Last Updated : 30 Jan, 2017 10:40 AM

 

Published : 30 Jan 2017 10:40 AM
Last Updated : 30 Jan 2017 10:40 AM

குறள் இனிது: தலைமையும்... தகுதியும்..!

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு (குறள்: 631)

நம்ம நாமக்கல் மாவட்ட மோகனூர்க்காரரான சந்திரசேகர், டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் செய்தியைப் பார்த்தீர்களா?

அதன் 150 வருட வரலாற்றில் ஒரு பார்ஸி அல்லாதவர் அதற்கு தலைவராகியிருப்பது இது தான் முதல் முறை! உப்பு, டீ முதல் இரும்பு, கார்கள், லாரிகள், மென்பொருள் வரை தயாரிக்கும் 100க்கு மேற்பட்ட நிறுவனங்கள் டாடா சன்ஸ் குடையின் கீழ்!

53 வயதில் அவரைக் கூப்பிட்டு இந்தப் பெரிய பதவியைக் கொடுக்கக் காரணம்? அவர் தலைவராக இருந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில்அவர் காட்டிய அசாத்திய திறமைதானே!

2010-ல் அவர் பொறுப்பேற்ற பொழுது ரூ.30,000 கோடியாக இருந்த விற்பனையை 2016-ல் ரூ.1,09,000 கோடியாக்கியதுடன், அதன் லாபத்தையும் ரூ. 7,093 கோடியிலிருந்து ரூ. 24,375 கோடியாக்கி விட்டார்!

சந்தையில் உள்ள டாடா கன்சல்டன்சியின் பங்குகளை எல்லாம் தற்பொழுது வாங்குவதென்றால்,சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வேண்டியிருக்கும் என்றால் அதன் மகத்துவம் புரிகிறதா?

அது மட்டுமில்லைங்க, டாடா குழுமத்தின் மொத்த விற்பனையில் 70% பங்களிப்பும் மொத்த சந்தை மதிப்பில் 60% பங்களிப்பும் இந்த ஒரே ஒரு நிறுவனத்திலிருந்து தானாம்!

எல்லா மென்பொருள் நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே வேலையைத் தானே செய்வார்கள். அப்புறம் டாடா கன்சல்டன்சியில் மட்டும் இவர் எப்படி மாயா ஜாலம் காட்ட முடியும் என்கிறீர்களா? நம்ம சந்திரசேகர் சொல்லியதை யூடியூபில் பாருங்கள்.

மென்பொருள் ஒன்றுதான். ஆனால் அணுகுமுறை வேறு. மற்ற மென்பொருள் நிறுவனங்கள் போகாத, போகத் தயங்கிய லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், சீனா முதலான நாடுகளுக்கு முதலில் இவர்கள் சென்றார்கள். வாரிக் குவித்தார்கள்.

‘நீங்கள் எங்காவது வெற்றிகரமாய் நடக்கும் ஒரு வர்த்தகத்தைப் பார்த்தால், யாரோ ஒருவர் முன்பு ஒரு தைரியமான முடிவு எடுத்துள்ளார் என்று அர்த்தம்' என்று பீட்டர் டிரக்கர் சொல்வது உண்மை தானே!

அத்துடன் எந்தெந்தத் துறைகளுக்கான மென்பொருட்களில் அவர்கள் கவனம் செலுத்தினார்கள் என்பதும் காரணமாய் இருக்கனும் இல்லையா? வாடிக்கையாளர் அட்டவணையைப் பாருங்கள்! ஏபிபி, ஜிஈ, ஜேபி மார்கன், க்வான்டாஸ் ஏர்லைன், வோடபோன், வால்மார்ட்... போதாதா?

வாடிக்கையாளர்களை உண்டு பண்ணுவதும், தக்க வைத்துக் கொள்வதுமே வணிகத்தின் நோக்கம் என்பாரே டிரக்கர்!

நம்ம ஆள் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின், அசைக்க முடியாத பெரும் பாராங்கல் போலிருந்த அந்நிறுவனத்தை 23 துறைகளாய் வகைப்படுத்தினார். பின்னர் அவற்றை 8 ஆக ஒன்றுபடுத்தி 8 திறமைசாலிகளை அவற்றின் செயல்பாட்டிற்குப் பொறுப்பாக்கினார். இதனால் இப்பணிகளுக்கு ஒருமுகப்படுத்த கவனம் கிடைத்தது! வெற்றி தொடர்ந்தது!

செயற்கரிய செயல்களை அதற்குரிய கருவிகள், உகந்த காலம், தக்க வழிமுறைகள் மூலம் செய்து முடிப்பவனே அமைச்சன் என்கிறது குறள். இது இக்கால நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளுக்கும் பொருந்தும்!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x