Published : 25 Jun 2018 10:53 AM
Last Updated : 25 Jun 2018 10:53 AM

பிஎம்டபிள்யூ கிராண்ட் டுரிஸ்மோ அறிமுகம்

முழுவதும் உள்நாட்டில் தயாரான கிராண்ட் டுரிஸ்மோ 630டி மாடல் காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 6 சீரிஸ் பிரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் கார்களை வாங்க முடியும்.

இதிலும் இரண்டு மாடல்கள் அதாவது லக்ஸுரி மற்றும் எம் ஸ்போர்ட் என அறிமுகம் செய்துள்ளது. லக்ஸுரி மாடல் கார்கள் சிறந்த வடிவமைப்பு, கம்பீரமான தோற்றம், சொகுசான பயணத்துக்கேற்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். மற்றொரு மாடல் எம் ஸ்போர்ட். இது துடிப்பானவர்களுக்கானதாகும். 6 சீரிஸ் ரகத்தில் இதுவரை பெட்ரோல் மாடல்கள்தான் வந்தன. தற்போது முதல் முறையாக டீசல் மாடலும் வெளிவந்துள்ளது.

மினரல் வொயிட், கிளேசியர் சில்வர், நீலம், கருஞ்சிவப்பு உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இவை வெளிவந்துள்ளன. லக்ஸுரி மாடலின் உள்புறத்தில் டகோடா பிராண்ட் தோல், கான்பெரா பீஜ் நிறத்தில் மிகச் சிறப்பான தையல் வேலைப்பாடுடன் வந்துள்ளது. பீஜ் நிறம் தவிர கருப்பு நிறத்திலும் மிருதுவான தோலினால் ஆன இருக்கைகள் சொகுசான பயணத்துக்கு வலு சேர்க்கும். எம் ஸ்போர்ட் மாடலில் நாப்பா பிராண்ட் வெள்ளை நிற மிருதுவான தோல் இருக்கைகள் உள்ளன.

முதல் முறையாக இந்த காரில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பார்க்கிங் செய்யும் வசதியும் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் மூலம் காரின் வெளிப்புறத்திலிருந்து நேர்க்கோட்டிலான பார்க்கிங்கை ரிமோட் மூலம் மேற்கொள்ள முடியும். இது தவிர வாகனத்தின் சாவியில் பல்வேறு நினைவூட்டும் அம்சங்கள் உள்ளன. வாகனத்தை சர்வீஸ் விடுவதற்கான நினைவூட்டல், காரினுள் நிலவும் தட்ப வெப்ப நிலை, எரிபொருள் அளவு, எத்தனை கி.மீ. தூரம் ஓடியுள்ளது போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

பார்க் செய்வதற்கு வசதியாக சுற்றுப் புறத்தை உணர்த்தும் கேமிரா, இன்ஜினின் இயக்கத்தை ரிமோட் மூலம் இயக்கும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொண்ட இந்த காரில் 100 கி.மீ. வேகத்தை 6 விநாடிகளில் எட்ட முடியும். பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. லக்ஸூரி மாடல் விலை ரூ. 66.50 லட்சம். எம் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 73.70 லட்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x