Published : 13 Aug 2018 11:15 AM
Last Updated : 13 Aug 2018 11:15 AM

தமிழக வளர்ச்சியில் கருணாநிதியின் பங்கு

தமிழகத்தின் வளர்ச்சியினை மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  அண்மைக் காலத்தில் பல பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கேரளா மற்றும் குஜராத்தும் கூட வளர்ச்சி மாதிரிகளாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் அமர்த்தியா சென், ஜின் ட்ரீஸ் போன்ற அறிஞர்களால் சிறந்த அடையாளமாக பேசப்படுவது தமிழகம்தான்.  இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை.

சமூக வளர்ச்சி

கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உதாரணத்திற்கு 18 லிருந்து 23 வயதுக்குள் உள்ளவர்கள் தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் விகிதம் GER (Gross Enrolment Ratio) 2016-2017ல் 46.9 சதவிகிதம். இது சீனாவின் GER-ஐ (42.7) காட்டிலும் அதிகம்.

பொருளாதார வளர்ச்சி

1990-களில் புதிய பொருளாதார கொள்கைகளை பின்பற்றத் தொடங்கிய பின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் வேகம் பெற்றது. இன்றைய (2016-2017) ஒட்டுமொத்த உற்பத்தியின் அடிப்படையில் (Size of Gross State Domestic Product ) தமிழகம் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆகும். இந்த பெரிய பொருளாதாரம் 1990 களுக்கு பின்பு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது (அண்மையில் சில ஆண்டுகள் தவிர்த்து) என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமானத்தை ஒப்பிட்டால் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 2016-17ல் ரூ.1,57,116 ஆகும். இது இதே ஆண்டின் தேசிய தனிநபர் வருமானமான ரூ.82,229 காட்டிலும் கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

உற்பத்தியின் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றாலும் கல்வி, சுகாதாரம், சமூகநலன், வறுமையொழிப்பு போன்ற குறியீடுகளில் தமிழகம் மகாராஷ்டிராவை விட பன்மடங்கு முன்னேறிய மாநிலம். இதுவே தமிழகத்தை சிறந்த மாதிரியாக போற்றக் காரணம்.

அடிப்படை கட்டமைப்பின் வேறுபாடு

இந்த வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. குறிப்பாக மறைந்த தலைவர் கருணாநிதியின் பங்கு மிகமிக அதிகம். 1990-களுக்கு பிந்தைய வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு 1990-களுக்கு முன்பு தமிழகம் அடைந்த சமூக வளர்ச்சியே அடிப்படை கட்டுமானமாகும். அதாவது ஒரு வலுவான சமூக வளர்ச்சியும் அதன் விளைவாக எட்டிய மனித வளர்ச்சியுமே பின்னால் எட்டப்பட்ட பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகளாக இருந்தன.

இதில் கருணாநிதியின் பங்களிப்பை தெளிவாக புரிந்து கொள்ள தமிழகத்தின் வளர்ச்சி மாதிரியை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியோடு ஒப்பிடவேண்டியது அவசியம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் 1950-களில் பின்பற்றிய முழக்கம் ‘நீதியுடன் கூடிய வளர்ச்சி’ (Growth with Justice) அதாவது வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலமே பகிர்வு அல்லது சமூகப் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்பதுதான் அந்த இலக்கு. அறுபதுகளில் நாம் சிறந்த பொருளாதார வளர்ச்சியினை எட்டினோம். ஆனால் உணவு, வறுமை, கல்வி போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. பின்பு பசுமைப் புரட்சியில் இறங்கினோம். இது ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் சமூக பிரச்சினைகள் முழுவதுமாக குறையவில்லை.

 அதன்பின்னர் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால்தான் அதன் பலன்கள் எல்லோரையும் சென்று அடையவில்லை என்று கூறப்பட்டது. வளர்ச்சியின் பலன்கள் எல்லோரையும் அடைய வேண்டுமென்றால் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருக்க வேண்டும். அதன் பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வளர்ச்சி விகிதமும் உயர்ந்தது. ஆனால் கல்வி, சுகாதாரம், வறுமை போன்ற சமூக பிரச்சினைகள் முழுவதுமாக தீர்க்கப்படவில்லை.

