Published : 06 Aug 2018 10:23 AM
Last Updated : 06 Aug 2018 10:23 AM

அலசல்: அளவுக்கு அதிகமாய் பொங்கிய பால்

லிட்டர் கணக்கில் பாலை தரையில் ஊற்றி சிலர் வீணாக்கிக்கொண்டிருக்க, வேறுசிலர் பாலை தங்கள் தலை மீதும் உடல் மீதும் ஊற்றிக் குளிக்கிறார்கள். சிலர் இதற்கும் ஒருபடி மேலேசென்று ஏழைகளுக்கு இலவசமாக பாலை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை மாத மத்தியில் இந்தக் காட்சிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியது. இந்த செயலை செய்தவர்கள் பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை விற்கும் விவசாயிகள்.

2014-ம் ஆண்டில் ஒரு லிட்டர் பாலை விற்பதன் மூலமாக மஹாராஷ்டிர விவசாயிகளுக்கு கிடைத்துவந்த தொகை ரூ.25. ஆனால் இன்று கிடைப்பதோ வெறும் 18 ரூபாய். ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 வரை செலவாகிறது, ஆனால் கிடைப்பதோ 18 ரூபாய். இந்த நிலைதான் விவசாயிகளை கொந்தளிக்க செய்திருக்கிறது.

போராட்டங்களின் விளைவாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.25 என உயர்த்தி அறிவித்திருக்கிறது அரசு. ஆனால் இது உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்டும் வகையில் இல்லை.

இதுதவிர தேவைக்கு அதிகமான பால் உற்பத்தியின் காரணமாக பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் பவுடர்கள் டன் கணக்கில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. தேவையைவிட அதிகமாக பால் உற்பத்தி செய்யப்பட்டுவரும் சூழலில் சில்லறை விற்பனை விலையை தனியார் நிறுவனங்களால் அதிகப்படுத்தவும் முடியாது.

இந்த நிலையில் பவுடராக மாற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 5 ரூபாய் மானியம் அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது ஓரளவுக்கு பலன்கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அரசின் இந்த மானியம் 3 மாதங்களுக்கு மட்டுமே என்பது இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம்.

உலக அளவில் பால் பவுடர் விலையில் சரிவு காணப்பட்டுவரும் நிலையில் பால் பவுடரை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. ஜூலை 2014-ல் டன் ஒன்றுக்கு 3,519 டாலராக இருந்த பால் பவுடர் விலை, 2018 ஜூலையில் 1,959 டாலர் என்ற பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ பால் பவுடரை தயாரிக்க 200 முதல் 230 ரூபாய் வரை ஆகும் நிலையில் ஏற்றுமதி செய்தால் வெறும் 120 ரூபாய் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் இதேபோன்ற சிக்கல்கள் சமீபத்தில் எழுந்தபோது அந்த மாநில அரசு கொள்முதல் விலையை உயர்த்தாமல் லிட்டருக்கு 5 ரூபாய் நேரடி மானியத்தை விவசாயிகளுக்கு அளித்தது. அதிகபட்சமாக இருந்த பால் மற்றும் பால் பவுடரை பள்ளி மாணவ மாணவியருக்கு இலவசமாக அளிக்கும் க்‌ஷீரா பாக்யா திட்டத்தையும் முன்வைத்தது. இந்த முறை வெற்றியடைந்திருக்கும் நிலையில் இதனை மஹாராஷ்டிராவில் செயல்படுத்தினால் பலன் கிடைக்கும் என்ற கருத்தை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

பால் உற்பத்தியில் முன்னணி மாநிலமான மஹாராஷ்டிராவின் இந்த நிலை மற்ற வட இந்திய மாநிலங்களையும் தொற்றிக்கொள்ளும் சூழல் இருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க இனியும் கால தாமதம் செய்தால் தேர்தலில் அரசை பார்த்துகொள்வோம் என்ற மஹாராஷ்டிர விவசாயிகளின் எதிர்ப்புக் குரல் உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x