Published : 26 Jan 2015 02:17 PM
Last Updated : 26 Jan 2015 02:17 PM

வேலையிழப்பும் மாற்று தீர்வுகளும்

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம் என்று உங்கள் மேலதிகாரியிடமிருந்து மெயில் வருகிறது. இந்த வேலைக்கு நீங்கள் பொருத்தமில்லை, உங்கள் தகுதியை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று விளக்கம் சொல்கிறார் அவர்.

வாங்கிய கடன்களும், கடமைகளும் முன்னே நிற்க என்ன செய்வது என்கிற குழப்பம் உங்களை என்ன யோசிக்க வைக்கும். அப்படி ஒரு இக்கட்டில் நிற்கிறார்கள் ஐடி துறையைச் சேர்ந்த பல ஆயிரம் பணியாளர்கள்.

பணியை இழப்பது ஒருபக்கம் என்றால் வேலைபார்க்கும் நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்து நிற்கின்றனர் பல ஆயிரம் பணியாளர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் சில காரணங்களால் மேற்கொண்டு தொழிலை நடத்தாத நிலைமையில் அவற்றில் வேலைசெய்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையிழந்தனர்.

இது தகவல் தொழில்நுட்ப துறை அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் நடக்கவில்லை. பல ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் விசைத்தறி மில்கள், உரத்தொழிற்சாலைக ள் மூடப்பட்டு பலரது வேலையிழப்புக்குக் காரணமாகியுள்ளன. புதிய புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் ஒவ்வொரு முறையும் பழைய தொழில்நுட்ப பணியாளர்களுக்கான வேலை இழப்பும், நலிவடைந்து வரும் உற்பத்தி தொழில்களால் வேலை இழப்பதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

இதற்கு பின்னால் நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, லாபத்தை உறுதிப்படுத்துவது, அல்லது புதிய உத்திகள், தொழில்நுட்பம் என பல காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என பெரு நிறுவனங்களும் கூறிவிடுகின்றன.

பணி பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், தவிர்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி என்கிற எல்லாவற்றையும் தாண்டி இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதை முன்னறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

அசெம்பளிங் யூனிட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் வேலை இழந்தால் அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகள் மிக அரிதானது. அதே தொழில்நுட்பத்தில் இயங்கும் வேறு நிறுவனம் என்றால் பணிவாய்ப்புக்கு முயற்சிக்கலாம். ஆனால் நோக்கியாவும், பாக்ஸ்கானுக்கும் மாற்றாக இங்கு வேறு நிறுவனங்கள் இல்லையே... இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலை இழந்த அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.

புதிய ஒரு தொழில்நுட்பத்தையோ, பணி அனுபவத்தையோ கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத இந்த பணியாளர்களுக்கு மாற்று வாய்ப்புதான் என்ன? வேலைவாய்ப்பு போட்டியை சமாளிக்கும் அளவுக்கு தகுதிகளோ, திறமைகளோ இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் 20 வயதில் பணிக்கு சேர்ந்து 30 வயதில் வேலை இழக்கும் ஒருவருக்கு தனது தனித்திறமையை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் மிகக் குறைவுதான். தகவல் தொழில்நுட்ப பணியாளர்களும், தொழில் நுட்பத்தில் பின்தங்கியவர்களும் திரும்பவும் வேலைவாய்ப்பு போட்டியில் பங்கெடுக்க வேண்டும்...

இது போன்ற நிலைமைகளில்தான் எல்லா விதமான நடைமுறைகளையும் தாண்டி வேலை இழப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கான மாற்று தீர்வுகள் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து இவர்களுக்கான மாற்று வாய்ப்புகள் என்ன? இவர்களை மாற்றும் வாய்ப்புகள் என்ன என்பவற்றைக் மனிதவள துறையைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்டோம்.

இது தனிப்பட்ட பணியாளர்கள் சார்ந்த பிரச்சினை அல்ல, வளரும் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாது. அதே சமயத்தில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகள் என்பது சட்ட ரீதியான விவகாரங்கள். ஆனால் இப்படியான இரு சூழ்நிலையை பணியாளர்கள் எதிர்கொண்டால் அதை சமாளித்துக் கொள்வது எப்படி என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க நமது திட்டமிடுதல், கற்றுக்கொள்ளுதல், திறனை வெளிப்படுத்துதல் சார்ந்த விஷயம்

இப்படி பணி இழப்பவர்கள் புதிய வேலையை தேடி போகவேண்டும்தான்... ஆனால் வேலைவாய்ப்பு போட்டி கடந்த காலங்களைவிட அதிகரித்துள்ளதே.. அதை எப்படி சமாளிப்பது அல்லது வருமானத்தை உத்திரவாதப்படுத்த என்ன செய்வது என்கிற கேள்விகளோடு இதை அணுக வேண்டும் என்கின்றனர்.

