Published : 09 Jul 2018 12:28 PM
Last Updated : 09 Jul 2018 12:28 PM

காப்பீட்டின் பலனைப் பெறுவது எப்படி?

பலரும் ஆயுள் காப்பீடு எடுக்கத்தொடங்கி இருக்கின்றனர். எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது சிக்கலானது. ஆனால் பல ஆன்லைன் கால்குலேட்டர்கள் நம்முடைய தேவை மற்றும் சம்பளத்தை அடிப்படையாக வைத்து எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றன. ஆனால் காப்பீட்டின் பலனை எப்படி பெற்றுக்கொள்வது என்பது குறித்து பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை. பாலிசிதாரரின் மறைவுக்கு பிறகு எவ்வளவு தொகை, யாருக்கு, எப்படி கிடைக்க வேண்டும் என்பதை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இது குறித்த விழிப்புணர்வும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிசிதாரரின் மறைவுக்கு பிறகு காப்பீட்டு தொகை மொத்தமாக நாமினிக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது காப்பீட்டு தொகையை பிரித்து நாமினிக்கு செலுத்துமாறு அறிவுறுத்த முடியும். இந்த வசதியை தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. எப்படியெல்லாம் தொகை வழங்கப்படுகிறது என்றும் அதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்தும் பார்க்கலாம்.

என்ன வாய்ப்பு

பாலிசிதாரரின் மறைவுக்கு பிறகு மொத்த தொகை வழங்குவதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மொத்த தொகை நாமினிக்கு வழங்கப்படும். ஆனால் குடும்பத்தினர் அவ்வளவு பெரிய தொகையை சரியாக கையாளுவார்களா? சரியாக பயன்படுத்தி முழு பயன் அடைவார்களா என்பது சந்தேகம்தான்.

இதற்காக பாலிசி தொகையை மாதம் மாதமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்லுமாறு பார்த்துக்கொள்ள முடியும். தவிர குறிப்பிட்ட தொகையை மொத்தமாகவும், மீதமுள்ள தொகையை பகுதி அளவிலும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கும் பட்சத்தில் இதில் 50 லட்சம் ரூபாயை பாலிசிதாரர் இறப்புக்கு பிறகு மொத்தமாகவும், மீதமுள்ள தொகையை அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்குமாறு செய்ய முடியும்.

ஹெச்டிஎப்சி லைப் நிறுவனத்தில் உள்ள ஒரு பாலிசியில் பலவிதமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு 35 வயது ஆண் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கிறார் என வைத்துக்கொண்டால் மொத்தமாக பாலிசி தொகை வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ.10,876 பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். 50 சதவீதம் மொத்தமாகவும், மீதமுள்ள தொகை மாதந்தோறும் வழங்குமாறு இருந்தால் ஆண்டுக்கு பிரீமியம் ரூ.10,015 ஆக இருக்கும். தவிர ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தொகை கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு சிறிதளவு பிரீமியம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஐசிஐசிஐ லைப் நிறுவனத்தில் உள்ள பாலிசியில், மொத்த பாலிசி தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அளவுக்கு (10 ஆண்டுகளுக்கு) கிடைக்கமாறு செய்ய முடியும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 சதவீதம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இது போல மேக்ஸ் நிறுவனத்திலும் பாலிசி உண்டு. சில சில மாறுதல்களுடன் இந்த வசதியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.

எது சரியான வாய்ப்பு?

ஒவ்வொரு வாய்ப்பிலும் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. லாப அடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு மாதமும் பணம் கிடைப்பது அவ்வளவு சிறப்பான திட்டம் கிடையாது. உதாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை ஆண்டுக்கு பத்து லட்சம் வீதம் அடுத்த பத்தாண்டுகளுக்கு பெறுவது அவ்வளவு சிறப்பான யோசனை கிடையாது. அதேபோல ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் பாலிசி எடுத்தால் கூட லாபம் அடிப்படையில் சிறப்பானது கிடையாது. தவிர வழக்கமாக செலுத்தும் பாலிசிக்கு செலுத்தும் பிரீமியத்தை விட இந்த பாலிசிக்கு அதிகம் பிரீமியம் செலுத்த வேண்டும்.

மொத்த தொகையை முதலீடு செய்யும் அளவுக்கு குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த தகவல்கள் புரியவில்லை என்னும் பட்சத்தில் மாதாந்திர வாய்ப்பினை தேர்வு செய்யலாம். குடும்ப சூழலை பார்க்கும் போது இது அவ்வளவு மோசமான ஐடியா கிடையாது.

உங்கள் குடும்பத்தின் வசம் பெரிய தொகை ஏதும் இல்லை, அதே சமயம் நிதி சார்ந்த புரிதல்களும் குறைவு என்னும் பட்சத்தில் 50 சதவீத தொகையை மொத்தமாகவும், மீதமுள்ள தொகையை ஒவ்வொரு ஆண்டும் பெற்றுக்கொள்ளும் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். மொத்தமாக இருக்கும் தொகை கடனை செலுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். மாதந்தோறும் கிடைக்கும் பணத்தை குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். அதே சமயத்தில் பாதி தொகையை மொத்தமாகவும், மீதி தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும் பாலிசிகளுக்கு பிரீமிய தொகையும் குறைவுதான்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x