Last Updated : 09 Jul, 2018 12:28 PM

 

Published : 09 Jul 2018 12:28 PM
Last Updated : 09 Jul 2018 12:28 PM

ஜிஎஸ்டி இலக்கு எட்டப்பட்டதா?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நள்ளிரவு கூட்டங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் சாட்சியாக நின்றிருக்கிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு-15 அன்று அத்தகைய ஒரு நள்ளிரவு கூட்டத்தின்போதுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பின்னர் நாட்டின் 25-வது சுதந்திர தினத்தன்றும், ஒத்துழையாமை இயக்கத்தின் 50-ஆவது ஆண்டு விழாவின் போதும், 50-வது சுதந்திர தினத்தன்றும் நாடாளுமன்றம் நள்ளிரவில் கூடியது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு 2017-ம் ஆண்டு ஜூலை-1 அன்று நாடாளுமன்றம் மீண்டும் நள்ளிரவில் கூடியது.

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான வரி சீர்திருத்தம் அன்றிலிருந்து அமலுக்கு வந்தது. உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என எல்லா மறைமுக வரிகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடு ஒரே வரி என்பதன் அடிப்படையில் அவை ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆனது. நாடு தனது புதிய பயணத்தை தொடங்க இருப்பதாக சொன்னார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஜிஎஸ்டி என்றால் சிறந்த எளிய வரி (குட் சிம்பிள் டேக்ஸ்) என்றார் பிரதமர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஜிஎஸ்டியின் முதலாம் ஆண்டு முடிவில் அது சிறந்த எளிய வரியாக இருந்ததா, புதிய பயணத்தை இந்தியா தொடங்க உதவியதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

ஜிஎஸ்டி குறித்து சமீபத்தில் வெளிவரும் தகவல்கள் அரசுக்கு உவப்பு தருவதாய் இல்லை என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த 2 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு ஒப்புக்கொண்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 1.11 கோடி தொழில்களில் வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே தாங்கள் செலுத்தவேண்டிய ஜிஎஸ்டியில் 80 சதவீதம்வரை அரசிடம் அளித்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பாமல் சில நிறுவனங்கள் ரசீதுகளை மட்டும் போலியாக உருவாக்கி, உள்ளீட்டு வரியை (input tax) அரசிடம் திரும்பப் பெறும் மோசடிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் சில நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரி குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காத நிலையும் நீடிக்கிறது. அரசு எதிர்பார்த்த அளவுக்கான வரியும் ஜிஎஸ்டி முறையில் கிடைக்கவில்லை.

வரி ஏய்ப்புகளைத் தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள் ரூ.50,000-க்கும் அதிகமான மதிப்பில் பொருட்களை எடுத்துசெல்லும்போது ஆன்லைன் வழியாக ரசீதுகளை உருவாக்கும் இ-வே பில் முறை ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருட்களை எடுத்துசெல்லும் நேரம் முன்பைவிட குறையும் என்று சொல்லப்பட்டது. பொருட்களை எடுத்துசெல்லும் போக்குவரத்து நிறுவனங்கள் அல்லது பொருள் உற்பத்தியாளர்கள் இ-வே ரசீதை ஆன்லைன் வழியாக உருவாக்கலாம்.

ஆனால் உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ரசீதுகளில் உள்ள தகவல்களை பொருட்களை எடுத்துசெல்லும் ஆட்களால் தெளிவாக புரிந்துகொள்ளமுடியாதது, போக்குவரத்து நிறுவனங்கள் தாங்களாகவே இ-வே ரசீதை உருவாக்குமாறு உற்பத்தியாளர்கள் கூறுவதால் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, அதிகாரிகளின் தொடர்ச்சியான சோதனைகள் போன்றவற்றால் இ-வே ரசீது முறையில் பொருளை எடுத்துசெல்லும் நேரம் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

லட்சக்கணக்கான இ-வே ரசீதுகள் ஒரு நாளைக்கு உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இதனை சமாளிக்க முடியாமல் இ-வே ரசீதுக்கான இணையதளம் அடிக்கடி முடங்குவதாகவும் கூறப்படுகிறது. இ-வே ரசீதுக்கான தளத்தைப் போலவே ஜிஎஸ்டிஎன் தளத்திலும் தொழில்நுட்ப சிக்கல்கள் நீடிக்கின்றன. மிக மெதுவாக இயங்கும் இந்த தளத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தேதியை தேர்ந்தெடுப்பதில்கூட குளறுபடிகள் நீடிக்கின்றன.