எனவே இது போன்ற நேரங்களில் பணியாளர்களுக்கான மாற்றுத்தீர்வுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்

திட்டமிடுதல்

திறன் பணியாளரோ அல்லது திறன் குறைவான பணியாளரோ இருதரப்புமே இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமெனில் அடுத்து என்ன செய்வது என்பதை திட்டமிட வேண்டும். எந்த திட்டமுமில்லாமல் மாற்று வேலை தேடினால் பயனில்லை. வளரும் தொழில்நுட்பம், பணிபாதுகாப்பு, நிறுவனத்தின் நம்பகம் போன்ற இவற்றைக் கொண்டு மாற்று பனி தேடலாம். அல்லது சுய தொழில்களுக்கான முயற்சிகளில் இறங்கலாம்.

திறன் வளர்ப்பு

வேலை இழக்கும் பணியாளர்களில் தொழில் அனுபவம் மற்றும் தகுதி கொண்ட்வர்களுக்கு எளிதாக மாற்று வேலை தேடிக்கொள்ள முடியும். ஆனால் அசெம்பிளிங் யூனிட்டில் பணியாற்றிய பணியாளர்களுக்கு முழு தொழில் அனுபவம் இருக்காது என்பதால் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கின்றனர் மனித வளத்துறையினர். குறிப்பிடத்தக்க தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

சமூக வலைதளங்கள்

வழக்கமான நமது வேலை தேடும் முறைகளிலிருந்து மாற்றி சிந்திக்க வேண்டும். தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில் சமூக வலைதளங்களில் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது. வேலைவாய்ப்புகளை குறிப்பிடும் பல இணையதளங்கள் மூலம் தேடுங்கள். தவிர ஒவ்வொரு நிறுவனங்களில் பணியாளர்கள் தேவை குறித்து அவர்களது இணையதளங்களிலேயே குறிப்பிட்டு இருப்பார்கள். அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புகள் மூலம்

புதிய நபர்களை வெளியிலிருந்து எடுத்துக் கொள்ளும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வழி புதியவர்களை வேலைக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது. எனவே உங்களது நண்பர்கள் வழி தொடர்பில் இருங்கள்.

பயிற்சிகள்

புதிய தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் எந்த தொழிலாக இருந்தாலும் தங்களையும் அந்த புதிய தொழில்நுட்பத்துக்கு பொருத்திக் கொள்ள வேண்டும். கணினி பயிற்சி தேவையாக இருக்கிறது என்றால், அதற்கு உடன்பட வேண்டும். திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சொந்த தொழில் முயற்சிகள்

திடீரென பணியிழப்பில் சோர்ந்து போகாமல் குறுகிய கால பயிற்சிகள் மூலம் சொந்த தொழில் வாய்ப்புகளையும் யோசிக்கலாம். சேவைத்துறை மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த துறைகளில் எப்போதுமே வாய்ப்புகள் உள்ளது. இவற்றை கற்றுக்கொள்வதும் எளிது, குறுகிய கால பயிற்சிகளும் கிடைக்கும்.

சரியானதை தேடுதல்

வேலை இழந்தாலும் மாற்று தீர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. புதிய புதிய நிறுவனங்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வரவு காரணமாக புதிய வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும். சரியானதை தேடி போக வேண்டும்.

சேமிப்பும் செலவும்

வேலை இழந்ததும் மாற்று வாய்ப்புகளுக்கான யோசிக்கும் அதே நேரத்தில் நமது சேமிப்பு, செலவு முதலீடு சார்ந்த விஷயங்களிலும் முன் யோசனையோடு நடந்து கொள்ள வேண்டும். நமது தினசரி மற்றும் மாதச் செலவுகள், ஆண்டு செலவுகளை திட்டமிட்டு செலவு செய்வதும்,முதலீடும் செய்வது முக்கியமானது.

இனிவரும் காலங்கள் சிறப்பாக இருக்க திட்டமிடுங்கள், வாழ்க்கை பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x