Published : 05 Feb 2018 11:39 AM
Last Updated : 05 Feb 2018 11:39 AM

பருவ நிலை மாற்றமும், பட்ஜெட் செலவும்...

ருவ நிலை மாற்றம் குறித்து ஆண்டுதோறும் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் கூட்டம் 1995-ம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஏறக்குறைய 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதிலும் சமீப ஆண்டுகளாகத்தான் உலக நாடுகள் பருவ நிலை மாற்றம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக புவியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு பருவ நிலை முற்றிலுமாக மாறி வருகிறது. கணிக்க முடியாத கால நிலை அதாவது கடும் மழை, கடும் வறட்சி, கடும் பனிப் பொழிவு, கடல் சீற்றம் ஆகியன உலகை அச்சுறுத்தி வருகின்றன.

2002-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதிபட எடுத்துரைத்தது. ஆனாலும் ரஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இதை ஏற்க மறுத்தன. ஆனால் 2015-ம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில் வளரும் நாடுகளின் நிபந்தனைகளை ஓரளவு ஏற்பதாக வளர்ச்சியடைந்த நாடுகள் தெரிவித்தன.

இதன்படி கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் விளைவுகளை மாற்ற ஒப்புக் கொண்டன. அதேபோல சூழல் பாதுகாப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு மாற்றித் தருவதில் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் சூழல் பாதுகாப்புக்காக அரசு மேற்கொள்ளும் அதாவது ஒவ்வொரு பொருள்கள் மீதும் விதிக்கப்படும் கரியமில வாயு வரி (கார்பன் டாக்ஸ்) உரிய வகையில் செலவிடப்படுகிறதா என்பது இன்னமும் கேள்வியாகவே உள்ளது.

கரியமில வாயு வெளியேற்றும் வாகனங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு உற்பத்தி வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்த வரி விதிப்பு விகிதம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு வரி வருவாயும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தத் தொகை சூழல் பாதுகாப்புக்கு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பட்ஜெட்டில் மரபு சாரா எரிசக்தித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை கூட முழுமையாக செலவிடப்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதற்காக செலவிடுவது குறைந்து வருகிறது. ஆனால் கரியமில வாயு வரி வசூல் அதிகரித்து வருவது முரணான விஷயமாகும்.

கியூடோ மாநாட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், பாரீஸ் ஒப்பந்தத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பிற நாடுகளுக்கு இந்தியா அறிவுறுத்துவதைவிட, நம் நாட்டில் அதை செயல்படுத்துகிறோமோ என்பதை அரசுகள் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இங்கு ஏற்படும் இயற்கை சீற்றங்களையாவது ஓரளவு தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். பசுமை வரி விதிப்பு பசுமை சூழ் உலகை படைப்பதற்கே, ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இல்லையெனில் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் புவி மிக மோசமானதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x