புதுமையை ஊக்குவிப்பதில் ‘சந்தையின் தோல்வி’ தொக்கி நிற்பதால், அரசு தலையீட்டின் அவசியம் இங்கே வலியுறுத்தப்படுகிறது.

பொருளியல் தத்துவத்திற்கான பங்களிப்பு  

பொருளியலின்  அடிப்படைக் குறிக்கோள், பொருளாதார நடவடிக்கைகள் மூலம் தனி மனித சுதந்திரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதே! சந்தை நடவடிக்கைகள் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே தனிமனித சுதந்திரத்தை அடைய முக்கிய வழி என்பதை பெருவாரியான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், அத்தகைய குறிக்கோளை அடைவதற்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வகுக்கும்பொழுது, அவர்களிடையே இரண்டு விதமான கருத்து வேறுபாடுகள்  நிலவுகின்றன.

ஒரு சாரார், பொருளியலின்  தந்தை ஆடம் ஸ்மித் அவர்களின் கொள்கையைப் பின்பற்றி, சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகக் குறைந்த அளவே தலையிட வேண்டும் என்று வாதிடுகின்றனர். சந்தைப் பொருளாதாரத்தில் ஏற்படும் சீர்கேடுகளுக்கு, அரசாங்கத்தின் அநாவசியமான தலையீடே காரணம் என்பது இவர்களின் முக்கியக் கூற்று. 

இவர்களில், முன்னரே பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மில்டன் பிரீட்மேன்  (1976 இல் நோபல் பரிசை வென்றவர்), பிரெடெரிக் வான் ஹாயக் (1974), ஜேம்ஸ் புக்கனன் (1986), கேரி பெக்கர் (1992), ரொனால்டு கோஸ் (1991) மற்றும் ராபர்ட் லூகாஸ் (1995) போன்றோர் அடங்குவர்.

மற்றொரு சாரார், சந்தையை அதன் போக்கில் விடும்பட்சத்தில் ‘சந்தைத் தோல்வி’ ஏற்பட்டு அது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் எனவும், முதலாளித்துவம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாத்து, தனிமனித சுதந்திரத்தை பேணுவதில் அரசின் பங்கு முக்கியம் எனும் வாதத்தையும் முன் வைப்பவர்களாகும்!

முதலாளித்துவ பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசின் தலையீடு மிக அவசியம் என்று வலியுறுத்திய பேரியல் பொருளாதாரத்தின் தந்தை ஜான் மேனாட் கெய்ன்ஸ் அவர்களின் அடியொற்றி வரும் இவர்களில், நோபல் பரிசை முன்னரே வென்ற  ராபர்ட் சோலோ (1987), ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (2001); ஜார்ஜ் அகெர்லோப்  (2001), பால் க்ருக்மேன் (2008) போன்றோர் மிக முக்கியமானவர்கள்.

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற பால் ரோமர் மற்றும் வில்லியம் நார்தாஸ் அவர்களின் கருத்துகள் சந்தை நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றன. அரசாங்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்னவெனில், புத்தாக்கம் மற்றும் மாசுபடுதல் போன்ற வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய காரணிகளில்  சீரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் பட்சத்தில், நாட்டில்  நீண்ட மற்றும் நிலைத்த வளர்ச்சியை விரைவாக எட்டமுடியும் என்பதே.

- பேராசிரியர் எல். வெங்கடாசலம், venkatmids@gmail.com
பேராசிரியர் எம்.உமாநாத், umanath@mids.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x