ரூ.2 லட்சத்துக்கு ஆடி, பிஎம்டபிள்யூ கார்கள்

Published : 25 Jan 2016 10:52 IST
Updated : 25 Jan 2016 10:53 IST

சொகுசு கார்களான ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் ரூ. 2 லட்சத்துக்குக் கிடைக்கிறது. மலிவு விலையில் கார்கள் வாங்க விரும்பும் ஆர்வலர்கள் இப்போது சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

சென்னையில் சமீபத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளத்தின் விளைவுதான் இது. ஆயிரக்கணக்கான கார்கள் இப்போது வரிசைகட்டி விற்பனைக்குத் தயாராக உள்ளன.

மெர்சிடெஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஜாகுவார், போர்ஷே போன்ற சொகுசு கார்கள், கோடீஸ்வரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த இந்த கார்கள் இப்போது லட்சாதிபதிகள் பயன்படுத்தும் அளவுக்குக் கிடைக்கிறது.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இத்தகைய கார்களை பாதிக்கப்பட்ட வாகனங்கள் என பட்டியலிட்டுள்ளன. அவற்றைப் பொறுத்தவரை இவற்றை செப்பனிடுவது இயலாத காரியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய கார்களை ஏல நிறுவனங்கள் எடுத்து ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது, நேரடியாக விற்பனை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஏறக்குறைய 10 ஆயிரம் கார்கள் இவ்விதம் விற்பனைக்கு உள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

2011-ம் ஆண்டு மாடல் ஆடி ஏ4 கார் ஏலத்தில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார். இத்தகைய காரை வாங்க விரும்புவோரின் பேரம் பேசும் திறனுக்கேற்ப குறைந்த விலையில் சிறந்த கார்கள் வாங்க முடியும்.

உயர்ரக சொகுசு கார்களின் சந்தை விலையைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்த விலையில் இவை விற்கப்பட்டதாக ஒரு ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை தான் சரிவர பயன்படுத்திக் கொள்ளப் போவதாகக் கூறி ஆந்திரத்திலிருந்து வந்த வெங்கட் என்கிற வர்த்தகர், மஹிந்திரா எக்ஸ்யுவி 500 காரை வாங்கப் போவதாக தெரிவித்தார். இவரது பட்ஜெட் ரூ. 8.5 லட்சம்தான். ஆனால் இவர் பார்த்து வைத்த மஹிந்திரா எஸ்யுவி 500 காரை ரூ. 9.5 லட்சம் கேட்டு ஆன்லைனில் ஒருவர் பதிவு செய்ததால் இவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.

காரில் ஒரு சொட்டு மழை நீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஒரு இடத்தில் கூட துரு இல்லை. புத்தம் புதிய காரைப் போன்று இருந்தது. புதிதாக வாங்கினால் இது ரூ. 17 லட்சம். ஆன்லைனில் எனது பட்ஜெட்டுக்கு மீறி ஏலம் கேட்கப்பட்டதால் விட்டுவிட்டேன் என்று ஏமாற்றத்தோடு கூறுகிறார் இந்த ஆந்திர வர்த்தகர்.

திருவேற்காடில் உள்ள பகுதியில் இந்த கார்கள் நிறுத்திவைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த முதல் ஏலத்தில் பெரும்பாலான கார்கள் விற்பனையானது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் ஏல நிறுவனமான கோபார்ட் டாட் இன் (cppart.in) இந்த ஏலத்தை நடத்தியது.

2015-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு மாடல் கார்களும் இந்த ஏலத்தில் இடம்பெற்றன. கார்கள் அனைத்தும் அவை உள்ள நிலையில் அப்படியே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற் கான ஆவணங்களை மட்டும் ஆன்லைன் நிறுவனம் அளித்துள்ளது. வாங்குபவர்தான் இதை எடுத்துச் சென்று பழுது நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் கோபார்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் கபூர்.

ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 2015-ம் ஆண்டு மாடல் கார் ரூ. 6 லட்சத்துக்கும், ஆடி ஏ4 ரூ.3.4 லட்சத்துக்கும் போர்ஷே கேயின் 2012 மாடல் கார் ரூ.5 லட்சத் துக்கும் ஏலம் போனது.

ஏறக்குறைய 30 ஆயிரம் கார்கள் இழப்பீடு கோரி வந்துள்ளதாகவும் அவற்றில் 10 ஆயிரம் கார்கள் பழுது நீக்க முடியாதவை என்று பட்டியலிட்டு காப்பீட்டு நிறுவனங்கள் விற்பனைக்கு தள்ளிவிட்டுவிட்டதாகவும் கூறப் படுகிறது.

விற்பனைக்கு வந்துள்ள கார்களை பழுது நீக்கி இயக்க முடியும் என்று இக்கார்களை வாங்கிய பெரும் பாலானோர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சில கார்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காது என்பதால் இவை விற்பனைக்கு வந்துள்ளதாக சில மெக்கானிக்குகள் தெரிவிக்கின்றனர். அவை என்னவென்று தெரிந்து அத்தகைய கார்களை தவிர்த்துவிட்டு வாங்குவதே சிறந்தது.

ஆட்டோமார்ட் இணையதள நிறுவனமும் இதுபோன்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை ஏலம் விடுகிறது. இந்நிறுவனம் ஆன்லைனில் கார்களை பட்டியலிட்டபோது அவற்றை வாங்க மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor