Published : 08 Oct 2018 10:37 AM
Last Updated : 08 Oct 2018 10:37 AM

பதவியைப் பறித்த ட்விட்டர் பதிவு

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஒருவர் தலைசிறந்த தலைவராக இருப்பது எப்படி என்று வகுப்பெடுத்தார். ஆனால், இன்று அவரே தனது தலைவர் பதவியை இழந்து நிற்கிறார். அதுமட்டுமா, 40 மில்லியன் டாலர் அபராதத்தோடு இதுவரை அவர் சேர்த்து வைத்த பெருமையெல்லாம் காற்றில் காணாமல் போய்விட்டது.

எல்லாவற்றுக்கும் காரணம், ஒரே ஒரு ட்விட்டர் பதிவு. இந்த நிலைக்கு ஆளான நபர் வேறு யாருமில்லை, ‘சோ கால்டு டெக்கி’களின் கனவுக் கண்ணனாக திகழ்ந்த டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தான்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் நாசாவுக்குப் போட்டியாக விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை நிறுவியவர்தான் எலான் மஸ்க்.

தன்னுடைய புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மூலம் தொழில்நுட்ப உலகினரைக் கவர்ந்தவர், உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார். ஆனால், சமீபகாலமாக இவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. கையில் போதை வஸ்துவுடன் பொது மேடையில் பேசிய போது ஆரம்பித்தது தலைவலி.

அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பெரும்பாலானோர் அவரை வறுத்தெடுத்தனர். இதுபோன்ற பல தொடர் சர்ச்சைகளுக்குள்ளானதால் வரலாறு காணாத அளவில் டெஸ்லாவின் பங்கு சரிந்தது. இதனால் கடுப்பான எலான் மஸ்க், கடந்த ஆகஸ்டு 7ம் தேதி, ட்விட்டரில் தனது டெஸ்லா நிறுவனத்தைப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றி தனியார் நிறுவனமாக்கப் போவதாக அறிவித்தார்.

பங்குதாரர்களிடமிருந்து 420 டாலருக்கு பங்குகளை வாங்கிக் கொள்வதாகவும்,  இதற்கு தேவையான நிதியைத் திரட்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். உடனே பங்கு விலை ஏற ஆரம்பித்தது, ஆனால் ஏற்றம் தற்காலிகமானதோடு, மீண்டும் இறக்கத்தைச் சந்தித்தது. இவருடைய இந்த ட்விட்டர் பதிவு பங்குதாரர்களையும் முதலீட்டாளர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

இந்த முடிவுக்கு கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியதையடுத்து, டெஸ்லாவை தனியார் நிறுவனமாக்கும் முடிவை கைவிட்டார். ஆனாலும் அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இவரை விடவில்லை. இவர் மீது விசாரணையை முடுக்கி இவர் சொன்னதெல்லாம் பொய் என்று பங்கு மோசடி வழக்கை போட்டது. இதனால் எலான் மஸ்க்குக்கும் டெஸ்லா நிறுவனத்துக்கும் தலா 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. கூடவே அவரது தலைவர் பதவியையும் பறித்தது. ஆனால், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகத் தொடரலாம் என்று கொஞ்சம் கரிசனம் காட்டியிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம், அவருடைய அதீத நம்பிக்கைதான். தன்னை உலகம் கொண்டாடுகிறது என்பதாலேயேதான் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்ததன் விளைவுதான் இது. யானைக்கும் அடி சறுக்கும். ஆனால், அதற்கான தருணத்தை நாமே உருவாக்கிவிடக்கூடாது. இந்தப் பாடத்தை எலான் மஸ்க் அதிக விலை கொடுத்து கற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x