Published : 17 Sep 2018 11:24 AM
Last Updated : 17 Sep 2018 11:24 AM

அலசல்: நெருக்கடியை உருவாக்கும் ட்ரம்ப்

ஈரான் நாட்டுடன் வர்த்தக உறவுகளைத் நிறுத்தாத  நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க தயங்கமாட்டோம் என எச்சரிக்கை செய்துள்ளது அமெரிக்கா. இது ஒரு வகையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு விடுக்கப்படும் மறைமுக  நெருக்குதல் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகிய  பின்னர், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். தற்போது ஈரான் மீது பெட்ரோலிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தத் தடை வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா விதித்துள்ள இந்த பொருளாதாரத் தடையை மீறக் கூடாது என இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரானிலிருந்து நவம்பர் மாதம் 4-ம் தேதிக்கு பின்னர் கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நெருக்கடியால் இந்திய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களின் இறக்குமதியை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளன.  குறிப்பாக  ஏப்ரல்- ஆகஸ்ட் மாதம் வரையில் 6,58,000 பேரல்கள் இறக்குமதி செய்துவந்த இந்தியா, இனி 3,60,000 முதல் 3,70,000 பேரல்கள் வரை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் இறக்குமதி அளவு 45 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான ஒப்பந்தமும் குறைந்துள்ளது.

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில்  ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்துள்ளதால், இது  விலை ஏற்றத்துக்கே வழி வகுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடான சீனா, அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதே போன்ற நடவடிக்கையை இந்தியா துணிந்து மேற்கொள்ளும் என்பதை சொல்ல முடியாது. இதன் மூலம் அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு  நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவிகள் அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன.

இந்த உதவிகள் உடனடியாக நிறுத்தப்படும். அதுபோல ஐடி துறை  சேவைகள் இந்தியாவிலிருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் நெருக்கடி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த காரணங்களால் அமெரிக்காவின் நெருக்கடியை இந்தியா ஏற்றுக் கொள்ளும் சூழலே உள்ளது.

தவிர அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. தினசரி 30 லட்சம் பேரல் ஏற்றுமதி செய்யும் அளவு அமெரிக்காவின் திறன் அதிகரித்துள்ளது. 2018 -ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவிலிருந்து 1.6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதனால் ஈரான் கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் அமெரிக்கா அளிக்க தயாராகவே இருக்கும். ஆனால், அமெரிக்க கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அதிக செலவு கொண்டதாக இந்திய நிறுவனங்களுக்கு அமையும். இன்னொரு வகையில் இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு பின்னர்

அமெரிக்காவின் பல பொருளாதார ஒப்பந்தங்களோடு இணக்கம் இல்லாத சூழல் நீடித்து வருகிறது.  இந்தியா இப்படியான சூழலை சந்திக்க உள்ளதுபோல, ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு நெருக்கடி உள்ளன. ட்ரம்பின் அதிரடியான போக்குகளால்  உலக நாடுகள் அதிக விலை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x