2008–09 க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், நமது பொருளாதாரம் 8 முதல் 9 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் 1990-க்கு முந்தைய பொருளாதார வளர்ச்சியினைக் காட்டிலும் இந்த வளர்ச்சி விகிதம் அபரிமிதமானதாகும். இந்த சூழலிலும் சமூக நலத் திட்டங்கள் மூலம் பயன் பெறுவதற்கு மக்கள் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஐம்பது தொடங்கி பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸே ஆட்சி அமைத்தது. ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கைகள் அப்போது பின்பற்றப்பட்டது. பீகார், உத்திர பிரதேசம் போன்ற பல வட மாநிலங்கள் போதுமான சமூக வளர்ச்சி அடையாமலிருக்க இந்த அணுகுமுறையே காரணம்.

தமிழகத்தின் வளர்ச்சி மாதிரி நேருவின் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கைக்கு நேர் மாறான ஒரு கொள்கையைக் கொண்டது திராவிட இயக்கம். நீதிக்கட்சி தொடங்கி பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அனைவருமே சமூக வளர்ச்சியினையே முதன்மையான குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

1900 களில் பார்ப்பனரல்லாதோருக்கு வேலை, கல்வி அதிகாரத்தில் பங்கு என்பதே நீதிக் கட்சிகளின் போராட்டமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சமூக சீர்திருத்தத்திற்க்காக போராடிய தந்தை பெரியார், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை தேவை சமூக வளர்ச்சியே என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

ஆனால் அவர் ஆட்சி அதிகாரத்துக்கு வரமறுத்த சூழலில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட பிரநிதித்துவ ஜனநாயகத்தில்; அரசியல் அதிகாரம் பெற்றே நமது கொள்கைகளை அடைய முடியம் என்று உறுதியாக நம்பி அவ்வதிகாரத்தையும் வென்று எடுத்தார். ஆனால் இயற்கை அவருக்கு போதுமான அவகாசம் அளிக்காத சூழலில் அந்த திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.

கருணாநிதியின் செயல்பாடுகள்

இந்தியாவின் பொருளாதார அணுகு முறைக்கு நேர்மாறாக, பொருளாதார வளர்ச்சி யினைக் காட்டிலும், சமூக வளர்ச்சியினையே நோக்கமாக கொண்டு கருணாநிதி செயல்பட்டார். கல்வி, சுகாதாரம், சமூகநலம் வேண்டி பல்வேறு சிறந்த சமூக நலத்திட்டங்களை வழங்கினார். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பெண்கள், முதியோர் விவசாயிகள், தொழிலாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்; நெசவாளர்கள், குடிசைவாழ் மக்கள், விதவைகள் என்று சமூகத்திலுள்ள ஒவ்வொரு நலிவுற்ற பிரிவினருக்கும் தனித்தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ரூபாய்க்கு படி அரிசி என்பதை தாண்டி எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்க பொது விநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணையும், சர்க்கரையும் வழங்கி விரிவுபடுத்தினார். அன்று தொடங்கி இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வலுபடுத்தப்பட்டு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாதிரியாக விளங்குகிறது.

காமராசர் பள்ளிகளைக் கட்டினார் என்றால் கருணாநிதி கல்லூரிகளைத் திறந்தார். மாணவர்களுக்கான விடுதிகளை திறந்தார். கல்விக்கான இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கினார். இதன் கூடவே பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போன்றோர்களுக்கும் வேலை வாய்ப்பும் இடஒதுக்கீடும் வழங்கினார். இது போன்ற திட்டங்கள் அனைத்தும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் பறந்துபட்ட அதே சமயம் ஆழமான ஒரு அடித்தளமாகியது.

