Published : 05 Feb 2018 11:50 AM
Last Updated : 05 Feb 2018 11:50 AM

பர்மிட் இல்லாத ஆட்டோக்களை கண்காணிக்க பிற மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது மும்பை ஆர்டிஓ

பொ

து போக்குவரத்தில் ஆட்டோக்களின் பங்களிப்பு அளப்பரியது. இருப்பினும் வாகன நெரிசலுக்குக் காரணமாக இருப்பதும் இவையே. ஒரு லட்சம் ஆட்டோக்களுக்கு பர்மிட் அளிக்கப்பட்டிருந்தால், பர்மிட் இல்லாமல் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் இதே அளவுக்கு இருப்பது மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. இது பெரும்பாலான நகரங்களில் அனைத்து மாநிலங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.

மும்பை மாநகர வட்டார போக்குவரத்து அலுவலகம் இதற்கு சிறப்பான தீர்வை கண்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பையில் மட்டும் 40 ஆயிரம் பர்மிட் இல்லாத ஆட்டோக்கள் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்டோக்களின் இயக்கத்தை முடக்க க்யூஆர் கோட் எனும் முறையை ஆர்டிஓ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி ஆர்டிஓ அலுவலகத்தின் பதிவுபெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் க்யூஆர் கோட் வழங்கப்படும். இத்தகைய கோட் உள்ள ஆட்டோக்களுக்கு மட்டுமே சிஎன்ஜி வழங்க வேண்டும் என்று எரிவாயு நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விதம் க்யூ ஆர் கோட் இல்லாத ஆட்டோக்களுக்கு எரிவாயு விநியோகம் முற்றிலுமாக நின்றுபோகும். இதனால் இத்தகைய ஆட்டோக்கள் சாலைகளில் புழங்குவது முற்றிலுமாக நின்றுபோகும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு பெற்ற ஒவ்வொரு ஆட்டோவுக்கும் ஒரு க்யூ ஆர் கோட் வழங்கப்படும். இதை ஸ்கேன் செய்யும்போது வாகனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கும். ஆட்டோ வாங்கிய தேதி, அதன் ஆயுள்காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். பர்மிட் முடியும் தேதி, உரிமையாளர் பற்றிய அனைத்து விவரங்களும் இதில் இடம்பெறும்.

காலாவதியான, பர்மிட் இல்லாத, கள்ளத் தனமாக இயக்கப்படும் ஆட்டோக்கள் சிஎன்ஜி நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்தாலே அங்குள்ள ஸ்கேனரில் விவரம் தெரியும். உடனே அதற்கு சிஎன்ஜி விநியோகிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நகர போக்குவரத்து காவல் துறை, எரிவாயு விநியோகிக்கும் மகாநகர் கேஸ் நிறுவனம் மற்றும் ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவும் முடிவு செய்துள்ளது.

பர்மிட் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்களை முறைப்படுத்த இது மிகவும் மேம்பட்ட நடைமுறை என்று மும்பை ஆட்டோ ரிக்ஷா சங்க பிரதிநிதி குரியன் தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

உரிய பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களோடு ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை பாதிக்கும் பர்மிட் இல்லாத ஆட்டோக்களை ஓரங்கட்டுவதை பலரும் வரவேற்றுள்ளனர். இதே நடைமுறையை பிற மாநில அரசுகளும் பின்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x