Published : 09 Jul 2018 12:28 PM
Last Updated : 09 Jul 2018 12:28 PM

இமயமலையிலும் அமேசான் டெலிவரி!

 

கா

ற்று புகாத இடத்தில்கூட கார்ப்பரேட்டுகளின் கால்கள் போகும் என்பதற்கு அடையாளமாக சாதனை நிகழ்த்தி வருகிறது அமேசான் நிறுவனம். சாலை வசதியே சரிவர இல்லாத உலகின் மிக உயரமான இமயமலையிலும் தனது சேவையை அளித்து வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 11,562 அடி உயரத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது லே. பனி பொழியும் நேரத்தில் மூடிக் கொள்ளும் சாலைகள். கரடு முரடான மலைச் சரிவு பாதைகள், இன்டர்நெட், செல்போன் தொடர்பு விட்டு விட்டுதான் கிடைக்கும். ஆனாலும் அமேசான் டெலிவரி ஊழியர்கள் காலையிலேயே தங்களது சுறுசுறுப்பான சேவையை தொடங்கி விடுகின்றனர்.

புத்த துறவிகளும், ராணுவத்தினர் மட்டுமே இந்த பகுதியில் வசிக்கின்றனர். தவிர லே -வை ஒட்டியுள்ள இந்திய திபெத் எல்லைப்புற பகுதி மக்களுக்கும் இவர்களின் சேவை நீள்கிறது. இந்த பகுதி இந்தியாவில் இருந்தாலும் திபெத் மக்களின் கலாசார பழக்க வழக்கங்களுடன் உள்ளது. மத நம்பிக்கைகள் சீனாவுடன் தொடர்புடையதாக உள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் சீன ராணுவத்தினரும் நிலை கொண்டுள்ளனர். 30,000 மக்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் போர்வைகள், கம்பளி ஆடைகள், கண்களை மறைக்கும் கண்ணாடிகள் போன்றவற்றை அதிக அளவில் அமேசானில் ஆர்டர் செய்கின்றனர். மேலும் இந்த பகுதிகளில் கிடைக்காத காஸ்மெட்டிக்ஸ் பொருட்களும் ஆர்டர் செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் மேக் அப் பொருட்களும் இங்கிருந்து ஆர்டர் செய்யப்படுகின்றன. ராணுவ வீரர்கள் தங்களுக்குத் தேவையான பைகள், செல்போன் உறைகள், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களையும் ஆர்டர் செய்கின்றனர்.

அமேசான் நிறுவனம் மிக வேகமான டெலிவரிக்காக பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளதுபோல, இந்த பகுதிக்கான பொருட்கள் விமானத்தில் வந்து இறங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும் 10 முதல் 20 அமேசான் பார்சல்கள் இங்கு வருகின்றன. புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பார்சல்களை உள்ளூர் முகவர்கள் பெற்று டெலிவரி ஊழியர்களுக்கு பிரித்து அளிக்கின்றனர்.

டெலிவரி ஊழியர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுடன் கிளம்புகின்றனர். கரடுமுரடான சாலைகள் என்பதால் இருசக்கர வாகனங்களில்தான் டெலிவரி. பனிப் பொழிவு அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் கார்களில் டெலிவரி செய்ய பொருட்களை கொண்டு செல்கின்றனர். ஊழியர்கள் பனியில் தாக்குபிடிக்கும் காலணிகள், கம்பளி ஆடைகளால் முழு உடலையும் மூடிக் கொள்கின்றனர். செல்போன்களை முழு சார்ஜ் ஏற்றிக் கொண்டு, ஐடி கார்டு வெளியே தெரிவதுபோல பயணத்தை தொடங்குகின்றனர்.

இமயமலை பகுதிகளில் தபால் அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இங்கு வரும் பார்சல்களை சம்பந்தப்பட்டவர்கள் அங்கு நேரில் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே சென்று டெலிவரி செய்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அமேசானுக்கான ஆர்டர்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாள் டெலிவரியையும் தவறாமல் வாடிக்கையாளர்களிடத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். உலகின் எப்படிப்பட்ட இடத்திலும் தங்களால் சேவையை அளிக்க முடியும் என அமேசான் நிரூபித்துள்ளது. சந்தையை கைப்பற்றும் போட்டியில் குக்கிராமங்களுக்கும் சேவைகள் சென்று சேர்ந்தால் நல்லதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x