Last Updated : 17 Apr, 2017 11:23 AM

 

Published : 17 Apr 2017 11:23 AM
Last Updated : 17 Apr 2017 11:23 AM

வாராக் கடன் காரணங்களும், தீர்வுகளும்

இந்திய வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 மார்ச் மாதம் 7.8 சதவீதமாக இருந்த வாராக்கடன் டிசம்பரில் 9.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

திருத்தி அமைக்கப்பட்ட கடன் அளவையும் சேர்த்தால், வாராக் கடன் அளவு 12 சதவீதத்துக்கு மேல் இருக்கும். வளரும் நாடுகளில் வாராக் கடன் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. வரும் காலங்களில் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக்கொண்டாலும், வங்கிகளின் நிதி நிலைமை சீரடைய சில காலம் ஆகும்.

வாராக் கடனின் போக்கு

இந்திய வங்கிகளை பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள் என்று மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்த்தால் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மிக மோசமாக இருப்பது தெரிகிறது. கடந்த நான்காண்டுகளில் வாராக்கடன் அளவு பொதுத் துறை வங்கிகளில் 1.5 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவும், தனியார் துறையில் 0.3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளில் 0.4% முதல் 0.9% ஆகவும் இருக்கிறது. 2012-ல் வாராக் கடன் விழுக்காடு பொதுத்துறை வங்கிகளுக்கும் மற்றவைக்கும் உள்ள வேறுபாடு 1 சதவீதத்தைவிட குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று வாராக் கடன் விழுக்காடு இடைவெளி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உள்ளது.

நிறுவனங்களும் வங்கிகளும் மட்டுமே காரணம்

வியாபார நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும், கடனை தள்ளுபடி செய்வதிலும், கடன் சீரமைப்பு செய்வதிலும், அரசியல் தலையீடுகளும், லஞ்சமும் இருப்பதாக பல நிகழ்வுகள், கிங்பிஷர் வரை, எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன.

வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன் வியாபாரத்தின் எதிர்கால போக்கு, வியாபார நிறுவனத்தின் சொத்து, வியாபாரத்துறையில் உள்ள இடர்கள் என பலவற்றை ஆராய்ந்து கடன் கொடுக்கவேண்டும். பெரிய தொகை கடன்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் ஒன்றாக இணைந்து கடன் வழங்க வேண்டும். இதனால் பல வங்கிகள் ஒரு வியாபாரத்தின் தன்மையை பற்றி ஆராயும்போது அதில் உள்ள சிக்கல்கள் தெரிவதுடன், கடன் கொடுப்பதில் உள்ள இடர்களும் நீங்கவேண்டும். இவ்வாறுதான் பல பெரிய நிறுவனங்களுக்கு பெரியத் தொகைகள் கடனாக கொடுக்கப்பட்டன.

இருந்தபோதிலும், அந்நிறுவனங்களில் இருந்து கடனை திரும்ப பெற முடியவில்லை. கடன் கொடுப்பதற்கு முன் வங்கிகள் வியாபார நிறுவனம் பற்றி செய்ய வேண்டிய ஆய்வுகளை செய்யத் தவறிவிட்டன, நிறுவனங்களும் கடனை அடைக்காமல் வருவாயை வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிட்டன. இதற்கு அரசியல் தலையீடும், வங்கி அதிகாரிகளும் காரணம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இந்த வாதத்தில் முற்றிலும் உண்மை இல்லை என்று புறம் தள்ளிவிட முடியாது, என்றபோதிலும், மற்ற காரணங்களையும் ஆராய வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்

2002-03 முதல் இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. வளரும் பொருளா தாரத்தில் ஏற்படக்கூடிய அதிக லாபத்தை எதிர்பார்த்து, பெரிய அளவில் முதலீடுகள் வரத்தொடங்கின. இதே காலத்தில் அரசின் முதலீட்டு செலவு குறைய ஆரம்பித்தது. இந்திய பொருளாதாரத்தில் தனியார் துறை பங்களிப்பு உயரும் போது, இந்திய பொருளாதாரமும் வேகமாகவே வளரத் தொடங்கியது. பெரும் பகுதி நிதி வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகும்.

