Published : 30 Jan 2017 10:36 AM
Last Updated : 30 Jan 2017 10:36 AM

உன்னால் முடியும்: சொந்தத் தொழிலே என் அடையாளம்

கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் முரளி. தனது முன்னோக்கிய சிந்தனைகளால் இன்று வளரும் தொழில் முனைவோராக உருவாகியுள்ளார். பள்ளிகள், கல்லூரிகளுக்கான இருக்கைகள், கட்டில்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குப்பை கூடைகள், மருத்துவமனை டேபிள்கள் போன்றவற்றைத் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

குடும்பச் சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியவில்லை. 16 வயதிலேயே கட்டிட வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். 3 ஆண்டுகள் கொத்தனார் வேலை செய்தேன். பிறகு ஒரு கட்டுமான ஒப்பந்தக்காரரிடம் வேலைக் குச் சேர்ந்து கட்டுமான வேலைகளுடன் சூப்பர்வைஸிங் வேலைகளையும் சேர்த்து செய்து வந்தேன். கட்டுமான வேலை களில், வீட்டின் உள்புறம் மாடிப்படி கைப் பிடிகள் உள்ளிட்ட கிரில் வேலைகளுக்கு அடிக்கடி காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் வழக்கமாக செய்து தருபவர்கள் தாமதப்படுத்த, நான் எனது மைத்துனர் வேலைபார்த்த ஒரு நிறுவனத்தில் விசாரித்தேன். அப்போதுதான் இந்த தொழிலில் உள்ள லாபம், வாய்ப்புகள் போன்றவற்றை தெரிந்து கொண்டேன்.

கொத்தனார் வேலையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொத்தனாராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் இது இன்ஜினீயர்கள் கையில் உள்ள தொழில். ஆனால் கட்டுமான துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது போல எஸ்எஸ் கிரில் வேலைகளைத் தொடங்கினால் நமக்கான சொந்த தொழிலாகவும், கவுரவமாகவும் இருக்கும் என யோசித்து, எனது மைத்துனரிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவருக்கு அந்த தொழிலில் அனுபவம் இருந்தது. எனக்கு கட்டுமான நிறுவனங்களில் ஆர்டர் எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நான் வேலைபார்த்த பில்டரும் உற்சாகப் படுத்த, இரண்டுபேரும் சேர்ந்து 80 ஆயிரம் முதலீட்டில் தொடங்கினோம்.

ஆனால் முதல் இரண்டு ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டோம். சிறிய முதலீடு தான் என்பதால் பெரிய வாய்ப்புகளையும் பிடிக்க முடியவில்லை. தவிர வயதிலும், அனுபவத்திலும் நாங்கள் இளையவர் கள் என்பதாலும் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அதனால் பிறரது ஆர்டர்களுக்கு செய்து கொடுத்தோம். சிறிய ஆர்டர்களில் வரும் வருமானத்திலிருந்து செலவுகள் எதையும் செய்யாமல் ஒவ் வொரு இயந்திரமாக வாங்கி சேர்த்தோம். ஞாயிற்றுகிழமைகளில்கூட தொடர்ச்சி யாக வேலை செய்வோம். மாதச் சம்பளத் துக்கு வேலை செய்வதாக நினைத்து 5,000 ரூபாய் மட்டும் சம்பளமாக எடுத்துக் கொள்வோம். வேலைக்கு போனால்கூட நல்ல சம்பளம் கிடைக்கும் என வீட்டில் சொல்லத்தான் செய்தனர். ஆனால் எங்க ளது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கும் நம்பிக்கை வந்தது.

ஆரம்பத்தில் கட்டுமான நிறுவனங் களை நம்பித்தான் தொழிலை தொடங்கி னோம் என்றாலும், பல துறைகளுக்கும் தேவையானதை செய்து கொடுத்தோம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான விடுதி கட்டில்கள், வகுப் பறைக் கட்டில்கள், மருத்துவமனையில் பயன்படுத்தும் டிராலிகள் போன்றவற்றை யும் செய்து கொடுத்தோம்.

நாங்கள் பெரிய நிறுவனமாக இல்லாத தால் வாய்ப்புகளை இழந்தது ஒருபக்கம் என்றால், முறையான மார்க்கெட்டிங் தெரி யாததாலும் வாய்ப்புகளை இழந்தோம். சில நிறுவனங்களில் எங்களது தோற் றத்தை பார்த்தே உள்ளே விட மாட்டார் கள். சிலரோ எங்களிடம் மாதிரி வடி வமைப்பு கொடுங்கள் என வாங்கிக் கொண்டு ஆர்டர்களை வேறிடத்தில் கொடுத்து விடுவார்கள்.

இதை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் வேலை பார்ப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, நிர்வாக திறமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என முயற்சிகள் எடுத்தோம். அதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்று ஓரளவு ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டேன். இப்படி ஒவ்வொன்றையும் எங்களது அனுபவங்களே எங்களுக்கு கற்றுக் கொடுத்தன. தொழிலில் ஓரளவு நல்ல இடத்தை அடைந்ததும் மைத்துனர் தனியாக பிரிந்து சென்று தொழில் நடத்துகிறார். இப்போது ஐந்து பேருக்கு நிரந்தர வேலை கொடுத்துள்ளேன். பல வேலைகளை வெளியிலும் ஆர்டர்கள் அடிப்படையில் கொடுத்து வாங்கு கிறேன். இப்போது மிகப் பெரிய ஆர்டர் களையும் செய்யக்கூடிய அளவுக்கான இயந்திரங்களை சேர்த்துவிட்டோம்.

அடுத்த இலக்காக சொந்த இடத்திற்கு நிறுவனத்தை மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் உள்ளேன். நான் அடுத்த இலக்கு வைத்தாலும், இந்த இடத்துக்கு வந்திருப்பதுகூட சிறந்த வளர்ச்சியாகத் தான் நினைக்கிறேன். ஏனென்றால் என் னோடு கொத்தானார் வேலை பார்த்த நண் பர்களுக்கு சிறந்த திறமை இருந்தாலும், இப்போதும் அடுத்த நாள் வேலை எங்கு, யாருக்கு என தெரியாமல் உள்ளனர். எனக்கோ சொந்த நிறுவனம், சொந்த அடையாளம் உள்ளது என்று முடித்தார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x