ஜிஎஸ்டி ஒரு எளிமையான வரி என்று பிரதமர் கூறியிருந்தாலும், உலகிலேயே மிகவும் கடினமான வரி விதிப்பு முறை இது என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆசிய கண்டத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ள நாடுகளில் 28 சதவீதம் என்ற அதிகபட்ச வரி விதிப்பை வைத்திருப்பது இந்தியாதான். உலகில் சிலிக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வரி எளிமையாக்கலை ஜிஎஸ்டியில் செய்யவேண்டிய தேவை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் தற்போதைய ஜிஎஸ்டியில் பூஜ்ஜிய வரி விதிப்பை தவிர 5%, 12%,18%, 28% என நான்கு வகையான வரி விதிப்புகள் உள்ளன. இவற்றில் எந்தப் பொருளுக்கு என்ன வகையான வரி என்பதை வரி செலுத்துபவர் முடிவு செய்வதென்பதே மிகவும் சிக்கலான காரியம் என்று கூறப்படுகிறது.

எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதை முடிவுசெய்ய ஜிஎஸ்டி ஹெச்எஸ்என் கோடு என்கிற 438 பக்க புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் பட்டியலிடப்பட்டுள்ள 18,306 பொருட்களில் இருந்து நாம் விற்கும் பொருளுக்கான வரி விதிப்பை கண்டறிய வேண்டும். பல்வேறு பொருட்களை விற்கும் ஒரு விற்பனையாளருக்கு இது எளிய பணியல்ல என கூறப்படுகிறது. இத்தகைய வரி விதிப்பு முறைக்கும், முன்னர் இருந்த 10-க்கும் மேற்பட்ட மறைமுக வரி விதிப்பு முறைகளுக்கும் இதனால் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது. எனவே ஒற்றை வரி விதிப்பு முறையை நோக்கி இந்தியா நகரவேண்டும் என்னும் கோரிக்கையை சில பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

ஆனால் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும், ஒரு ஆடம்பர காருக்கும் ஒரே விதமான வரி விதிக்க முடியுமா எனும் கேள்வியை இதற்கு பதிலாக சில பொருளாதார நிபுணர்கள் எழுப்புகிறார்கள். இந்தியா போன்ற வறுமையில் வாழும் மக்கள் அதிகம் உள்ள நாட்டில் ஒற்றை வரி விதிப்பை கொண்டுவர முடியாது என்கிறார் அருண் ஜேட்லி. சமீபத்தில் தனது ஜிஎஸ்டி முறையை ரத்து செய்திருக்கும் மலேசியாவில் ஒற்றை வரி விதிப்புதான் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றை வரி விதிப்பை இந்தியா கொண்டுவர முடியாவிட்டாலும் தற்பொழுது இருக்கும் 4 விதமான வரி விதிப்புகளை 2 விதமான வரி விதிப்பாக குறைப்பது ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த பெருமளவில் உதவும். சீனா ( 5% மற்றும் 9%), பிரிட்டன் (5% மற்றும் 20%) ஆகிய நாடுகள் இத்தகைய ஜிஎஸ்டி வரி விதிப்பை கொண்டுவந்திருக்கும் நாடுகளில் சிலவாகும். இந்த நாடுகளை முன்னோடியாக கொண்டு இந்தியாவும் வரும் காலங்களில் இத்தகைய முறைக்கு மாற முயலலாம்.

இ-வே ரசீது தளம் மற்றும் ஜிஎஸ்டி தாக்கல் தளங்களில் காணப்படும் சிக்கல்களை விரைந்து தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார் துறைகளில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் அரசு இணையதளங்கள் சிறப்பாக செயல்படமுடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.

பல்வேறு மறைமுக வரிகளின் எண்ணிக்கையை குறைத்து தொழில்புரியும் சூழலை ஜிஎஸ்டி மேம்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜிஎஸ்டியின் விளைவாக பண வீக்கம், ஜிடிபி வளர்ச்சி குறைவு போன்றவை குறுகிய கால அளவில் ஏற்படுமென்றாலும் நீண்டகால அளவில் ஜிஎஸ்டி பயன்கொடுக்கும் என்பதை பல்வேறு தொழில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. தொழில்துறை உற்பத்தி பட்டியல் (ஐஐபி), ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழில் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கான மாற்றங்களை ஜிஎஸ்டி உருவாக்கவில்லை, குளறுபடிகள் இன்னமும் நீடிக்கின்றன என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஜிஎஸ்டி போன்ற பெரும் வரி சீர்திருத்தம் ஒரே ஆண்டுக்குள் சீரடையும் என கருதமுடியாது என்றே சொல்லலாம்.

பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்கள், மின்சாரம், அசையா சொத்துகள் போன்றவையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டி இருக்கிறது. அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுதல், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் எளிமையாக்கப்படுதல், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உடனடியாக கிடைத்தல் போன்றவை சாத்தியமாகும்போது முறைகேடுகள் குறைந்து வரி செலுத்தப்படும் வீதம் அதிகரிக்கும் வகையிலான வளர்ச்சி தரும் ஜிஎஸ்டி முறை உருவாகும் என்று நிச்சயம் நம்பலாம்.

- அகில் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x