Published : 09 Jul 2018 12:26 PM
Last Updated : 09 Jul 2018 12:26 PM

பேட்டரி பைக் தயாரிப்பில் இறங்குகிறது சுஸுகி

வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தவிர மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. வாகன உற்பத்தி துறையில் எலெக்ட்ரிக் இன்ஜின்களுக்கான மாற்றம் நிகழ்ந்து வருவதைபோல மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் இந்ததிய சந்தையில் வர்த்தக ரீதியில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமும் 2020-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

2017-ம் ஆண்டில் சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட வலியுறுத்தினார். அதனடிப்படையில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பிற்காக சுஸுகி நிறுவனம் டென்சோ மற்றும் தோஷிபா நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1,700 கோடி முதலீட்டினை மேற்கொள்ள உள்ளது. குஜராத்தில் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கிறது.

இந்திய சந்தைக்கு ஏற்ப எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதற்காக கேபிஎம்ஜி நிறுவனத்திலிருந்து 5 நபர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுவரை எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாகவே உள்ளது.

வேகம் இல்லாதது, அதிக தூரத்துக்கு செல்ல முடியாதது போன்ற காரணங்களால் வெற்றிபெறாமல் உள்ளன. சுஸுகி நிறுவனமும் 2011-ம் ஆண்டிலிருந்து எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே 100 வோல்ட் பேட்டரியில் 30 கிலோமீட்டர் வரை செல்லும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது.

தொழில்நுட்பங்கள் மேம்பட்டுள்ள நிலையில் இந்த சிக்கல்களுக்கு தீர்வுகளைக் கண்டால் 2020-ம் ஆண்டுக்குள் மக்கள் வாங்கும் விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்க முடியும் என்று சுஸுகி கூறியுள்ளது. சுசூகியின் நம்பிக்கை இந்திய சாலைகளில் விரைவில் பேட்டரி பைக்குகள் வலம் வரும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x