Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM

அலசல்: #MeToo

சினிமா துறையிலும், ஊடகத்துறையிலும் ஆரம்பித்த #MeToo மூவ்மென்ட் மெல்ல அனைத்து துறைகளிலிருந்தும் வெளிவந்துகொண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு தலைவர் சுரேஷ் ரங்கராஜன் பாலியல் புகாரில் சிக்கி, விசாரணை நடவடிக்கைக்காக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது கடந்த வாரத்தில் நடந்தது. இதுபோல பணியிடங்களில் பாலியல் புகார்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. 

பணியிடங்களில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து நிறுவனங்கள் தங்கள் ஆண்டறிக்கையில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், பாலியல் புகார்கள் குறைவதற்குப் பதிலாக ஒவ்வோராண்டும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய நிறுவனங்களில் சந்தை மதிப்பில் முதல் 50 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 2017-18 நிதி ஆண்டில் மட்டும் 601 பாலியல் சீண்டல் புகார்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 5.81% அதிகம். குறிப்பாகச் சேவைத்துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான புகார்கள் வந்துள்ளன. விப்ரோ நிறுவனத்தில் 101, ஐசிஐசிஐ வங்கியில் 99, இன்ஃபோசிஸ் 77, டிசிஎஸ் 62, ஆக்சிஸ் வங்கி 47 என பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளன. 

தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பொதுத்துறை நிறுவனங்களில் குறைவாகவே புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இதன் அர்த்தம் பொதுத்துறை நிறுவனங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிட சூழல் நிலவுகிறது என்றில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் புகார்கள் மூடிமறைக்கப்படுவதால்தான் குறைவாகப் பதிவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்பதுதான் உண்மை நிலை.

இதற்கு முற்றிலுமான காரணம் தனிமனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை சமூகம் இழந்துவருவதான். வேகமாக வளர்ந்துவரும் நாடு என்று இந்தியாவை உலக நாடுகள் அதிசயித்துப் பார்க்கின்றன.

ஆனால், இந்த வேகமான, துரிதமான வாழ்க்கையில் நாம் நம் மனிதத் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பதன் விளைவுகள்தான் இன்று சமூகத்தில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. தனக்குக் கீழே பணிபுரியும் பெண்கள் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல்.     

கடந்த முப்பது வருடங்களாகத்தான் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல பணியிடங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் கூட பணியிடங்களில் ஆண்/பெண் விகிதம் 3:1 என்ற அளவில் தான் இருக்கிறது. அதாவது 25 சதவீதம் பெண்கள் எனில் 75 சதவீதம் ஆண்கள் தான் பணியிடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் பணி செய்யும்போது குடும்பத்தின் வருமானம் உயர்கிறது. வருமானம் உயரும்போது தேவைகள் பூர்த்தியாகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. 

இந்நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த பாலியல் சுரண்டல்கள் மீண்டும் பெண்களை வீட்டுக்குள் முடக்கிவிடக்கூடும். இது மறைமுகமாகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏனெனில், சமூகம் பெண்களைப் பாதுகாப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டும். அவர்களுக்கான இடத்தை ஆண்களைப் போல சுதந்திரமாக அனுபவிக்க  அனுமதிக்காது. நாம் வளரும் விதம், நம்முடைய கல்வி முறை அனைத்தும் இந்தச் சமூகத்தை இப்படித்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x