Published : 30 Apr 2018 11:38 AM
Last Updated : 30 Apr 2018 11:38 AM

அலசல்: மூன்றில் ஒன்று பழுதென்றால் எங்கே செல்வது?

ங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை, எனக்கு உழைப்பின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது எனும் ரகமா நீங்கள். சரி, இருந்தாலும் ஆன்லைனில் பொருள்களை நீங்கள் வாங்கும்போது அதிர்ஷ்டத்தை நம்பித்தான் ஆக வேண்டும். அதிர்ஷ்டமிருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பொருள் வீடு தேடி வரும். இல்லையெனில் போலிதான். என்னதான் நம்பகமான ஆன்லைன் நிறுவனத்தில் நீங்கள் பதிவு செய்திருந்தாலும், உங்களுக்கு வரும் பொருளின் தரம் உங்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். என்ன செய்வது எல்லாம் விதி என்று நொந்து கொள்ளத்தான் முடியும்.

ஆன்லைன் மூலம் டெலிவரியாகும் பொருள்களில் மூன்றில் ஒரு பொருள் போலியாக உள்ளதாக வெலாசிடி எம்ஆர் எனும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக மூன்று பேரில் ஒருவராக நீங்கள் இல்லாமலிருக்க வேண்டும் என நம்புவோமாக.

கடந்த ஓராண்டில் ஆன்லைனில் பொருள்களை வாங்கிய 6,923 பேரில் 38 சதவீதம் பேருக்கு போலியான பொருள்கள்தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. ஸ்நாப்டீல் நிறுவனத்தில் பொருள் வாங்கியோரில் 12% பேருக்கு போலியான பொருள்கள் வந்துள்ளன. அமேசானில் ஆர்டர் செய்தவர்களில் 11% பேருக்கு போலிகளே கிடைத்துள்ளன. பிளிப்கார்டில் பொருள்கள் வாங்கிய 6% பேருக்கு அவர்கள் எதிர்பார்த்த பொருள்கள் கிடைக்கவில்லை.

ஆன்லைன் மூலம் வாங்கும் வாசனை திரவியங்கள் (சென்ட்) பெரும்பாலும் போலியானவையாக இருப்பதாக நுகர்வோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல காலணிகள் (ஷூக்கள்), விளையாட்டு சாதனங்கள், ஃபேஷன் துணிகள், கைப்பைகள் உள்ளிட்டவை பெரும்பாலும் போலியானவையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோரில் ஒரு சிலர் தங்களுக்கு வந்துள்ள தயாரிப்புகள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விடுகின்றனர். சிலரோ அது போலி என்பதை உணராமலேயே பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். ஒருவேளை இவர்களும் புகார் அளித்தால் போலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

ஆர்டர் செய்து விட்டு தங்களுக்கு வரும் பொருள்கள் தரமில்லை என்ற வகையில் திரும்ப அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் நுகர்வோர் திருப்பி அனுப்பிய பொருள்களால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 340 கோடி டாலராகும்.

ஆன்லைன் மூலம் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் போலிகளின் பெருக்கம் இத்துறை மீதான நம்பகத் தன்மையை சீரழித்துவிடும். விற்பனை மட்டுமல்ல, நுகர்வோருக்கு உரிய பொருள் சென்றடைவதை உறுதி செய்தால் மட்டுமே அதிக மக்கள் ஆன்லைன் குடையின்கீழ் வருவர். இல்லையெனில்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x