Last Updated : 09 Apr, 2018 11:18 AM

 

Published : 09 Apr 2018 11:18 AM
Last Updated : 09 Apr 2018 11:18 AM

சபாஷ் சாணக்கியா: அளவுகோல் எது?

`பிறப்பு மட்டும் யாருக்கும் உயர்வைத் தந்து விடாது.ஒருவருக்கு உன்னதத்தைத் தருவது அவரது செயல்பாடுகள்தான் ' என்கிறார் சாணக்கியர்.

அதாவது, யாரும் சிறப்பானவராகக் கொண்டாடப்படக் காரணம் அவர் பிறந்த குடும்பமோ, அவருக்குக் கிடைத்த பதவியோ, பணமோ, புகழோ அது போன்ற மற்றவை எதுவுமே அல்ல. ஆனால், அவர் தமது செயல்களில் காட்டும் நற்பண்புகள், உதவிகள், சாதனைகள் போன்றவையே அதற்குக் காரணம் என்கிறார் சாணக்கியர்.

ஐயா, ஒருவரை நாம் உளமார மதிப்பது எதனால்? அது இருக்கட்டும். முதலில் இதைச் சொல்லுங்கள். நம்மால் மதிக்கப்படுபவர்கள் இரு வேறு வகைப்படுவார்கள் இல்லையா? பொது வாழ்க்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் இசைக் கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், மேடைப் பேச்சாளர்கள் போன்றவர்கள் ஒரு வகை. அவர்களிடம் நமக்கு நேரடித் தொடர்பு இல்லாதிருக்கும். நேரடி அல்லது உடனடிப் பாதிப்பும் இருக்காது.

அது சரி.கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் ரசிப்பவர்களை எல்லாம் மதிக்கின்றீர்களா? ஒரு கலைஞனை அவனது திறமைக்காக ரசிக்கலாம். பாராட்டலாம். ஆனால் அவனது நடவடிக்கை சரியில்லையென்றால் மதிப்பீர்களா?

பாப்லோ பிக்காசோ (1881-1973) ஸ்பெயினில் பிறந்தவர். மிக புகழ் பெற்ற ஓவியர் . 2015ல் அவரது ஓவியம் ஒன்று 17.9 கோடி அமெரிக்க டாலர்களுக்கு அதாவது சுமார் 1,170 கோடி ரூபாய்க்கு விலை போயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவர் நடந்து கொண்ட முறையைப் பார்த்தால் நொந்து போவீர்கள்.

அவருக்கு ஏழு பெண்களுடன் தொடர்பாம். அதில் இருவர் தற்கொலை செய்து கொண்டனராம். இருவருக்கோ பைத்தியமே பிடித்து விட்டதாம். இப்போது சொல்லுங்கள். அவரது ஓவியங்களைப் போற்றினாலும், அவரைப் போற்ற மாட்டீர்கள் இல்லையா?

புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் கதை தெரியுமா? அவருக்கு 10 குழந்தைகள் பெற்றுக் கொடுத்த மனைவி இருந்தும் 18 வயது நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாராம்! பலருக்கு அவரது எழுத்து பிடிக்கலாம். ஆனால் அவரை?

இவ்வளவு ஏன்? சல்மான் கான் இந்தித் திரைப்பட உலகின் வசூல் ராஜா. அவர் நடித்த 80 படங்களில் 12 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டியவை! அதுமட்டுமல்ல.இரு முறை தேசிய விருதும், இரண்டு முறை பிலிம்பேர் விருதும் பெற்றவர்.

ஆனால் சென்ற வியாழக்கிழமை செய்தி படித்திருப்பீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டு மான்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். அந்த மாபெரும் நடிகர் சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையோர நடைபாதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் மேல் காரை ஏற்றி அதில் ஒருவர் இறந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கெட்ட பெயரிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா? சல்மானைப் பற்றிப் பேசினால் இவை தானே நினைவில் மேலோங்கி நிற்கின்றன. அவர் பெருமையை எல்லாம் சீர்குலைக்கின்றன?

நாம் மதிக்கும் இரண்டாவது வகையினர் நமது வாழ்க்கையில் நேரடித் தொடர்பு உடையவர்கள்.நம் வாழ்க்கைப் போக்கை நேரடியாகப் பாதிக்கக் கூடியவர்கள்.ஆமாம், உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போன்றவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

இவர்களை நாம் மதிப்பதற்கும் உயர்வாக நினைப்பதற்கும் காரணம், முன்னே சொல்லியது போல, அவர்களது செயல்பாடுகள் தானே? உங்கள் உறவுக்காரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உதவுபவர் தானே பெருமைக்குரியவர். கூடப்பிறந்த சகோதரர் பணக்காரராக இருக்கலாம். ஆனால் அவர் உதவாத பொழுது , தானே முன்வந்து உதவும், தூரத்து ஏழைப் பங்காளி கூட உயர்ந்தவராக நெருக்கமானவராகத் தெரிவார் இல்லையா?

அதைப் போலவே எண்ணங்கள் வார்த்தைகள் ஆகாது, வார்த்தைகள் செயல் ஆகாது. வெறும் உயர்ந்த சிந்தனைகளோ, செய்யப் போகிறேன் எனும் நல்ல நல்ல வார்த்தைகளோ இருந்தால் போதாதில்லையா ? எவை எவை செயல் படுத்தப்படுகின்றனவோ, அவைகளை வைத்துத் தானே பலன் கிடைக்கும், ஒருவரை எடை போட முடியும்?

`குறைவாகப் பேசி, நிறைவாகச் செய்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்கள் தாங்கள் கூறிய சொற்களுக்கு ஈடாக தங்களால் செயலாற்ற முடியாமல் போய்விட்டால் வெட்கித் தலை குனிந்து விடுவார்கள் ' என்கிறார் சீனத் தத்துவ ஞானி கன்பியூஸியஸ். மொத்தத்தில் மனிதர்கள் மதிக்கப்படுவதும் போற்றப்படுவதும் அவர்களின் செயல்களினால்தான், செயல்பாட்டினால்தான்; பெரிய இடத்தில் பிறந்ததினாலோ, பெரும் பணம், அல்லது அரிய திறமை இருப்பதனாலோ அல்ல என சாணக்கியர் சொல்வது சரி தானே?

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x