Last Updated : 03 Jul, 2017 11:01 AM

 

Published : 03 Jul 2017 11:01 AM
Last Updated : 03 Jul 2017 11:01 AM

தொழில்நுட்ப புரட்சியின் மறு பெயர் ஏஐ!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை அடுத்த தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து முன்னணி நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஒருபுறம் வளர்ந்து கொண்டே இருந்தாலும் மறுபுறம் இதனால் வேலை இழப்புகள் ஏற்படுமோ என்று விவாதங்களும் நடந்து வந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. உதாரணமாக கூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரை கடந்த ஆண்டு சோதனை செய்து பார்த்தது. இன்னும் பத்தாண்டுகளில் டிரைவர் இல்லாத கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற கணிப்புகள் ஆய்வுகள் தொடர்ந்து மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

ஆனால் சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக வெளிவரும் செய்திகள் நேர்மறையாகவே உள்ளன. இது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு நமக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் சீனாவில், டாலியன் மாகாணத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மைய மாநாட்டில் இன்ஃபோசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறுகையில், புதிய தொழில்நுட்பங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது. அதன் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷனால் வேலை இழப்பு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அதுசார்ந்த கல்வியே இதற்கு பதிலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் தேவை?

இப்படி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் வந்துகொண்டே இருக்கக்கூடிய சூழலில் செயற்கை நுண்ணறிவின் தேவை குறித்து ஆராய வேண்டி இருக்கிறது.உதாரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 200 கோடியை கடந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 200 கோடி பேரின் தகவல்களை நிர்வகிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இன்னும் ஆண்டுகள் செல்ல பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும். தகவல்களை சரியாக நிர்வகிக்கவில்லையெனில் மொத்த நிறுவனத்துக்கே பாதிப்பாக அமையும். செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு வரும்பொழுது எத்தனை கோடி பேரின் தகவல்களையும் எளிதாக நிர்வகிக்க முடியும். இதற்காகத்தான் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் தகவல்களை நிர்வகிப்பது அனைத்து நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாகவே இருக்கும். ஆதார் எண்களை நிர்வகிப்பது, பான் எண்களை நிர்வகிப்பது என இந்தியாவுக்கும் தகவல்களை சரியாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

வேலை இழப்பு நேரிடுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால் ஆட்டோமேஷனுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவேண்டும். ஆட்டோமேஷன் என்பது சாப்ட்வேர், ஹார்டுவேர் போன்றவற்றை பயன்படுத்தி வழக்கமான செயல்முறைகளை செய்வது. இதனால் வேலை இழப்பு ஏற்படும். உதாரணமாக செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் அனைத்து துறைகளிலும் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு.

டேட்டா எண்ட்ரி, மேலாண்மை துறை போன்றவற்றில் மட்டுமே தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வருங்காலத்தில் ஹெல்த்கேர், கன்சல்ட்டிங் துறையில் பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது பெருமளவு வேலை இழப்பு ஏற்படாது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. மனிதனை போன்று சிந்தித்து செயல்படக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும். இது மிகப் பெரிய சவால். மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் மட்டும்தான் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இந்த துறையில் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகமாகும்.

கடந்த வருடத்தில் மட்டும் செயற்கை நுண்ணறிவு துறையில் செய்யப்படும் முதலீடு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் பயனை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற கல்வியையும் பயிற்சியையும் அளிக்க வேண்டும். அதற்கான கல்விமுறை கொண்டுவந்தால்தான், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியின் பயனை பெறமுடியும்.

தொழில்நுட்பம் வளர வளர வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்ற வாதம் எப்போதும் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ஓரளவு கொஞ்சம் உண்மையிருந்தாலும் இந்த வாதத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளமுடியாது. உதாரணமாக கணினி பயன்பாட்டுக்கு வந்த போது எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் ஏற்பட்டது.

ஆனால் அதன்பிறகு கணினியால் உருவான வேலைவாய்ப்புகளை நம் கண் முன்னே பார்த்து வருகிறோம். அதன் பயனையும் அனுபவித்து வருகிறோம். அனைவரும் கணினி தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கிவிட்டோம். இப்படித்தான் ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனும் அடுத்த தொழில்நுட்ப புரட்சியும் இப்படித்தான் நிகழப்போகிறது.

- devaraj. p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x