Published : 25 Jun 2018 10:53 AM
Last Updated : 25 Jun 2018 10:53 AM

`புகை’-யில் திணறும் ஃபோக்ஸ்வேகன்!

ரு பொருளை ஏதாவது ஒரு வகையில்தான் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ஒன்று சிறப்பானது. இல்லை மோசமானது. நல்ல விஷயம் நினைவை விட்டே போய்விடும். மனித மனம் கெட்ட விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளும், மகிழ்ச்சியான தருணங்களை மறந்துவிடும்.

ஒரு பொருள் நல்ல விதமாகவும், அதே சமயம் கெட்ட விஷயத்திலும் நினைவுக்கு வருகிறது என்றால் அதுதான் ஃபோக்ஸ்வேகன். சொகுசான பயணத்தை அளிப்பதில் பிரபலமானதுதான் ஃபோக்ஸ்வேகன். ஆனால் அந்நிறுவனம் செய்த மோசடி சர்வதேச அளவில் நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது.

வாகன புகை மோசடியில் 2015-ம் ஆண்டில் சிக்கிய அந்நிறுவனத்தால் இன்னமும் தன் மீதான அவப் பெயரை போக்க முடியவில்லை. நிறுவனம் மீதான விசாரணை தொடர்வதோடு, எந்த நேரமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற பீதியில் நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஃபோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான ஆடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லெர் கைது செய்யப்பட்டிருப்பது சமீபத்திய நிகழ்வாகும்.

ஃபோக்ஸ்வேகன் புகை மோசடி தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட மிக உயர் பதவி நபர்களில் ஸ்டெட்லர் ஒருவர். இத்தனைக்கும் இவர் மீது எந்த வித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அவர் வெளிநாடு சென்று விடுவாரோ என்பதால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்தால் எந்த அளவுக்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பது புலனாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தின் உயர் அதிகாரி சிறையில் அடைக்கப்படுகிறார் என்றால் இந்த வழக்கின் தீவிரத் தன்மையை உணர முடியும்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அமெரிக்காவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் (இபிஏ) ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களில் வெளியேறும் புகையின் அளவை காட்டும் கருவியில் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியது. அத்துடன் இத்தகைய கருவிகள் கொண்ட கார்களை 2009-ம் ஆண்டு வரை விற்பனை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்தது.

ஃபோக்ஸ்வேகன் கார்களில் மட்டுமல்ல நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான போர்ஷே, ஆடி, சீட், ஸ்கோடா ஆகியவற்றிலும் இதே மோசடியை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. புகை அளவை அளவிடும் கருவியில் தில்லுமுல்லு செய்ததால், அந்த வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட மாசுபட்ட புகையை வெளியிட்ட போதிலும் அவை சுற்றுச் சூழல் பாதுகாப்பான கார்கள் என்றே காட்டின. அந்த அளவுக்கு புகை அளவிடும் கருவியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தில்லு முல்லு செய்திருந்தது.

வழக்கு பதிவு செய்த நான்கு நாட்களுக்குப்பிறகு ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலகம் முழுவதும் 1 கோடியே 10 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டது. இதில் 85 லட்சம் கார்கள் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவில் 6 லட்சம் கார்களும் விற்பனை செய்ததாக தெரிவித்தது. 2005-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டது. ஆனால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது 2015-ம் ஆண்டில்தான்.

ஆனால் விசாரணையில் சில கார்கள் நிர்ணயிக்கப்பட்ட புகை மாசு அளவை விட 40 மடங்கு அதிகமாக நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாசம் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சமீபத்தில் அதாவது கடந்த மே மாதம் 60 ஆயிரம் போர்ஷே கார்களை திரும்பப் பெறுமாறு நிறுவனத்துக்கு ஜெர்மனி அரசு உத்தரவிட்டது. ஐரோப்பாவில் விற்பனை செய்த இந்த கார்களில் தில்லுமுல்லு செய்யப்பட்ட புகை கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது. கடந்த மாதம் இதே பிரச்சினைக்காக ஆடி நிறுவனம் 60 ஆயிரம் கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

முதல் கள பலி

எப்போதுமே ஒரு பிரச்சினை தீவிரமடைந்துவிட்டால் நிறுவனத்தின் தலைவரை மாற்றுவதுதான் உடனடி நடவடிக்கையாகும். ஃபோக்ஸ்வேகன் நிர்வாகமும் அதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்க சுற்றுச் சூழல் நிறுவனம் வழக்கு பதிவு செய்த 5 நாளிலேயே ஃபோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி மார்டின் வின்டர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது இடத்துக்கு மாத்தியாஸ் முல்லர் நியமிக்கப்பட்டார். இவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஹெர்பெர்ட் டெய்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

புகை மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அமெரிக்க நிர்வாகம் கிரிமினல் வழக்கு 2017 மார்ச் மாதம் பதிவு செய்தது. நிறுவனம் மீது 430 கோடி டாலர் கிரிமினல் குற்றத்துக்கான அபராதமும், சிவில் குற்றத்துக்கு 1750 கோடி டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு இந்தத் தொகை நஷ்ட ஈடாக கார் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதற்காகவும் அளிப்பதென ஒப்புக் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரை அமெரிக்காவில் சட்ட ரீதியாக எவ்வித நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைமை அதிகாரிகள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இரண்டு பேருக்கு சிறை தண்டனை விவரமும் அளிக்கப்பட்டுவிட்டது.

ஐரோப்பிய யூனியனில் விற்பனையான கார்களுக்கு எவ்வித இழப்பீட்டையும் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. ஜெர்மனியில் 100 கோடி யூரோவை இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது இந்நிறுவனம்.

புகை பிரச்சினையில் சிக்கித் திணறும் ஃபோக்ஸ்வேகன், இனிவரும் காலங்களில் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக பேட்டரியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி பேட்டரி கார் தயாரிப்பாளராக உருவாவதை இலக்காகக் கொண்டுள்ளது. புகை மோசடியால் ஏற்பட்ட களங்கத்தை இது போக்கிவிடுமா?.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x