Published : 25 Jun 2018 10:55 AM
Last Updated : 25 Jun 2018 10:55 AM

தீர்வுகளை அளிக்கிறதா திவால் சட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.9,000 கோடி வங்கிக் கடனில் தவித்த ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.6,000 கோடிக்கு அதானி வில்மர் நிறுவனம் வாங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் என்சிஎல்டி மூலம், ஏலத்துக்கு வந்த ருச்சி சோயாவின் கடனில் ரு.4,000 கோடி அடைக்கவும் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதாகவும் தனது ஏல விண்ணப்பத்தில் அதானி குறிப்பிட்டுள்ளது.

இது போல கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் ஏலத்துக்கு வருவதும், அந்த நிறுவனங்களின் கடனை அடைக்கவும், தொடர்ந்து ஏற்று நடத்தவும் பல நிறுவனங்கள் முன்வருவதும் நடந்து வருகிறது. இதற்கு காரணம் திவாலாகும் நிலைமையில் உள்ள நிறுவனங்களை தொடர்ந்து நடத்த தேசிய நிறுவன சட்ட தீர்பாயம் அளிக்கும் சமரச திட்டங்களும், தீர்வுகளும்தான் அடிப்படை காரணமாக உள்ளன.

இந்த வகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) 9 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் திவால் நடைமுறைகள் கோரி 2,500 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் பி.பி. சவுத்ரி சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 31, 2018 நிலவரப்படி என்சிஎல்டி வசம் 9,073 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 1,630 விண்ணப்பங்கள் நிறுவன இணைப்புகள் தொடர்பானவை. திவால் நடைமுறைக்காக 2,511 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது தவிர நிறுவன விவகாரம் தொடர்பாக 4,932 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வாராக்கடன் தீர்வுகள்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நடைமுறைகளுக்கு பின்னர் இந்திய வங்கிகளில் வாராக்கடன் தரம் உயர்வதாக சிஎல்எஸ்ஏ ஆலோசனை நிறுவனம் கூறுகிறது. சமீப காலங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நிலுவைகளுக்கு என்சிஎல்டி மூலம் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. 2018 மார்ச் 31 வரையில் சுமார் ரூ.1.34 லட்சம் கோடி வாராக்கடன் நிலுவை வசூலிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பினையும் சிஎல்எஸ்ஏ அமைப்பு வெளியிட்டிருந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் இந்தியாவின் முக்கிய உருக்கு துறை நிறுவனங்களான எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் ஸ்டீல், உத்தம் காவ்லா மெட்டாலிக், உத்தம் காவ்லா ஸ்டீல், எலக்ட்ரோ ஸ்டீல் போன்ற நிறுவனங்களும், ருச்சி சோயா, ஜேபீ இன்பிராடெக் போன்ற நிறுவனங்களும் என்சிஎல்டிக்கு விண்ணப்பித்து தீர்வை நோக்கி செல்கின்றன.

இந்த நிறுவனங்களின் மொத்த வாராக்கடன் மட்டும் ரூ.3.22 லட்சம் கோடியாகும். தற்போது என்சிஎல்டி முன்வைத்துள்ள தீர்வுகள் மூலம் ரூ.2.78 லட்சம் கோடி வசூலாகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி, எஸ்பிஐ போன்ற வங்கிகளின் வாராக்கடன் சுமை பெருமளவு குறையும்.

இதற்கடுத்து பூஷன் பவர் அண்ட் ஸ்டீல், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், அலோக் பார்மா, ஆர்கிட் பார்மா, சக்தி போக் போன்ற நிறுவனங்களும் என்சிஎல்டி தீர்வுக்கு விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்கள் ரூ.1.3லட்சம் கோடி வாராக்கடனை வைத்துள்ளன.

இந்த நிறுவனங்களுக்கான தீர்வுகள் மூலம் சுமார் 70 சதவீத வாராக்கடனை குறைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நடவடிக்கைகள் தீவிரமானால், மின்சார துறை வாராக்கடனில் 77 சதவீதத்தினை குறைக்கலாம். கட்டுமான துறை 76% , டெக்ஸ்டைல் 63%, பார்மா 61%, ஸ்டீல் 40% என பல்வேறு துறைகளிலும் வாராக்கடன் அழுத்தத்தை குறைக்கலாம் என எடல்வைஸ் ஆய்வு கூறுகிறது.

