Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM

விரைவில் அறிமுகமாகிறது கான்டினென்டல் ஜிடி 650

மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் புதிய சாதனையை புரிந்துள்ளது. மோட்டார் பந்தயத்துக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள் அமெரிக்காவில் போனவில்லே எனுமிடத்தில் சாதனை படைத்துள்ளது.

சோதனை ஓட்டத்தில் 18 வயதான மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கைலா ரிவாஸ், கான்டினென்டல் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். சர்வதேச மோட்டார் சைக்கிள் சம்மேளனம் இதை உறுதி செய்து சான்றிதழும் வழங்கியுள்ளது.

கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. அதேசமயம் இந்த மோட்டார் சைக்கிளின் அதிவேகத்திறன் அமெரிக்காவில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனைக்கு உள்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில் இன்ஜின் மட்டுமே ஐஷர் நிறுவனத்தினுடையது.

மற்ற பாகங்கள் பந்தய வீரர்களின் விருப்பத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை. சஸ்பென்ஷன், நீண்ட பின்பகுதி, இலகுவான அதேசமயம் ஸ்திரமான வாகன சக்கரங்கள், பந்தய மைதானத்தில் வழுக்கிச் செல்வதற்கேற்ப வழுவழுப்பான டயர்கள் இதன் சிறப்பம்சங்களாகும். கிளிப்-ஆன் ஹாண்டில் பார், கால்களை வைப்பதற்கு வசதியான இடம் ஆகியன இதில் செய்யப்பட்ட மாற்றங்களாகும்.

காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் ஏரோ டைனமிக் தோற்றம், வித்தியாசமான பிரேம் ஆகியன அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்கை விட சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த உதவியுள்ளது.

இது 648 சிசி திறன் ஏர் கூல்டு, இரட்டை என்ஜினைக் கொண்டது. இது 47 ஹெச்பி மற்றும் 52 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது. ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) இதில் சிறப்பம்சமாகும். இருபக்க சைலன்ஸருடன் ஸ்திரமான மோட்டார் சைக்கிளாக வந்துள்ளது.

முந்தைய மாடலான கான்டினென்டல் இன்டர்செப்டரை விட இது 4 கிலோ எடை குறைவாகும். ஆனால் அதைவிட இதில் பல அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிவேகத்தில் செல்லும்போதும் இது ஸ்திரமாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை ரூ. 3 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. 1960-ம் ஆண்டு வெளியான கஃபே ரேஸர் மாடலைப் போன்று இது தோற்றமளிப்பதாக புல்லட் பிரியர்கள் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x