Last Updated : 22 May, 2017 09:25 AM

 

Published : 22 May 2017 09:25 AM
Last Updated : 22 May 2017 09:25 AM

சபாஷ் சாணக்கியா: வளர்ப்பு அப்படி..!

ண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றி ருந்தேன்.

கோடை விடுமுறைக்கு அவரது பேரனும் பேத்தியும் அங்கு வந்திருந்தனர். 5 வயதும், 10 வயதும்.ஒரே லூட்டி தான்!

நண்பருக்கு அவர்கள் இருவரையும் ரொம்பப் பிடிக்கும்; ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! அதனால் ஏற்பாடெல்லாம் தடபுடலாய்ச் செய்திருந்தார். புதிதாய் ரோடு போடாத குறை தான்!

மாலை நேரம். நான் அமர்ந்திருந்த பொழுது ‘குடிக்க என்ன வேண்டும், சாக்லெட் காம்ப்ளானா, கேசர் பிஸ்தா காம்ப்பளானா, பூஸ்டா ? மூன்றும் புதிதாய் வாங்கியிருக்கிறேன்’ என்று நண்பர் கேட்டார்.

நான் பதில் சொல்லும் முன்பே அவரது பேத்தி ஓடி வந்தாள். ‘தாத்தா, ப்ளீஸ் ஒரு டப்பா உடைத்திருக்கும் பொழுது இன்னொன்றை உடைக்காதீர்கள்’ என்று வேகமாகச் சொன்னாள்.

‘அப்படியா, ஏனம்மா' என்று நான் கேட்ட பொழுது, ‘எங்கள் வீட்டில் எனக்கும் தம்பிக்கும் பிடித்தது. வேறு வேறு ஆக இருந்தால் கூட, நாங்கள் முதலில் ஒருவருக்குப் பிடித்த டப்பாவைக் காலி செய்த பின் தான் அடுத்தவருக்குப் பிடித்ததை திறக்கவே விடுவார் அப்பா' என்றாள்!

அந்தக் சிறுமியின் அப்பாவுக்கு பணம் ஒரு பிரச்சினையே இல்லை. இருந்தும் எதையும் வீணடிக்கக் கூடாது என்கிற எண்ணம் இருக்கிறதே எனப் பாராட்டினேன்.

உடனே அச்சிறுமி ‘அது மட்டுமில்லை அங்கிள், அப்பா என்ன சொல்வாங்கன்னா, எல்லா சமயத்திலும் எல்லாம் கிடைத்து விடாது என்று புரிஞ்சுக்கணும், எப்பவும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளணும் என்று சொல்லியிருக்காங்க' என்றாள்!

எவ்வளவு பெரிய உண்மையை இந்தச் சிறுமி எவ்வளவு சாதாரணமாகச் சொல்லி விட்டாள்? பின்னே என்னங்க? என்ன கேட்டாலும் கிடைக்கும் எனும் எண்ணத்தைக் குழந்தைகள் மனதில் வளர விடலாமா? விபரம் புரியத் தொடங்கியவுடன் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

எனது மற்றுமொரு நண்பர். நூற்பாலை அதிபர். 15 வயதில் ஒரு மகள். பள்ளி விட்டு வந்ததும் பாக்கெட் மணி கேட்பாள்.

தேவைக்கேற்றபடி கொடுப்பார். ஆனால் ஒரு விதி. அதாவது அன்று கடையில் நடந்த விற்பனைக்கான பில்களை, வவுச்சர்களை, செலவுக்கான ரசீதுகளை முறையாக அடுக்கி பைல் செய்து வைக்க வேண்டும்!

இந்த நடைமுறையால் கடையின் வரவு செலவுகளை விற்பனை விபரங்களை அந்தப் பெண் விளையாட்டுப் போலத் தெரிந்து கொண்டாள்! அத்துடன் உழைப்பே ஊதியம் தரும் என்பது மனதில் ஆழ மாய்ப் பதிந்து விட்டது! இன்று மொத்த நிர்வாகமும் அவள் கையில்!

‘நம்மால் நம் குழந்தைகளுக்கு எதிர்காலத்தை தயார் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் எதிர் காலத்திற்கு நம் குழந்தைகளைத் தயார் செய்ய முடியுமே’ என்பார் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்!

இதற்கு எதிர்மறையான அனுபவமும் எனக்கு உண்டு. ஒரு நண்பர்.பெரும் தொழிலதிபர். மகனை வெளிநாட்டில் படிக்க வைத்தார். மகனும் நிறுவனத்தில் பல புது வியாபார யுக்திகளைக் கொண்டு வந்தார். ஆனால் நண்பருக்கு பொறுப்பை மகனிடம் ஒப்படைக்க மனமில்லை! மகனின் நிர்வாகத்தில் தலையிட்டுக் கொண்டே இருப்பார். மகன் அவரை மதிக்கவும் யோசனை கேட்கவும் தயார். ஆனால் வேலை செய்ய விடாமல் அடிக்கடி தொந்தரவு செய்ததால் மன மொடிந்து போனார். விற்பனையும் லாபமும் சரிந்தன. வங்கியில் கடன் அதிகமாகி நிறுவனத்தை மூடி விட்டது பின்கதை!

அண்ணே, பெற்ற பிள்ளைகளைச் சரியாக வளர்ப்பது என்பது எல்லோருக்கும் உள்ள கடமை! ஆனால் பலருக்கும் அது பாசத்திற்கும் கட்டுப்பாட்டிற்குமான போராட்டம்!

செல்லம் கொடுக்க வேண்டிய வயது தாண்டிய பின் கண்டிப்புக்கு வந்து விட வேண்டுமில்லையா?

அத்துடன் மகனுக்கோ மகளுக்கோ உலக அனுபவம் வந்த பின் இப்படித்தான் செய்ய வேண்டும் என நிகழ்காலத்திற்கு ஒவ்வாத பழைய அணுகு முறைகளைத் திணிக்கக் கூடாதில்லையா?

நாட்டுக்கே வழிகாட்டும் பல தலைவர்கள் இதில் கோட்டை விட்டு விடுகிறார்களே! பெரிய பெரிய தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி ஆள்பவர்கள் இதில் கவனக் குறைவாக இருக்கலாமோ?

மனிதவள மேலாண்மை எல்லாம் அப்புறமுங்க! முதல்ல செய்ய வேண்டியது தத்தம் பிள்ளைகளின் மேலாண்மைங்க!

‘உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள். 5-15 வயதில் தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள்.15 வயதிற்கு மேல் நண்பனாக நடத்துங்கள்' என்கிறார் சாணக்கியர்!

சோம வீரப்பன், somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x