2008-ல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு பிறகு பொருளாதாரத்துடன் வியாபார நிறுவனங்களின் நிதி வரத்து குறைய ஆரம்பித்தது. 2011 முதல் வங்கிகளின் வாராக் கடன் உயர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து வியாபார நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மேலாண்மையை மாற்றுவது, கடனை மறுசீரமைத்து கூடுதல் கடனுடன் அதிக நாள் அவகாசம் கொடுப்பது என்ற பல வழிகளை கையாண்டன. இந்த மாற்று முறைகள் வாராக் கடன் அளவினை குறைக்கவில்லை.

வாராக் கடனுக்கான பொருளாதார காரணங்கள்

2012 முதல் பொது துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு உயர்வதற்கு பொருளாதார மந்த நிலை ஒரு முக்கிய காரணம் என்பதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை 2016-17 அழுத்தமாக கூறுகிறது.

கிரெடிட் சூயிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல நிறுவனங்களின் வரிக்கு முந்தைய வருவாயானது அந்நிறுவனங்களின் வட்டியை செலுத்தக்கூட போதவில்லை என்று கூறுகின்றது. எனவே வட்டியை செலுத்தும் அளவிற்குகூட போதுமான விற்பனை வரவை நிறுவனங்கள் பெறமுடியவில்லை என்றால் வாராக் கடன் உயரத்தானே செய்யும். இதனை twin balance sheet (TBS) பிரச்சினை என்கின்றனர், அதாவது வியாபார மந்த நிலையால் நிறுவனங்களின் balance sheet-ல் பிரச்சினை, வட்டியும் முதலும் செலுத்தவில்லை அதனால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வங்கிகளின் balance sheet-லும் பிரச்சினை.

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் இருக்கின்றன. குறிப்பாக மின்சார உற்பத்தி துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி வரத்து பெரிய சரிவை சந்தித்துள்ளன. மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மின்சாரத்தின் விலையும் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.4 ல் இருந்து ரூ. 2.50 ஆகக் குறைந்துள்ளது. நீண்ட கால ஒப்பந்தம் உள்ள மின்சார நிறுவனங்கள் மட்டுமே முழுமையான திறனுடன் மின்சார உற்பத்தி செய்கின்றன. அதிக போட்டியினால் ஏற்பட்ட விலை குறைப்பு என்பதால் தொலை தொடர்பு நிறுவனங்களும் நிதி சிக்கலை சந்திக்கின்றன. கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்களிலும் இது போன்ற நிதி சிக்கல் நீடிக்கின்றது.

இவை எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கும் போது பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் செயல் திறன், தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடன் அளித்தல், வட்டி மற்றும் கடனை திரும்பப் பெறுவதில் வங்கி அதிகாரிகள் காட்டிய மெத்தனம், இவை எல்லாவற்றிலும் இருந்து வந்த அரசியல் தலையீடு மற்றும் லஞ்சம் என்று பார்க்கும் போது, வாராக் கடனை திரும்பப் பெறுவதற்கு ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

ஆனால் இந்த எல்லா காரணங்களுடன் பொருளாதார மந்த நிலையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும் போது, அந்த இழப்பை முழுவதும் நிறுவனத்தின் மேல் சுமத்தி, அவற்றை பொருளாதாரத்திலிருந்து விளக்கி வைப்பதைவிட, எங்கெல்லாம் அந்நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க முடியுமோ அங்கெல்லாம் அவற்றை செய்யவும், அந்நிறுவனங்கள் மீண்டு எழ கால அவகாசம் கொடுப்பதும் அவசியம் என்ற நிலைப்பாட்டையும் சிந்திக்கவேண்டும். இதற்கான செயல் திட்டமும், நிறுவன அமைப்பு முறையும் இப்போது இருந்தாலும் அவை போதுமான விளைவை ஏற்படுத்தவில்லை என்பதால் இது தொடர்பாக புதிய சிந்தனை தேவைப்படுகிறது.

வாராக் கடனுக்கு தீர்வுகள் என்ன?

