Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM

9 கியர்களுடன் வந்துவிட்டது ஹோண்டா சிஆர்-வி

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் புதிய பிரீமியம் எஸ்யுவி காரான சிஆர் –வி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை ரூ. 28.15 லட்சத்தில் தொடங்கி ரூ. 32.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 9 கியர்கள் உள்ளன. பொதுவாக இந்நிறுவனம் பிரீமியம் மாடல் கார்களை இங்கு உற்பத்தி செய்வதில்லை.

சிகேடி என்ற முறையில் உதிரி பாகங்களை ஜப்பானில் உள்ள ஆலையிலிருந்து இறக்குமதி செய்து இங்கு அசெம்பிளி செய்து விற்பனை செய்யும். அந்த வகையில் இந்த காரும் நொய்டாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டீசல் மாடலில் வந்துள்ள இந்த காரில் 7 பேர் சவுகர்யமாக பயணிக்கலாம்.

பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தி வரும் நிலையில் மிகவும் துணிச்சலாக ஹோண்டா நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்துள்ளது. தங்களது தயாரிப்பு டீசல் இன்ஜின் மீது அந்நிறுவனத்துக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.

மொத்தம் 3 மாடல்களில் அதாவது சிஆர்-வி பெட்ரோல் 2 டபிள்யூடி, சிஆர்-வி டீசல் 2 டபிள்யூடி, சிஆர்-வி டீசல் ஏடபிள்யூடி என வந்துள்ளது.

 இதில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் உள்ளது. 120 பிஎஸ் சக்தி மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியது. இதில் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இது ஒரு லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 19.5 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது. ஏடபிள்யூடி மாடல் கார்கள் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 18.3 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.

பெட்ரோல் மாடல் 2.0 லிட்டர் இன்ஜின் 4 சிலிண்டரைக் கொண்டுள்ளது. இது 154 பிஎஸ் மற்றும் 189 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியதாக வந்துள்ளது. இதில் 18 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரம் உள்ளது. முன்புறம் மட்டுமின்றி பின்பகுதியிலும் அனைத்துமே எல்இடி விளக்குகளாக உள்ளன.

பெட்ரோல் மாடல் ஒரு லிட்டருக்கு 14.4 கி.மீ. தூரம் சோதனை ஓட்டத்தில் ஓடியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இயற்கைக் காட்சிகளை ரசிக்க சன் ரூஃப் வசதி இதில் உள்ளது. 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆண்டிராய்டு, ஆப்பிள் கார்பிளே இயங்கு தளத்தில் இது செயல்படும். இனிமையான இசையை வழங்க 8 ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன.

இதன் டிரைவர் இருக்கை 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பயணத்தின்போது லேன் மாறும்போது பின்னாள் வரும் வாகனங்களை தொடு திரையில் பார்க்கும் வசதி (லேன் சேஞ்ச் அசிஸ்ட்) இதில் உள்ளது. டீசல் மாடலில் கியர் லீவருக்கு பதிலாக பொத்தான்கள் இருப்பது காரை மிக எளிதாக இயக்க வழிவகுத்துள்ளது.

பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு குளிர்ச்சி பரவ பின்பகுதியிலும் ஏசி சப்ளைக்கான வென்ட் உள்ளது. அதேபோல டீசல் மாடலில் மேற்கூரை ஏசி வென்ட் உள்ளது. புதிய மாடல் சிஆர்-வி கார்கள் பெருமளவு வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x