Published : 09 Apr 2018 11:16 AM
Last Updated : 09 Apr 2018 11:16 AM

சீன கார் விற்பனைக்கு 2,000 இந்திய விற்பனையகங்கள் போட்டி

ந்தியச் சந்தையில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதை உத்தேசித்தே இந்தியாவில் தடம் பதிக்க உள்ள சீன நிறுவனத்தின் கார்களை விற்க 2 ஆயிரம் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

சீனாவின் எஸ்ஏஐசி குழும நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார்ஸ், இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்காக இந்நிறுவனம் குஜராத்தில் ஹலோல் எனுமிடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மூடிவிட்ட ஆலையை வாங்கி அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் கார்கள் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய சாலைகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய உரிய விற்பனையாளர்களைத் தேர்வு செய்யும் பணியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிறுவன இணையதளத்தில் இதுவரை 2 ஆயிரம் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

உரிய விற்பனையகங்களைத் தேர்வு செய்வதற்காக முன்கூட்டியே ஆர்வமுள்ள, அனுபவம் உள்ள விற்பனை நிலையங்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்நிறுவனம் வரவேற்பதாக அறிவித்தது.

சந்தையில் நம்பகத் தன்மை, உள்ளூர் சந்தையைப் பற்றி விரிவான அனுபவம், வலுவான நிதி நிலை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம், மிகச் சிறந்த செயல்பாடு ஆகியன நிறுவனம் வரையறுத்துள்ள தகுதிகளாகும்.

வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து தங்கள் நிறுவனம் எதிர்நோக்கும் தகுதிபடைத்த விநியோகஸ்தர்களை தேர்வு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. ``ஒன்றிணைந்து நாம் வளர்வோம்’’ என்ற ஒரு வரி வாசகம்தான் விநியோகஸ்தர்களுக்காக நிறுவனம் அளித்துள்ள உத்தரவாத உறுதிமொழி என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

ஹலோலில் உள்ள ஆலையில் புதிதாக பிரஸ் ஷாப் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல தங்கள் காருக்கு தேவையான உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருகிறது எம்ஜி மோட்டார் இந்தியா.

இந்த ஆண்டில் தனது ஆலையில் பணி புரிய முதல் கட்டமாக ஆயிரம் பேரைத் தேர்வு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 22 சதவீத அளவுக்கு பெண் பணியாளர்களைத் தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 220 பெண் பணியாளர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது. பெண் பணியாளர்களின் சதவீதத்தை எதிர்காலத்தில் உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்நிறுவனம்.

விநியோக உரிமை கோரியுள்ள நிறுவனங்களில் பலவும் ஏற்கெனவே பிற நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x