விண்ணப்ப நடைமுறை

நிறுவன சட்ட வாரியம் (சிஎல்பி) கலைக்கப்பட்டு 2013-ம் ஆண்டு நிறுவன சட்ட விதிகளின்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. நிறுவன சட்ட விதிகளின்படி திவால் விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது. குறிப்பாக நிறுவனங்கள் சட்ட தீர்பாயத்துக்கு வரும் விவகாரங்களில் 90 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும்.

மேல் முறையீடு தேவையெனில் 90 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். என்சிஎல்டி தீர்ப்பு வழங்கிய 14 நாட்களுக்குள் மேல்முறையீட்டு ஆணையம் செல்லலாம். இதனால் திவால் கோரும் நிறுவனங்களுக்கு விரைவாக தீர்வு எட்டப்படுகின்றன.

நிதிநிலைமை மோசமாக உள்ள அல்லது சொத்துகளை மீறி கடன் அளவு அதிகரித்த நிறுவனங்கள் தாங்களாகவே தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்தை நாட முடியும். இதற்காக நிறுவனங்கள் திவால் சட்ட விதிமுறைகள்படி கடன் அளித்த நிறுவனங்களுடன் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அந்த நிறுவனம் தங்களது கடந்த கால நிதி செயல்பாட்டு ஆவணங்களை அளிக்க வேண்டும். வங்கிகளின் ஆவணங்கள், கடன் விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதனடிப்படையில் என்சிஎல்டி தற்காலிக தீர்வு நடைமுறைகளை அளிக்கும்.

அதிகாரம்

திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவை கலைப்பதுடன், இந்த நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாகக் குழுவையும் நியமிக்கும். தீர்ப்பாயத்துக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள் இதில் எந்த குறுக்கீடும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான கமிட்டி உருவாக்கப்படுவதுடன், தீர்வு குழுவும் 30 நாட்களுக்குள் அமைக்கப்படும்.

இந்த குழு கடன் நிறுவனங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், சொத்துகளின் உரிமைகளை மாற்றுவது, அமலாக்கத்துறை மற்றும் வழக்குகளை எதிர்கொள்வது, கடனுக்கு ஈடாக சொத்துகளை பறிமுதல் செய்வது போன்றவற்றில் ஈடுபடும். தவிர அந்த நிறுவனத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வரும் அனைத்து விநியோகங்களையும் நிறுத்துவதற்கும் திவால் நிறுவன சட்டம் அனுமதிக்கிறது.

இந்த நிறுவனங்கள் அந்த தொழிலில் இதர ஒப்பந்தங்களையும் நீட்டிக்க முடியாது. முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டி நிறுவனங்களை தொடங்கி, பின்னர் திடீரென மூடிவிட்டு செல்லும் நிறுவன உரிமையாளர்கள் மீது நிறுவன சட்டம் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வகை செய்கிறது.

தீர்வுகள்

திவால் விண்ணப்பத்தை இடைக்கால தீர்வு குழுவினர் பரிசீலனை செய்து 30 நாட்களில் இந்த நடவடிக்கைகளை எடுப்பர்கள். 90 நாட்களுக்குள் தீர்வுகள் எட்டப்படும். தீர்வு குழு வழங்கும் முடிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பதா நிராகரிப்பதா என்பதை பொறுத்து மேல்முறையீட்டுக்கும் செல்லலாம். இதற்கு 90 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் திவால் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பாக 75 சதவீத கடனை அடைப்பதற்கான திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும்.

இந்த அனைத்து நடைமுறைகளிலும் நிறுவனங்களின் கடனாளிகள், பங்குதாரர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரது நலனையும் உள்ளடக்கியதாக இருக்கும். நிறுவன சட்ட வாரியத்தில் பல ஆண்டுகளாக தீர்வுகளுக்கு காத்திருக்காமல் 270 நாட்களில் இதற்கான தீர்வு எட்டப்படுகிறது. நிறுவன விவகாரங்களுக்கான தீர்வுகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாமல் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது. இதனால் தொழில் சூழல் மேம்படுகிறது.

வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி அளிக்கும் அழுத்தம் காரணமாக கடன் அளித்த வங்கிகளும் இதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. தீர்வுகள் விரைவாக கிடைப்பது நாட்டுக்கும் நல்லதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x