இதன் ஒட்டுமொத்த விளைவு கருணாநிதி முதலமைச்சரான உடனே கல்வி, சுகாதாரம் சமூக நலத்திட்டத்திற்கான அரசின் செலவுகள் உயர்ந்தன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வி, சுகாதாரம், சமூகநல திட்டங்களுக்கான அரசின் செலவுகள் அரசின் ஒட்டு மொத்த செலவுகளில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உயர்ந்தது.

பின்வரும் அரசுகளுக்கான கட்டாயம்

இதை பின்வரும் அரசுகளும் பின்பற்ற வேண்டி ஒரு கட்டாயத்தை உருவாக்குமளவுக்கு இந்த திட்டங்கள் வலுவாக கட்டமைக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன. 1977ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் திராவிட இயக்க கொள்கைகளையே கொண்டிருந்தாலும் ஒரு சிலரின் ஆலோசனையின் பேரில் அக்கொள்கைகளிலிருந்து ஓரளவுக்கு விலக முற்பட்டு முடியாமல் போனது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்று 1979-ல் ஒரு அரசாணையிட்டார்.

அது கடுமையாக மக்களால் எதிர்க்கப்பட்டு போராட்டங்களாக வெடித்தன. உடனே அந்த ஆணையினை திரும்பப் பெற்றது மட்டுமின்றி சமூக நீதிக் கொள்கைளுக்கு தனது ஆதரவு என்றும் குறையாது என்பதை உறுதிபடுத்தும் பொருட்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். பின்பு சத்துணவு திட்டத்தை பெரிய அளவில் அமல்படுத்தினார்.

இது போன்றே ஜெயலலிதாவும் 2003ல் நிதிப்பற்றாக்குறை காரணமாகக் காட்டி  கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறைகளுக்கான செலவுகளை கடுமையாக குறைத்தார். ஆனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் படுதோல்வியுற்று திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தனது போக்கை முற்றிலும் மாற்றி சமூகத் துறைகளுக்கான செலவுகளை உயர்த்த தொடங்கினார். அம்மா உணவகம் போன்ற திட்டங்களை வழங்கும் அளவுக்கு தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டார்.

பொது விநியோகம், சத்துணவு, குழந்தைகள், பெண்கள் மகப்பேறு திட்டம், பள்ளிக் கல்வி, உயர் கல்வி போன்ற மிகச் சிறந்த மிகப் பெரும் சமூகநலத்திட்டங்கள் அனைத்து அரசுகளாலும் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. நடக்கின்ற ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்வதே இந்த திட்டங்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில்தான். இது போன்று 1970களில் தொடங்கி வளர்த்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு அரசாலும் விரிவுபடுத்தப்பட்ட சமூகநலத்திட்டங்களின் ஒட்டு மொத்த விளைவுதான் தமிழகத்தில் மனித வளம் மேம்பட்டு இருந்தது.

முதலீட்டுக்கான சூழல்

அந்த சூழலில் அமுல் படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவு தமிழகம் ஒரு முதலீட்டு மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் காரணமாக அமைந்தது. இதுவே  1990களுக்குப் பின் தமிழகத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படி சிறந்த சமூக வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியே தமிழகத்தை ஒரு சிறந்த ‘வளர்ச்சி மாதிரியாக’ போற்றக் காரணமாகியது.

இது போன்ற வளர்ச்சி மாதிரிக்கு அடித்தளமிட்டு, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவற்றை வலுப்படுத்தி விரிவுபடுத்தினார். மற்ற அரசுகளும் அந்த அணுகுமுறையை பின்பற்றும் அளவுக்கு ஒரு வலுவான பாதை வகுத்தவர் கருணாநிதி. அவர் வலுப்படுத்திய சமூக வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி பாதை மேலும் தொடரும் என்றே நம்பலாம்.

- பேராசிரியர் க. ஜோதி சிவஞானம், kjothisiva24@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x