Published : 13 Aug 2018 11:16 AM
Last Updated : 13 Aug 2018 11:16 AM

‘நானோ’ ஆலையில் தயாராகிறது டியாகோ, டிகோர்

டாடா நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பு நானோ கார். மலிவு விலை கார் என்பதில் மட்டும் பிரபலமாகவில்லை. இந்த கார் தயாரிப்புக்கென மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் இடம் ஒதுக்கப்பட்டு பிறகு அங்கு ஏற்பட்ட அரசியல் எதிர்ப்பால் 85 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தது நானோ ஆலை. சிங்குருக்கு மாற்றாக குஜராத்தில் சனந்த் எனுமிடத்தில் ஆலை அமைக்கப்பட்டு நானோ உற்பத்தியும் தொடங்கப்பட்டது.

விலை குறைந்த கார் என்பதாலேயே இந்த கார் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இந்த காரின் விற்பனை படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதை நிறுத்துவதா, தொடர்வதா என்ற இக்கட்டான சூழலில் இந்த ஆலையில் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான டியாகோ மற்றும் டிகோர் மாடல் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

இண்டிகா மாடல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக ஏற்கெனவே டாடா மோட்டார்ஸ் அறிவித்து விட்டது. இந்நிலையில் சிறிய ரக மாடல்களில் டியாகோ மட்டுமே மாற்றாக இருக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே இவ்விரு பிராண்ட் மாடல் காரின் உற்பத்தியை 25 சதவீதம் அதிகரித்து ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலை தினசரி 205 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருந்தது. இது தற்போது நாளொன்றுக்கு 450 வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு திறன் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் தினசரி 500 வாகனங்களை உற்பத்தி செய்வது என்ற இலக்கை இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் கார் உற்பத்தியில் 60 சதவீத தேவையை இந்த ஆலை பூர்த்தி செய்கிறது. எனவே நிறுவனத்தின் உத்தி சார் தேவையை நிறைவேற்றுவதாக இந்த ஆலை மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் ஒமேகா மற்றும் ஆல்ஃபா பிளாட்பார்மில் அதாவது உற்பத்திப் பிரிவில் நிறுவனத்தின் பிரதான தயாரிப்புகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்டுகளில் 12 புதிய மாடல் கார்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மயங் பரீக் தெரிவித்தார்.

புதிய மாடல் அறிமுகம் மூலம் கார் பிரிவில் அனைத்து பிரிவுகளிலும் அதாவது 90 சதவீத அளவுக்கு அனைத்து மாடல்களிலும் கார்களை கொண்டுள்ள ஒரே பிராண்டாக டாடா மோட்டார்ஸ் இருக்கும் என்றார். விற்பனையை அதிகரிக்க டீலர்களின் எண்ணிக்கையை 787-லிருந்து 850 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக பரீக் தெரிவித்துள்ளார்.

புதிய விற்பனையகங்கள் வழக்கமானவை போலன்றி டிஜிட்டல் விற்பனையகங்களாகத் திகழும். அதேபோல விற்பனைக்குப் பிந்தைய சேவையை அளிக்க ஒவ்வொரு அரை கிலோமீட்டர் தூரத்திலும் பழுது நீக்கு மையங்களை அமைத்து தேர்ந்தெடுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்க வசதி ஏற்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நானோ-வுக்காக உருவாக்கப்பட்ட ஆலையில் தயாராகும் டிகோர், டியாகோ வாகனங்கள் பெருமளவு வரவேற்பைப் பெரும்.

நெக்சானுக்கு 4 நட்சத்திரக் குறியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெக்சான் மாடல் கார்கள் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் 4 நட்சத்திர குறியீட்டை பெற்றுள்ளன.

நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது எஸ்யுவி மாடல் காராகும். இந்த காரில் பயணிக்கும் பெரியவர்களின் பாதுகாப்புக்கு 4 நட்சத்திரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்துக்கு 3 நட்சத்திரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தைப் பொருத்தமட்டில் 17.00 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை எடுத்துள்ளது நெக்சான். நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடலாக இது திகழ்கிறது.

தற்போது கிராஷ் டெஸ்ட் பரிசோதனையில் அதிகபட்ச புள்ளிகளை எடுத்திருப்பது இந்த மாடல் கார் விற்பனை அதிகரிக்க உதவும்.  இந்நிறுவனத் தயாரிப்புகளில் 4 நட்சத்திரக் குறியீட்டைப் பெறும் இரண்டாவது மாடல் நெக்சான் ஆகும். ஏற்கெனவே 2016-ம் ஆண்டில் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ஜெஸ்ட் மாடல் கார்கள் நான்கு நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x