ரிசர்வ் வங்கி இதற்காக பல வழிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கையாண்டுள்ளது. எட்டு முக்கிய அடிப்படை மற்றும் கட்டுமான தொழில்களில் ஒவ்வொரு நிறுவனத்தின் வாராக் கடனை 25 ஆண்டு நீண்ட காலக் கடனாக மாற்றி சிலவற்றிற்கு கூடுதல் கடனும் கொடுத்தன. இவற்றால் நிறுவனங்களின் வட்டி செலவு கூடி வாராக் கடன் பிரச்சினையை பெரிதாக்கியது.

அடுத்து சொத்து மீட்பு நிறுவனங்கள் (Asset Reconstruction Company - ARC). இதில் வங்கிகளே முதலீடு செய்தன. நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய கடனை இந்த ஏஆர்சி கொடுக்கும், அதன் பிறகு கடன் கொடுக்கவேண்டிய நிறுவனங்களில் சில மாற்றங்களை செய்து அவற்றின் பங்குகளை விற்று தங்கள் வருவாயைத் தேடிக்கொள்ளும். இதில் உள்ள சிக்கல்களை அறிந்த ஏஆர்சி-கள் கடன் தொகை முழுவதையும் கொடுக்காமல் மிகக் குறைந்த தொகையை கொடுக்க முன்வந்தன. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஓரளவுக்கு மட்டுமே குறையும் என்பதால் ஏஆர்சி-யிடம் வாராக் கடனை கொடுக்க வங்கிகள் முன்வரவில்லை.

உத்திசார் கடன் மறு சீரமைப்பு (Strategic Debt Restructuring) என்ற திட்டத்தில் நிறுவனங்களின் கடனை அந்நிறுவனத்தில் பங்குகளாக மாற்றி அதனை புதிய முதலீட்டாளர்களிடம் விற்கும் முயற்சியும் நடந்தது. புதிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தை செம்மையாக நடத்த முன்வருவார்கள் என்ற கருத்து இருந்தது. அதிக கடன் உடைய நிறுவனங்களின் பங்குகளை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் இந்த திட்டமும் தோல்வி அடைந்தது.

வாராக்கடன் வங்கி எனும் தீர்வு

பிரச்சினைக்கான எல்லா வழிகளும் மூடப்பட்ட பிறகு மீதம் உள்ள ஒரே வழி எவ்வளவு கரடுமுரடாக இருந்தாலும் அதில் பயணம் செய்துதான் ஆகவேண்டும் என்பது போல, இருக்கும் ஒரே வழி ஏஆர்சி போன்ற ஒரு புதிய நிறுவனத்தை அரசு முதலீட்டில் துவங்குவதுதான் என்று அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2016-17 கூறுகிறது. இதற்கான முதலீடு ஒரு பகுதியை மத்திய அரசும், ஆர்பிஐ தனது லாபம் மற்றும் இருப்பு தொகையிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்த அரசு ஏஆர்சி-க்கு முதலீடாக கொடுக்கவேண்டும்.

இதனை Public Sector Asset Rehabilitation Agency (PARA) என்ற கூறுகின்றனர். இதனை Bad Bank என்று வர்ணிக்கின்றனர், ஏனெனில் வங்கிகளின் வாராக் கடனை எல்லாம் PARA வாங்கிக்கொள்ளும் போது, அதன் வாடிக்கையாளர்கள் எல்லாம் கடன் செலுத்த தவறியவர்கள் என்பதால். PARA சரியாக செயல்படும் போது, வாராக் கடனால் அரசு வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை குறைக்கமுடியும் என்பதுதான் இதன் சாராம்சம்.

மீண்டும் வாராக் கடன் சுமையை அரசின் தலையில் போடுவதும், அதன் மூலம் சாமானியனின் வரி பணத்தை விரயமாக்குவதும் அரசியல்-பொருளாதார சிக்கல் ஏற்படும், எனவே இந்த PARA என்பது வாராக் கடனுக்கான சரியான தீர்வாக இருக்காது என்பது பலரின் கருத்து. மத்திய நிதி அமைச்சரும் இந்த தீர்வை பெரிதாக வரவேற்கவில்லை.

வாராக் கடனின் சுமையை அதற்குக் காரணமானவர்கள்தான் சுமக்கவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். ஆனால் இதனை செய்துமுடிக்க சரியான வழிமுறை தேர்ந்தெடுப்பது தான் இப்போதைய பிரச்சினை.

- seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x